• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

எனது சொந்தம் நீ - 12

Annapurani

Member
Mar 27, 2025
38
0
8

12.



ஞாயிறு காலைதான் வருவோம் என்று கூறி தங்கள் சொந்த வேலையாக விடுப்பில் சென்ற பொன்னம்மாளும் முத்துவும் வேலை சீக்கிரம் முடிந்து விட்டதென்று சொல்லிக் கொண்டு சனிக்கிழமை இரவே வீடு திரும்பினார்கள்.

வீட்டில் நந்தினியும் அபியும் ஆளுக்கொரு புறமாய் வேதனையோடு அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டு, மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை என்று பொன்னம்மாள் தவறாகப் புரிந்து கொண்டாள்.

இவர்களின் சண்டையில் தனக்கு ஏதாவது லாபமாக செய்து கொள்ள வேண்டும் என்று பொன்னம்மாள் நினைத்துக் கொண்டாள்.

அதன்படி முதலில் அபிநயாவிடம் வந்து மெதுவாகப் பேச்சு கொடுத்தாள்!

"என்னா கண்ணு.... அத்த திட்டிட்டாங்களா?" என்று பீடிகையுடன் ஆரம்பித்தாள்.

தன் மன வருத்தத்தை வெளியில் சொல்ல முடியாமல் தவித்த அபியோ பொன்னம்மாளின் பேச்சை காதில் வாங்காமல்,

"ம்ச்.... " என்று உச்சுக் கொட்ட,

இந்த படிச்சவங்களே இப்டிதான் கண்ணு..... மொதல்ல நம்மள தலைல தூக்கி வெச்சினு ஆடுவாங்க.... ஆனா நம்ம எதுனாச்சும் சின்னதா தப்பு பண்ணிட்டோம்னு வெய்யி..... தஸ்ஸு... புஸ்ஸுனு இங்கிலீஸ்ல பீட்டர் உட்டுகினே.... நம்மள கோயி வறுக்கற மாரி வறுத்துடுவாங்க.... நா சொல்றத்த கேளு.... நீ கொஞ்சம் சூதனமா நடந்துக்கிட்டா.... பொயக்கலாம்.... பிராக்கா இருந்திட்டா.... ஆல்தான்.... நம்மள பிரிச்சி மேஞ்சிட்டு.... போய்கினே ருப்பாங்க....." என்று பக்கா சென்னைத் தமிழில் அபிக்கு (துர்)புத்தி சொன்னாள்.

ஆரம்பத்தில் பொன்னம்மாளின் பேச்சை கவனிக்காத அபி, படிச்சவங்க என்று அவள் சொன்னதைக் கேட்டு கவனத்தை இவளிடம் திருப்பினாள். அவள் பேசியது முழுவதையும் கவனமாகக் கேட்டவள் பொன்னம்மாளின் விளையாட்டை புரிந்து கொண்டாள்.

ஓஹோ.... குழம்பின குட்டைல மீன் பிடிக்க வந்திருக்கீங்களா பொன்னம்மாக்கா! வாங்க... உங்களுக்குதான் காத்துகிட்டிருந்தேன்.... இருங்க.... இன்னும் ரெண்டு நாள்தான் உங்க ஆட்டம்.... அப்றம் எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்றேன்! என்று மனதுக்குள் நிச்சயித்துக் கொண்டாள்.

"என்ன சொல்றீங்கக்கா...." என்று முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு பொன்னமாளிடம் பேச்சு கொடுத்தாள் அபி!

"ஆமா கண்ணு.... கொஞ்சம் புத்தியோட பொயச்சிக்கோன்னு சொல்றேன்.... ஆமா.... உனுக்கும் அத்தக்கும் இன்னா சண்ட கண்ணு...." என்று அவள் கொக்கி போட்டாள்.

ஓஹோ... போட்டு வாங்கறீங்களா.... அதுக்கெல்லாம் மசிய மாட்டேன்க்கா.... என்று மனதில் நினைத்தபடியே,

"ம்ச்.... நா என்ன சொல்லிப் போடுவேன்....." என்று மூக்கைச் சிந்தியபடியே மெதுவாகக் கழன்று கொண்டாள் அபி.

