• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

எனது சொந்தம் நீ - 11

Annapurani

Member
Mar 27, 2025
38
0
8
11.





அன்று வெள்ளிக்கிழமை!

ஹரி மிகவும் பரபரப்பாயிருந்தான்! தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று தன்னுடைய கிளை அலுவலகங்களில் உயர்ந்த தொழில் நுட்பத்துடன் கூடிய கணிணிகளும் அதன் வேகமான செயல்பாட்டுக்கான பாகங்கள் வாங்குவது சம்மந்தமாக தனியார் கணிப்பொறி தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளி (tender notice) கோரி அழைப்பு விடுத்திருந்தது!

அன்று மதியம் 2.00மணிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்!

அலுவலக விஷயமாயிருந்தாலும் ஒப்பந்தப் புள்ளியின் ரகசியம் காப்பதற்காக அவனுடைய காரியதரிசி நிஷாவும் மற்றும் அவனுடைய அலுவலக மேனேஜர் நவீனும் அவன் வீட்டுக்கு வந்திருந்தனர்!

மூவரும் அவனுடைய அறையில் மும்முரமான ஆலோசனையுடன் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அபி அவர்கள் குடிப்பதற்கு ஏதாவது கொண்டு செல்லலாம் என்றெண்ணி அவன் அறையைத் தட்டினாள்!

"என்ன அபி?" எரிச்சலாய் கேட்டான்.

"காபி தண்ணி எதும் வேணுமா மாமா?" என்று அவள் கேட்க, நவீனும் நிஷாவும், சாதாரணமாய் சேலையணிந்து, படிய வாரிய தலையும் மடித்து ரிப்பன் கட்டிய பின்னலுமாய் கிராமத்துப் பெண்ணாய் வந்து நின்ற அபியை ஏளனமாய்ப் பார்த்தனர்.

ஹரி அவர்களின் ஏளனப் பார்வையை உணர்ந்து கொண்டாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

"கொண்டு வா!" என்று விட்டுத் தன் வேலையில் கவனத்தைத் திருப்பினான்.

காபி கலந்து எடுத்துச் செல்லும் அபியை நிறுத்திய நந்தினி,

"என்ன அபி இதெல்லாம்.... நீ படிச்ச படிப்புக்கு...."

"ஷ்... மெதுவா பேசுங்க அத்த! பொன்னம்மா இருக்காங்க!" தன் மாமியாரை சத்தமில்லாமல் எச்சரித்தாள்.

"போ அபி... நீ பண்றது... எனக்கு சுத்தமா பிடிக்கல.... நீ இங்க படிக்காத வேஷம் போட்டுகிட்டு, வேலக்காரி கிட்டல்லாம் அவமானப்பட்டுகிட்டு... அவளோட வேலையெல்லாம் நீ பாத்துகிட்டிருக்க...."

"ம்ச்... அத்த.... இப்டில்லாம் பேசாதீங்க.... இது நம்ம வீடு... நம்ம வீட்ல நா வேல பண்றேன்! அவ்ளோதான்..."

"அதில்ல அபிம்மா....."

"காபி ஆறுது.... நா குடுத்துட்டு வரேன்...... நம்ம அப்றமா பேசலாம்......" என்று கூறிக் கொண்டே அபி காபி ட்ரேயை எடுத்துக் கொண்டு மாடி ஏறினாள்.

காபி எடுத்து வந்த அபியை ஹரி தன் அலுவலர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

"ஷீ இஸ் மை வைஃப் அபிநயா!" என்று அவர்களைப் பார்த்து சொல்லிவிட்டு, அபியிடம் அவர்களை அறிமுகம் செய்து வைத்தான்!

"அபி! இவங்க என் பிஏ நிஷா! இவரு நம்ம கம்பெனி மேனேஜர் நவீன்!"

அவர்கள் இவளைப் பார்த்து வேறு வழியின்றி மரியாதையாய் தலையசைக்க, இவள் அவர்களைப் பார்த்து,

"வணக்கமுங்க! இந்தாங்க காபி எடுத்துகுங்க!" என்றுவிட்டு காபி கோப்பையை அவர்களிடம் நீட்டினாள்!

ஹரியும் நவீனும் எடுத்துக் கொண்டதும் அபி நிஷாவிடம் நீட்ட, நிஷா ஹரியிடம் பேசிக் கொண்டே அதை எடுத்தாள்! அவள் எடுத்துக் கொண்டு விட்டாள் என நினைத்து அபி ட்ரேயுடன் நகர எத்தனிக்க, நிஷாவின் கையில் ட்ரே இடித்துவிட, அவள் கையிலிருந்த காபி மொத்தமும் டீப்பாயின் மேலிந்த முக்கியமான காகிதங்களின் மேல் கொட்டியது! இவ்வளவு நேரம் செய்து கொண்டிருந்த வேலை மொத்தமும் வீணாகிப் போனது!

