• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 6

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
426
7
43
india
பண்டாசுரனை மாயையால் மயக்கி, மகா யாகத்தில் தேவர்கள் ஈடுபட்டிருப்பதை அசுரகுரு சுக்ராச்சாரியார் கண்டார். இது விஷ்ணுவின் மாயை என்பதை பண்டனுக்கு விளக்கி எடுத்துரைத்தார். உடனே சுதாரித்துக் கொண்ட பண்டன், தன்னுடைய தவறை எண்ணி நாணம் கொண்டான். உடனே மீண்டும் தேவர்களை தாக்கத் தன் படைகளுடன் புறப்பட்டான்.



தன்னை நாடி ஓர் அடி எடுத்து வைத்து விட்டாலும், ரட்சிக்க ஓடி வந்து விடும் அம்பிகை, தேவர்களைக் காப்பாற்றாமல் விட்டு விடுவாளா என்ன ?



பண்டாசுரனும் அவன் படையும் தேவர்களை நெருங்க முடியாவண்ணம் அவர்களைச் சுற்றி, ஒரு மாயக் கோட்டையை உண்டு பண்ணினாள் தேவி. எப்படி முயன்றும் பண்டனும் அவன் படைகளும் உள்ளே நுழைய முடியாத நிலையில் ஆத்திரத்துடன் பண்டாசுரன், தனது அரண்மனைக்குத் திரும்பினான்.



தேவர்களின் யாகம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஆனால் தேவி தோன்றவில்லை. பண்டாசுரனுடன் அவன் படைகளும் தங்களைத் தாக்க வந்ததை அவர்கள் அறிந்தார்கள். அம்பிகை சீக்கிரத்தில் தோன்ற வேண்டும் என்று எண்ணி ஒவ்வொருவரும் தங்கள் தேகங்களின் பகுதிகளை அரிந்து யாகத்தில் ஆகுதியாக அர்ப்பணம் செய்தனர்.



தேவி பராசக்தி இன்னும் தோன்றாததால் சிவபெருமான் தேவர்களை நோக்கி, "தேவர்களே இனியும் நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. பராசக்தியைப் பரிபூரணமாகச் சரணடைவோம். இந்த மகா யாகத்தில் நம்மையே பூர்ணாஹுதியாக அர்ப்பணிப்போம். அன்னை மீண்டும் நம்மை உயிர்ப்பித்தால் நம் சாம்ராஜ்யத்தை ஆளுவோம் அல்லது அவளுடனேயே ஒன்றிவிடும் மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைவோம்” என்று கூறினார்.



யாகத் தலைவனின் பேச்சைக் கேட்ட அமரர்கள் அனைவரும் பரிபூரண சரணாகதி நிலையை அடைந்து ஒவ்வொருவராக தங்களையே யாகத்தில் அர்ப்பணித்தார்கள்.

பரிபூரண சரணாகதி! அதைத்தானே அம்பிகையும் எதிர்பார்க்கிறாள் !



அடுத்த கணமே தோன்றிவிட்டாள் ஸ்ரீமாதா லலிதா பரமேஸ்வரி. யாக அக்னியிலிருந்து ஒரு ஜோதிப் பிழம்பு தோன்றியது. அருட்பெரும் ஜோதியாக கோடி சூரியப் பிரகாசமும், கோடி சந்திர தன்மையும், ஒருங்கே கொண்டு, பேரழகுடன் சிதாக்னியிலிருந்து வெளிப்பட்டது அம்பாளின் உருவம். இவ்வாறு தோன்றிய அம்பிகை, யாகத்தில் தங்களையே அர்ப்பணித்து விட்ட தேவர்கள் ஒவ்வொருவரையும் ஒளி வீசும் தோற்றத்துடன் மீண்டும் உயிர்ப்பித்தாள். அனைவரையும் சிருஷ்டித்ததால் அம்பிகை "ஜகஜ்ஜனனி" என்ற பெயரைப் பெற்றாள்.



மீண்டும் உயிர்பெற்ற தேவர்கள் அம்பிகையைத் தங்கள் முன்னிலையில் எழுந்தருள வேண்டி உளமுருகப் பிரார்த்தனை செய்தனர். உடனே அம்பிகை, மூவுலகையும் வெல்லும் அழகுடன், உதயகால சூரியனைப் போல் சிவந்த வர்ணத்துடன் சிருங்கார ரசத்தின் பூர்ண வடிவினளாக, சர்வாலங்கார பூஷிதையாக, பேரழகுடன் பதினாறு வயதான கன்னிப்பெண்ணாக தோன்றினாள்.