அபியின் மௌனம் பொன்னம்மாளை குழப்பமடையச் செய்தது!

என்ன இந்தப் பொண்ணு... என்ன ஏதுன்னு ஒண்ணும் சொல்ல மாட்டிது.... சரி உடு.... கத்ரிக்கா காச்சா... கடத் தெருவுக்கு வந்துதானே தீரணும்.... நீயே நாளைக்கு வந்து எங்கிட்ட ஒம்மாமியா கெழவிய தஜா பண்ண ஐடியா கேப்ப.... என்று நினைத்துக் கொண்டாள்.

அபியிடமிருந்து விஷயத்தை வாங்க முடியாத பொன்னம்மாள் அடுத்ததாக நந்தினியிடம் சென்றாள்.

"யம்மா.... இன்னாமா.... தல நோவுதா.... காபி போட்டு எடுத்தாரவா....."

"ம்ச்.... வேணாம்.... என்ன கொஞ்சம் தனியா விடு.... வேற வேல எதாவது இருந்தா போய்ப் பாரு.... இல்லன்னா அவளக் கேட்டு எதாவது பண்ணிக்க.... தொந்திரவு பண்ணாத...." என்று நந்தினி கூறினாள்.

அதற்கெல்லாம் அசருபவளா பொன்னம்மாள்.

"இன்னாமா நீங்க.... படிக்காத பொண்ண மருமவளா இட்டாந்து இம்மாங் கஸ்டப்படறீங்க.... அதுக்கு கணக்கும் தெரீல... வயக்கும் தெரீல... தம்பி உக்காந்து கணக்கு சொல்லி குட்த்திச்சி... ஆனா இதுக்கு ஒண்யும் பிரீல... இப்ப பாருங்க..... உங்களுக்குதான் அதோட ஒரே ரோதனையா பூட்ச்சீ....." என்று ராகம் இழுத்தாள்.

சே! இவல்லாம் வந்து எம் மருமகள தப்பு தப்பா பேசற அளவுக்கு ஆயிடுச்சே..... என்று வேதனைப்பட்டாள். வந்த கோபத்தில் பொன்னம்மாளை கிழி கிழி என்று கிழிக்க நினைத்தவளை அவளுடைய கைப்பேசி அழைத்தது.

அபிதான் அழைத்தாள்.

இவ எதுக்கு வீட்டுக்குள்ளேந்தே கூப்பட்றா... சம்திங் ராங்.... என்று நினைத்தபடியே அதை எடுத்து காதில் வைத்தாள்.

"அத்த.... நா பேசறதுக்கு இங்க்லீஷ்ல பதில் சொல்லுங்க.... நீங்க என் கிட்டதான் பேசறீங்கன்னு பொன்னம்மாக்கு தெரிய வேணாம்... அவங்கள பாக்காம பேசுங்க...."

"யா.... நந்தினி ஹியர்....டெல் மீ!" என்றாள் நந்தினி!

அபி சொல்லியபடி பொன்னம்மாளை பார்க்காமல் யாருடனோ பேசுவது போல பாவனை செய்தாள்.

பொன்னம்மாள் அதற்குள் அடுத்து எப்படி பேச வேண்டும் என்று தன் மனதுக்குள் மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்க்கலானாள்.

"அத்த.... பொன்னம்மாக்கா... நம்ம ரெண்டு பேருக்கும் சண்டைன்னு நெனச்சிகிட்டிருக்காங்க..."

"இஸ் இட்... தட்ஸ் குட்!"

"அவங்க நம்ம ரெண்டு பேருக்கும் நடுல டபுள் கேம் ஆடறதுக்கு ப்ளான் போட்ருக்காங்க... எதுக்கு நமக்குள்ள சண்டைன்னு தெரிஞ்சுக்கதான் அங்க வந்திருக்காங்க.... ஏதாவது சொல்லி உங்க கிட்ட போட்டு வாங்க ட்ரை பண்ணுவாங்க.... சோ.... நீங்க எதும் பேசாதீங்க...."

"ஐ ஸீ!"

"நாம இத கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்! இப்போதைக்கு எந்த ரியாகஷனும் குடுக்காம இருங்க!"