அபி அதிர்ந்து போனாள்!

ஹரிக்கு வந்ததே கோபம்!

"இடியட்.... அறிவிருக்கா...... இப்ப யார் உன்ன இங்க காபி கொண்டு வர சொன்னாங்க... அம்பது லட்ச ரூபா டெண்டர்... இப்டி அநியாயமா வீணா போச்சு.. இப்ப நா எப்டி இத சப்மிட் பண்றது.... இனிமே இத மறுபடியும் டைப் பண்ணி... சப்போர்டிங் டாகுமென்ட்ஸ் ரெடி பண்ணி.... எதாவது சொன்னா..... மாமா... நா கத்துக்கறேன் மாமான்னு மட்டும் சொல்லத் தெரியும்.... ஆனா எதையும் உருப்படியா கத்துக்கறதில்ல..... " என்று ஆரம்பித்து ஆங்கிலத்தில் கத்தத் தொடங்கினான்.

சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த நந்தினிக்கு என்ன செய்வதென்று புரியாமல் தர்ம சங்கடத்தோடு அபியைப் பார்த்தாள்!

அபிக்கு உண்மையாகவே இதன் மதிப்பு மிக நன்றாகத் தெரியும்! கட்டாயம் இதை அவள் வேண்டுமென்றே செய்திருக்க மாட்டாள் என்பதை நந்தினி நன்கு உணர்ந்திருந்தாள்!

ஆனாலும் எதுவும் சொல்லத் தோன்றாமல் அபியின் அருகில் சென்றாள்!

அபி தான் செய்த தவறை நினைத்து அதிர்ச்சியில் உறைந்து நின்றிருக்க, ஹரி, நிஷாவையும் நவீனையும் அங்கிருந்து போகச் சொல்லிவிட்டான்.

"சார்.... வந்து... நா இத திரும்ப ப்ரிண்ட் எடுத்து....." நவீன் இழுத்தான்!

"முடிஞ்சி போச்சி! கௌம்புங்க நவீன்!" கடுகடுவென்று கூறினான்!

நிஷாவும் நவீனும் அங்கிருந்து வேகமாகக் கிளம்பினார்கள்!

எங்கே இவன் இருக்கும் கோபத்தில் அபியை அடித்துவிடுவானோ என்று நந்தினி ஹரியைப் பார்க்க, அவனோ அபியையே பார்த்தான்!

அபி சிலையாகி நின்றிருக்க, நந்தினி அபியை மெதுவாகத் தொட்டாள்.

அபி சுயவுணர்வுக்கு வந்து தன் கணவனை கலக்கத்துடன் பார்த்தாள்!

"ஏன் இன்னும் என் மூஞ்சிய பாத்துட்டு நிக்கற.... போ.... போய் வேற வேல எதுனா இருந்தா பாரு...." என்று கோபமாகக் கூறிவிட்டு தன் மடிக்கணிணியை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பிப் போய் விட்டான்!

"சாரி.... அத்த.... நா இத வேணும்னு செய்யல.... ஆக்சுயலி, இது எப்டி நடந்துச்சின்னு தெரியல அத்த...." என்று வேதனையோடு கூறினாள்.

"இட்ஸ் ஓகேம்மா.... நீ போ... போய் ரெஸ்ட் எடு! நா இத சுத்தம் பண்ணச் சொல்றேன்!"

"வேணாம் அத்த.... நா பாத்துக்கறேன்!" என்று கூறி அவளே அந்த இடத்தை சுத்தம் செய்தாள்!

ஹரிக்கு அபியின் மேல் கோபம் வந்ததே ஒழிய அதை அவளிடம் அவன் காட்டவேயில்லை! அப்போதும் சரி, அன்று மாலையும் சரி!

அபிக்குதான் மனவுளைச்சலாக இருந்து கொண்டேயிருந்தது!

மறுநாள் நந்தினிக்கு கல்லூரி விடுமுறை! அதனால் அவள் வீட்டிலிருந்தாள்! பொன்னம்மாளும் அவள் கணவன் முத்துவும் அன்று விடியற்காலையிலேயே தங்கள் சொந்த வேலையாக விடுப்பில் சென்றவர்கள் மறுநாள் காலைதான் வீடு திரும்புவர்! ஹரியும் தன் அலுவலகம் கிளம்பிவிட்டான்!

எனவே அபியும் நந்தினியும் மட்டும் வீட்டிலிருந்தனர்.