அவளுடைய விழிகள், கருணை என்னும் அமுதத்தைப் பொழிந்தன, நான்கு கரங்களில் பாசம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணம் இவைகளை ஏந்திக் கொண்டு காட்சி தந்தாள். அமரர்களைக் கருணா கடாக்ஷத்துடன் கனிவுடன் நோக்கினாள். அன்னையால் புத்துயிர் பெற்ற தேவர்களுக்கு அவள் தரிசனமே பேரானந்தத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அம்பிகை தன் மதுர மொழிகளால் தேவர்களைப் பார்த்து, "வேண்டும் வரத்தினைக் கேளுங்கள் "என்றாள்.



தேவர்களும், “அன்னையே! பண்டாசுரனால் சொல்லொணாத் துயர் அடைந்துவிட்டோம். எங்கள் உடலில் உயிர் மட்டுமே இருக்கிறது, தாயே, நீயே இனி எங்களை ரட்சித்துக் காக்க வேண்டும் ” என்று தங்கள் பரிதாபமான நிலையை அம்பிகையிடம் எடுத்துரைத்தான் இந்திரன்.



அதற்கு அம்பாள், “ கவலை கொள்ள வேண்டாம், பண்டாசுரனை நானே அழிப்பேன், மூவுலகங்களையும் மீண்டும் தேவர்களுக்கு அளிப்பேன்” என்றாள். பேரானந்தம் அடைந்த தேவர்கள் அம்பிகையை, “ லலிதா ஸ்தவ ராஜம் ” என்ற ஸ்தோத்திரத்தால் துதித்துக் கொண்டாடினார்கள்



தேவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அங்கு தோன்றியதால் அம்பிகை, “காமேஸ்வரி” என்ற பெயரைப் பெற்றாள். உலகெல்லாம் ஆளும் அவளை முறைப்படி தங்களுக்கு மகாராணியாக முடிசூட்ட எண்ணம் கொண்டார்கள் தேவர்கள். ராணியாக முடிசூட்ட மேரு மலையின் நடுவே தேவிக்கு என்று ஒரு தலைநகரத்தை உருவாக்கும்படி தேவசிற்பியான விஸ்வகர்மாவிற்கு பிரம்மதேவன் உத்தரவிட்டார். பற்பல கோபுரங்களும், ராஜ வீதிகளும், மாட மாளிகைகளும் கொண்ட ஸ்ரீபுரம் என்ற நகரத்தை விஸ்வகர்மா நொடிப்பொழுதில் உருவாக்கினார். தேவாதி தேவர்களும் அன்னையின் அருகிலேயே இருந்து எப்பொழுதும் அவளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க விரும்பியதால், தங்களுக்காக சில இருப்பிடங்களை அந்த நகரத்தின் உள்ளேயே நிர்மாணித்துக் கொண்டனர். ராஜ க்ருஹம் உருவாகிவிட்டது. ஆனால் ராஜ்ய பாரத்தைத் தம்பதிகளாக ஏற்க வேண்டுமல்லவா ?



பிரம்மா இவ்வாறு யோசித்தார். சிருங்கார ரச சம்பூர்ண வடிவான இந்த திரிபுரசுந்தரிக்கு மங்கள நாயகனான ஈசனைத் தவிர வேறு யார் இருக்க முடியும் ? காமேச்வரிக்கு ஏற்ற காமேச்வரன், ஈசனே என்று முடிவு செய்தார்.



ஆனால் அவரோ விரக்தனாக, மயான சாம்பலை பூசி, பாம்பை ஆரமாகப் பூண்டு, புலித்தோலை உடுத்து, முண்ட மாலை தரித்து, சடைமுடி கொண்டு, சூலமும் கபாலமும் ஏந்தியபடி இயங்கும் அவரை மங்கள வடிவினளான தேவி ஏற்பாளா? என்று எண்ணி, சிவபெருமானை மங்கள வடிவுடன் எழுந்தருளுமாறு மனதுக்குள் பிரார்த்தனை செய்தார். உடனே மகேஸ்வரனும், அதி சுந்தரியான பரமேஸ்வரிக்கு ஈடுகொடுக்கும் வகையில், மேனியில் களபச் சந்தனம் மணக்க, நவ ரத்ன கேயூர குண்டலங்களுடன், திவ்யாம்பரதனாக ஆடை அணிந்து மலர்மாலை சூடி, பொற் கிரீடம் அணிந்து ஆவிர்பவித்தார்.