"ஓகேமா.... ஐல் டேக் கேர்!"

"வெச்சிடறேன் அத்த..."

"யா... பை! டேக் கேர்!" என்று சொல்லி போனை கட் செய்தாள் நந்தினி.

நந்தினிக்கு பொன்னம்மாளின் மேல் அளவில்லாத கோபம் வந்தது! ஆனால் அபியின் வார்த்தைக்காகவும் வாழ்க்கைக்காகவும் அமைதியாக இருந்தாள்.

"ஏம்மா... இன்னிக்கும் சின்னம்மா காசு எதுனா தொலச்சிட்டு வந்திச்சா...."என்று தன் அடுத்த கேள்வியை தொடுத்தாள் பொன்னம்மாள்.

"ம்ச்.... நானே கடுப்பில இருக்கேன்... நீ போறியா..." என்றாள் நந்தினி!

"இல்லம்மா... நீங்க பாவம் நொந்து போயிருப்பீங்களேன்னு வந்தேன்... ரெண்டு வார்த்த ஆறுதலா சொல்லலாம்னு..... பாவம் தல நோவா.... சரி... சரி.... நீங்க லெஸ்ட் எடுங்க... நா போய் என் வேலய பாக்கறேன்...." என்று கூறி வெளியேறினாள்.

என்னா இது.... இவங்களும் ஒயிங்கா பதில் சொல்ல மாட்றாங்க.... அப்ப அந்த பொண்ணு.... ஏதோ பெரீசா தப்பு பண்ணிடுச்சி போல...... ஐயோ பொன்னம்மா.... இப்ப போயி நீ வூட்ல இல்லாம போய்ட்டியே..... இப்ப என்னா விவரம்னு இந்தம்மாவும் சொல்ல மாட்றாங்க.... அந்தப் பொண்ணும் எதும் சொல்ல மாட்டிது..... என்று தனக்குள் புலம்பிக் கொண்டாள்! அவளுக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது!

ஆனால் என்ன செய்வது! வேறு வழியில்லாமல் சரியான தருணத்துக்காக காத்திருக்கலானாள்.



******************************



அபிநயாவின் மனம் தவித்தபடி இருந்தது!

விஷயம் தெரிந்த பின் ஹரி எப்படி நடந்து கொள்ளுவான்? என்ற ஒன்றே அவளுடைய தவிப்புக்கு காரணம்!

விஷயம் தெரிஞ்சப்பறம் அவர் எப்டி ரியாக்ட் பண்ணுவாரோ தெரியலை. ஒரு வேள மாமா அத்தைய விட்டுட்டுப் போன மாதிரி இவரும் என்ன விட்டுட்டு போய்ட்டார்ன்னா? இல்ல நீ இனிமே எனக்கு வேண்டாம். என் வாழ்க்கைலேர்ந்து போய்டுன்னு சொல்லி என்ன பிரிஞ்சுட்டார்ன்னா? ஐயோ! அவர் இல்லாத வாழ்க்கைய நெனச்சுப் பாக்கவே முடியலையே! பேசாம சைலன்டா போய் வேலைய ரிசைன் பண்ணிடறேன். என் சர்டிஃபிகேட்ஸ் எல்லாத்தையும் கிழிச்சுப் போட்டுடறேன். அதுதான் சரி.

அப்பதான் படிச்சவங்கற அடையாளம் எனக்கு வேண்டாம். உங்க மனைவிங்கற அடையாளம் மட்டும் போதும்னு சொல்லி அவர சமாதானம் செய்ய முடியும். கடவுளே காப்பாத்து. நான் பொய் சொல்லல. உண்மைய மறைச்சேன்!?!? அவ்ளோதான். என்ன மன்னிச்சிடு! என்ன காப்பாத்து! ப்ளீஸ் காப்பாத்து! அவர் என்ன விட்டுப் போகக் கூடாது! நானும் அவரும் எந்த காரணத்துக்காகவும் பிரிஞ்சுடக் கூடாது! சோபாவில் அமர்ந்து கண்ணை மூடி அவர் என்ன விட்டு பிரிஞ்சுடக் கூடாது என்று திரும்பத் திரும்ப தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அன்றைய தினம் பெரிதாக எந்த மாற்றமுமின்றி கழிந்தது!