"அத்த! அப்டி இப்டின்னு இருபது நாள் ஓடிருச்சு.... இன்னும் பத்து நாள்தான் பாக்கி..... என் லீவும் முடியப் போகுது...."

"ஆமாம்மா.... நானும் இததான் யோசிச்சுகிட்டிருக்கேன்..... நா இன்னிக்கு அவன்கிட்ட பேசறேன்....." என்றாள் நந்தினி!

அவனிடம் உண்மையைச் சொல்வதற்கு அபியும் நந்தினியும் ஒரு திட்டம் தீட்டினர்!

அன்று ஹரி தன் அலுவல் முடிந்து சீக்கிரமே வீடு வந்தான்!

அவன் சாப்பிட்டு முடித்து தன்னுடைய அறைக்குத் திரும்பும் போது அபியிடம் நந்தினி ஏதோ புத்தகத்தை எடுத்து வரும்படிக் கூற, தங்களுடைய திட்டப்படி அபி சென்று தவறான புத்தகத்தை எடுத்து வந்தாள்.

இதைப் பார்த்து நந்தினி அபியிடம் கோபமாக கத்துவது போல நடித்தாள்!

"ம்ச்.... ஏதாவது ஒண்ணு ஒழுங்கா செய்யறியா.... படிக்காத தற்குறி... எங்களுக்குன்னு வந்து வாய்ச்சிருக்கா பாரு.... நேத்தி அவனோட முக்கியமான ஆஃபீஸ் பேப்பர்ல காபிய கொட்டி நாசப்படுத்தின.... இன்னிக்கு எனக்கு வேற மாதிரி தொல்ல குடுக்கற...." என்று கோபமாகக் கத்துவது போல பேசினாள்!

"ஏன் அத்த கோவிக்கறீக..... இருங்க... நா சரியான புத்தகத்த எடுத்து தாரேன்....." என்று ஓடினாள்.

திரும்பவும் தவறான புத்தகம் எடுத்து வந்தவளை நந்தினி திட்டத் தொடங்க,

"ம்மா.... அவளுக்குதான் படிக்கத் தெரியாதுன்னு தெரியும்ல.... அப்றம் என்ன சும்மா அவள ஏதாவது சொல்லிகிட்டே இருக்கீங்க?" என்று தன் அன்னையிடம் கடிந்து கொண்டான் ஹரி!

"எல்லாம் உன்னாலதாண்டா.... படிக்காத பொண்ணுதான் வேணும்னு ஒத்தக் கால்ல நின்ன... இப்ப நம்மதானே அவஸ்த்த படறோம்...."

"இப்ப என்ன.... உங்களுக்கு புக் தானே வேணும்... இருங்க... நா போய் எடுத்துட்டு வரேன்..."

"இப்ப நீ வீட்ல இருக்க.... நீ எடுத்து தருவ.... மத்த நேரத்தில யார் எடுத்து தருவாங்க...."

"இவ்ளோ நாளா உங்களுக்கு யார் எடுத்து தந்தாங்க.... நீங்களேதானே போய் எடுத்துகிட்டீங்க.... இப்ப ஏன்.... இவள எதிர்பாக்கறீங்க...." பதில் கேள்வி கேட்டவனை வெற்றுப் பார்வை பார்த்தாள் நந்தினி!

தங்களின் திட்டம் தவறான பாதையில் போவது போல உணர்ந்தாள் அபி!

"ஆமாடா... ஒரு மாமியார்க்காரி இதக் கூட கேக்க கூடாதுதான்.... கரெக்ட்டுதான்...." என்று அவள் வேதனையோடு பதில் கூற,

"ஆமா... உங்க மாமியார் கூட இதே மாதிரிதான் என்னென்னமோ எதிர் பாத்தாங்க.... நீங்க கேட்டீங்களா...." என்று ஹரி கோபமாகச் சொன்னான்!

நந்தினியும் அபியும் அதிர்ந்தனர்!

"பாவம் பாட்டி.... உடம்பு சரியில்லாத நேரத்தில.... உங்கள எவ்ளோ எதிர் பாத்தாங்க.... நீங்க பக்கத்தில இருந்து பாத்துக்க சோம்பல் பட்டுகிட்டு.... கடன் இருக்கு... கடன் இருக்குன்னு..... ஒரே பல்லவிய பாடினீங்க.... வேலைக்கு போவேன்னு பிடிவாதம் பிடிச்சீங்க.... அதனால... இப்ப எனக்குதானே பெரிய நஷ்டம்.... உங்க பிடிவாதத்தால..... பாட்டியும் செத்துப் போனாங்க.... அப்பாவும் நம்மள விட்டுப் பிரிஞ்சாரு.....