அம்பிகைக்குப் பொருத்தமான நாயகனாக அவள் கைகளில் ஏந்திய கரும்பு வில், பஞ்ச பாணம், பாசம், அங்குசம் இவைகளைத் தானும் ஏந்திப் பேரழகனாகத் தோன்றினார். பிரம்மாவின் விருப்பத்திற்கேற்ப தோன்றியதால் காமேஸ்வரன் என்று அழைக்கப்பட்டார். மாப்பிள்ளையும் வந்தாகிவிட்டது. சிவமும் சக்தியும் கூடிட அதுவே சுபமுகூர்த்தம் ஆக இருந்ததினால் வேதாகம முறையில் திருமணத்தை நடத்தி வைக்கும் பாக்கியத்தைப் பெற பிரம்மா துடிதுடித்தார்.



ஆதியும் அந்தமும் இல்லாத அவளைத் தாரை வார்த்துக் கொடுப்பது யார்? அவள்தான் கோவிந்த ரூபிணியும் ஆயிற்றே !.

சகோதரனான நாரணன் சகல தேவ ரிஷி கந்தர்வர் முன்னிலையில் ஆகம விதிப்படி அம்பிகையைத் தாரை வார்த்து காமேஸ்வரனிடம் ஒப்படைத்தார். காமேஸ்வரன் மாங்கல்ய சூத்திரத்தை அவள் கழுத்தில் கட்ட, மஹாகாமேஷ மகிஷியானாள் மஹா திரிபுரசுந்தரி.



திவ்ய தம்பதியருக்கு தேவர்கள் தங்களாலான பரிசுப் பொருட்களை காணிக்கைகளாக அளித்தார்கள்.



பிரம்மா கரும்பு வில்லைக் கொடுத்தார். நாரணன் அதற்கு மலர்க்கணைகளை அளித்தார். வருணன் நாக பாசத்தையும் விஸ்வகர்மா அங்குசத்தையும் அளித்தார்கள். அக்னிதேவன் ஜொலிக்கும் கிரீடத்தையும் சூரிய சந்திரர்கள் குண்டலங்களையும் தந்தார்கள். ரத்னாகரன் ஆன கடலரசன், ரத்ன ஆபரணங்களை அளித்தான். பிரேமை என்னும் மது நிரம்பிய கிண்ணத்தை தம்பதிகளுக்கு தேவேந்திரன் சமர்ப்பித்தான். குபேரன் சிந்தாமணியிலான மாலை கொடுக்க நாராயணன் வெண்கொற்றக்குடை கொடுத்தார். உத்தம நதிகளான கங்கையும்,

யமுனையும் தங்கள் குளிர்காற்றைச் சாமரமாக்கி வீசினார்கள். வசுக்கள் எண்மர், ஆதித்யர் பன்னிருவர், ருத்ரர் பதினொருவர், என முப்பத்து முக்கோடி தேவர்களும் தங்கள் ஆயுதங்களை திவ்ய தம்பதிகள் காலடியில் வைத்துப் பணிந்து நின்றார்கள்.



ராஜராஜேஸ்வரியான அம்பிகைக்கு ரத கஜ துரகங்கள் கோடிக்கணக்கில் அணிவகுத்து நின்றன. பிரம்மா, சிவசக்தி தம்பதியருக்கு குசுமாகரம் என்ற திவ்ய விமானத்தை அளித்தார். தேவமாதர் எல்லாம் சுற்றி நின்று பூச்சொரிய, வீணை, வேணு, மிருதங்கம் ஆகிய வாத்தியங்கள் ஒலிக்க, அப்சரஸ்கள் நாட்டியம் ஆட காமேஸ்வர காமேஸ்வரி தம்பதிகள் ராஜ வீதியில் வலம் வந்து தரிசனம் தந்தார்கள்.



.அன்னையின் கடாக்ஷம் அங்கே குழுமியிருந்த ஒவ்வொருவர் மீதும் படர்ந்து கொண்டு வர, அவரவர் இச்சைகள் எல்லாம் உடனுக்குடன் நிறைவேறின. இந்தப் பேரதிசயத்தை கண்ட பிரம்மா "காமாக்ஷீ, காமதாயினி ” என்றெல்லாம் பலவாறு போற்றித் துதித்தார். இப்படியாக காமேஸ்வர, காமேஸ்வரி திருமணம் கோலாகலமான வைபவமாக நிறைவேறியது.