மறுநாள் காலை அபி எப்போதும் போல ஐந்து மணிக்கு எழுந்து தன் வேலையை கவனிக்கத் தொடங்கிவிட்டாள். ஹரி எட்டு மணி சுமாருக்கு எழுந்து வரும்போது, பூக்காரக் கிழவி வந்திருந்தாள். அபி அவளிடம் வாயாடிக் கொண்டிருந்தாள்.

“என்ன கௌவி? காலைலயே வந்திருக்கீக! கால்ல காயம் எப்டி இருக்கு?”

“ஆறிப் போச்சும்மா! நீ சொன்னா மாறி நான் எம்மருமவகிட்ட சண்டபிடிக்காம இருந்தேன். அதுவும் என் கால்ல அடிபட்டிருக்குன்னு நல்லா ஆக்கி போட்டுச்சும்மா. இனிமே நீ பூ விக்க போகாத அத்த. நான் இருக்கும்போது நீ ஏன் கஸ்டப்படறன்னு சொல்லிருச்சு. எம்மவனும் அது சொல்ற பேச்ச கேக்க ஆரமிச்சுட்டான். குடிக்கறத நிறுத்திட்டாம்மா. அதான் நீ இனிமே வேற யார்கிட்டனா பூ வாங்கிக்கோன்னு சொல்ட்டு போக வந்தேன்! வரேம்மா!”

“பாத்தீயளா! நாந்தேன் சொன்னேன்ல. வாய மூடிகிட்டு இருந்தீயன்னா ஒமக்கு ராஜ மரியாதை கிடைக்குமின்னு.”

“ஹக்காம்மா! நீ சொல்றது சர்தாம்மா! நான் வர்ட்டா!”

“இருங்க. ஒரு நிமிஷம் இருங்க!” என்று அபி சொல்லிவிட்டு மாடிக்கு ஓடிப்போய் புதிய தைக்காத சுடிதார் மெட்டீரியல் ஒன்றை எடுத்து வந்து அவளிடம் தந்தாள்.

“இந்தாங்க! இத உம்ம மருமக கிட்ட குடுத்துப் போடுங்க. இது சீலையில்ல. நான் போட்டிருக்கேன்ல! இதுமாதிரி தெச்சுப் போட்டுக்க சொல்லுங்க.”

“சரி கண்ணு. நீ நல்லா இருக்கணும். சீக்கிரமா ஒரு பேரனப் பெத்து இந்த கிழவி கண்ணுல காட்டு தாயி!”

“ஏன்? பேரந்தேன் வேணுமா? பேத்தி பொறந்தா முகத்த திருப்பிக்குவீகளா?”

“ஹையியோ! அப்டி சொல்லாத கண்ணு. பேத்தியோ பேரனோ, நல்லபடியா பெத்துக்க கண்ணு! நான் வர்ட்டா!”

“பத்திரமா போய்ட்டு வாங்க!”

இவர்களின் பேச்சைக் கேட்டபடியே வந்த ஹரி, அபியின் பேச்சைக் கேட்டு தனக்குள் சிரித்துக் கொண்டான்.

ஒருத்தரையும் விட மாட்டா போல! எல்லார்ட்டயும் எப்டி வம்பு வளக்கறா பாரு! என்று நினைத்துக் கொண்டான்.

“என்ன அபி! பாட்டி பயங்கரமா திருந்திடுச்சு போல.”

“ஆமாங்க! மருமக நல்லா ஆக்கி போடுதாம். நீ வேலக்கி போவாத அத்தன்னு சொல்லுதாம்!” என்று சிரித்தாள்.

“பேரன் பேத்தியெல்லாம் கேட்டா போல!” சொல்லிக்கொண்டே அபியின் தோளை உரசினான்.

“ம்! சும்மா இருங்க. ஆர்னா பாத்துடப் போறாங்க!”

“பாக்கட்டுமே!” இப்போது அவள் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டுவிட்டான்.

"ஹ்க்கும்..." சிணுங்கியபடியே அவள் அவனுடைய கையை எடுத்துவிட முயன்றாள்.