அவரு எவ்ளோ மனம் வெறுத்திருந்தா.... இவ்ளோ நாளா நம்ம கிட்ட திரும்பி வராம இருப்பாரு.... யோசிச்சி பாருங்க....

உங்க பிடிவாதத்தால என் மேல கூட அவருக்கு பாசம் குறைஞ்சி போயிருச்சு......

அதான்... படிச்சிருந்தா தானே இவ உங்கள மாதிரி பிடிவாதம் பிடிப்பா.... படிச்சிருந்தாதானே இவளுக்கும் வேலைக்கு போகணும்னு தோணும்.... அதான் படிச்ச பொண்ணு வேணாம்னு நா முடிவு செஞ்சேன்...."

"என்னடா இப்டி பேசற.... நா என்ன வேணும்னேவா வேலைய விடாம இருந்தேன்.... என்னைய ஒரு சுயநலவாதி மாதிரி போர்ட்ரெய்ட் பண்றியேடா..."

"ஆமாம்மா.... நீங்க சுயநலவாதிதான்..... நூறு பர்சன்ட் சுயநலவாதிதான்..... நீங்க சுயநலமா இருந்து என் வாழ்க்கைய கெடுத்தீங்க.... அதான் நானும்..... என் வாழ்க்கை மட்டும் நல்லா இருந்தா போதும்னு சுயநலமா முடிவு பண்ணிகிட்டேன்.... படிக்காத பொண்ணு வேணும்னு பிடிவாதம் பிடிச்சி இவள கட்டிகிட்டேன்!

ஆனா என் சுயநலத்தில ஒரு பொதுநலனும் இருக்கு..... இவ படிக்காததால இவளால வேலைக்கு போக முடியாது.... அதனால இவ வீட்ல இருப்பா.... இவ வீட்ல இருந்து கடைசி காலத்தில உங்க தேவைகள இவ கவனிச்சுப்பா....

பாட்டி கஷ்டப்பட்ட மாதிரி நீங்க கடைசி காலத்தில கஷ்டப்படக் கூடாதுன்னுதான் நா இப்டி சுயநலமா இருந்தேன்.... அத மொதல்ல புரிஞ்சுக்கோங்க.... இனிமே இவ படிக்காதவன்னு மட்டம் தட்டாதீங்க! படிக்காத பொண்ணா இவ இருக்கறதாலதான் எனக்கு இவள பிடிச்சிருக்கு! இவ மட்டும் படிச்சவளா இருந்திருந்தா... என் ஆசைகளையும் கனவுகளையும் என் மனசிலயே போட்டு புதைச்சிருப்பேன்!"

"அப்டீன்னா.... இவ படிச்சவளா இருந்திருந்திருந்தா நீ இவள கல்யாணம் பண்ணிருக்க மாட்டியா?"

"ஆமா.... அததானே சொல்றேன்! இவ படிச்சவளா இருந்திருந்தா இவளுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகியிருக்காது!" என்று கூறிவிட்டு அவன் அங்கிருந்து எழுந்து தன் காரை எடுத்துக் கொண்டு வெளியே போனான்!

அபியும் நந்தினியும் அதிர்ச்சியின் எல்லைக்கே போனார்கள்!

இப்படிச் சொல்பவனிடம் எப்படி உண்மையை சொல்வது? என்ன சொல்லி இவனுக்கு புரிய வைப்பது! இவனால் இந்தப் பெண்ணின் வாழ்க்கையை பாழ் செய்துவிட்டேனே என்றெல்லாம் எண்ணி குழம்பினாள் நந்தினி!

அபியோ அதற்கு மேல் குழம்பினாள்!

இவர் என்ன இப்படி சொல்லிவிட்டார்! இனி என்ன செய்வது? இப்படியே படிக்காத தற்குறியாகவே நாடகத்தை தொடர்ந்தால்தான் தன்னால் அவனுடன் சேர்ந்து வாழ முடியுமா? இது என்ன பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் மாறிய கதையாய் ஆகிவிட்டதே என நினைத்து அவள் தன்னில் மூழ்கினாள்.

மாமியாரும் மருமகளும் ஆளுக்கொரு புறமாய் கலங்கிப் போய் அமர்ந்திருப்பதை பார்த்துக் கொண்டே வந்த பொன்னம்மாள் இருவரையும் பார்த்துவிட்டு குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க அருமையான திட்டம் ஒன்றை மனதுக்குள் போடலானாள்!

இனி அபியின் வாழ்க்கை என்னாகும்?




தொடரும்....



 

Author: Annapurani
Article Title: எனது சொந்தம் நீ - 11
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.