காமேஸ்வரர் மற்றும் காமேஸ்வரி திருமணம் நடந்ததை அடுத்து, அவர்கள் இருவருக்கும் சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து வைத்தார் பிரம்ம தேவர்.



நாரதரின் வேண்டுதலை ஏற்று தேவி, அனைவரையும் அவரவர் உலகிற்கு அனுப்பி விட்டு, போருக்கு ஆயத்தமானாள்.

இதை "தேவர்ஷிகண சங்காத ஸ்தூயமானாத்ம வைபவா" என்கிறது லலிதா சகஸ்ரநாமம். திரிலோக கண்டகனாகிய பண்டனைக் கொல்ல ஜகன்மாதாவான ஸ்ரீலலிதா தேவி கிளம்பினாள்.



சப்த சமுத்திரங்களும் மத்தளங்களாகி வானளாவ கோஷித்தன. அம்பிகை தனக்கான சக்தி சேனையைத் தானே உருவாக்கினாள். கோடிக்கணக்கான சக்திகள் கணப்பொழுதில் தோன்றி நின்றார்கள். சக்தி தத்துவத்திலேயே உலகு இயங்குகிறது என்பதை உணர்த்த பெண்களின் சக்தி சேனையை கொடிய அசுரப் படைகளுக்கு எதிராக நிறுத்தினாள்.



வானமே இடிந்து விழும்படி பலகோடி யானைகள் பிளிறும் ஒலி லலிதாம்பிகையின் கை அங்குசத்திலிருந்து "சம்பத்கரி தேவி" தன் பரிவாரங்களுடன் தோன்றினாள். அம்பிகையின் யானைப் படைக்கு பொறுப்பேற்று சம்பத்கரி தேவி தன்னுடைய பரிவாரங்களுடன் தோன்றினாள். காண்போர் வியக்கும் வண்ணம் "ரண கோலாகலம்" என்னும் தனது யானையின்மேல் ஏறி அமர்ந்தாள். லட்சக்கணக்கான யானைகளைக் கொண்ட படை தொடர போர்க்களத்தில் இறங்கினாள்.

(சம்பத்கரீ சமாரூட ஸிந்தூர வ்ரஜஸேவிதா – லலிதா சகஸ்ரநாமம்)



ஸ்ரீலலிதா தேவியின் பாசத்திலிருந்து தோன்றிய அஸ்வாரூடா தேவி, “அபராஜிதம்” என்ற குதிரை மீதேறி போர்க்கோலத்துடன் புறப்பட்டாள். அவளைத் தொடர்ந்து, வநாயுஜம், காம்போஜம், பாரசீகம் முதலிய குதிரைப் படைகள் பின்சென்றன. அஸ்வாரூடா தேவி தனது கரங்களில் பாசம், அங்குசம், பிரம்பு, கடிவாளம் ஆகியவற்றை ஏந்தி, குதிரைகளை நர்த்தனம் செய்வித்துக் கொண்டே சென்றாள்.

(அஸ்வாரூடா திஷ்டிதாஸ்வ கோடி கோடி பிராவ்ருதா – லலிதா சஹஸ்ரநாமம்)



அதைத் தொடர்ந்து ஸ்ரீலலிதா தேவி, அதி தீவிரமாக ஹூங்காரம் செய்தாள். அதிலிருந்து 64,00,00,000 யோகினி கணங்களும், 64,00,00,000 பைரவர்களும் தோன்றினர். எண்ணற்ற வீரர்களைக் கொண்ட சக்தி சேனையும் தோன்றியது.



பின்னர் ஸ்ரீலலிதை, தனது சக்ர ராஜ ரதத்திலிருந்து, கேய சக்கரம் மற்றும் கிரி சக்கரமெனும் இரண்டு உத்தம ரதங்களை தோற்றுவித்து, அதனைத் தனது மந்திரிணியான சியாமளைக்கும், சேனாதிபதியான தண்டநாதைக்கும் அளித்தாள்.



(சக்ரராஜ ரதாரூடா, கேயசக்ர ரதாரூட மந்திரிணி பரிஸேவிதா, கிரிசக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா என்கிறது லலிதா சஹஸ்ரநாமம்.



புவனா சந்திரசேகரன்.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 6
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.