டைனிங் டேபிளில் நந்தினி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஹரியும் அபியும் அவளருகில் அமர்ந்தனர். பொன்னம்மாள் பரிமாற மூவரும் ஏதேதோ பேசியபடி சாப்பிட்டனர்.

சாப்பிட்டு கை கழுவி வந்த பின் ஹரி அன்றைய நாளிதழை புரட்ட, நந்தினி தன்னுடைய அறையில் அமர்ந்துவிட்டாள். அபி பொன்னம்மாளுடன் மதிய உணவுக்காக சமையல் செய்யத் தொடங்கினாள்.

நந்தினி ஹரியிடம் எப்படி இதைக் கூறுவது என்று யோசனை செய்தபடியே அமர்ந்திருந்தாள். அவளுக்கு வியர்க்கத் தொடங்கியது.

திடீரென்று நந்தினி அழைப்பது போல அபிக்குத் தோன்றியது! ஓடிச்சென்று நந்தினியின் அறையில் எட்டிப்பார்த்தாள்!

“அபிம்மா.....” நந்தினி அபியை தீனமான குரலில் அழைத்தாள். அவள் குரல் வேறுபட்டு ஒலித்தது. அவள் மூச்சுவிட சிரமப்படுவது போல இருந்தது.

“அத்த.......!” சத்தமாக கூவிக் கொண்டே நந்தினியின் அருகில் சென்றாள்.

இவள் கத்துவது கேட்டு ஹரி ஓடி வந்தான். அவன் வருவது கண்டு பொன்னம்மாளும் முத்துவும் ஓடி வந்தனர்.

நந்தினி மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு வியர்த்தது. நெஞ்சைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா உங்களுக்கு என்னாச்சு?” ஹரி அம்மாவின் அருகில் அமர்ந்து அவள் நெஞ்சை தடவிவிட்டான்.

“டாக்டருக்கு கால் பண்ணனும்." என்று சொல்லிக்கொண்டே ஹரி தன் கைப்பேசியை எடுத்தான்.

அபிக்கு நந்தினியின் நிலை புரிந்தது. இனி ஒரு நொடி கூட தாமதிக்கக் கூடாது! வருவது வரட்டும் என்று நினைத்வளாய் நந்தினியின் கப்போர்டிலிருந்து எதோ ஒரு பெட்டியை எடுத்தாள். அதைத் திறந்து ஸ்டெத்தஸ்கோப்பை மாட்டி நந்தினியின் நெஞ்சில் வைத்து ஆராய்ச்சி செய்தாள். ஹரி இவள் செய்வதை கண்டு அதிர்ந்தான்.

நந்தினியின் நெஞ்சில் தன் ஸ்டெத்தெஸ்கோப்பை வைத்து ஊன்றி கவனித்தாள் அபி. அவள் செய்வதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி. அபிக்கு நந்தினியின் நிலை புரிந்தது.

“உங்களுக்கு ஹார்ட் ப்ளாக் இருக்கா?”

நந்தினி ஆமாம் என்று தலையசைத்தாள்.

“ரிப்போர்ட்ஸ் எங்க?”

நந்தினி கைகாட்டினாள். எடுத்துப் பார்த்தாள்.

“மை காட்! ஏன் அத்த மொதல்லயே சொல்லல? ம்ச்!” ஹரியின் கைப்பேசியை வாங்கி எதோ நம்பரை அழுத்தினாள்.

“ஹலோ! டாக்டர் அபிநயா ஸ்பீக்கிங்! ஐசியூல பெட் காலியா இருக்கா.”

“.........”

“ஓகே! மேக் இட் பாஸிபிள்! ஐல் பீ தேர் இன் ஹாஃப் அன் ஆர்! க்விக்!” என்று கூறி போனை கட் செய்தாள்.

இவ ஒரு டாக்டரா? என்று மனதுக்குள் நினைத்து கொதித்தான் ஹரி.

“நீங்களும் முத்துவும் ஒரு கை பிடிங்க ஹரி. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்டலாம்.” என்றவள் கணவன் ஒன்றும் பேசாமல் இருப்பதைப் பார்த்து,

“இங்க பாருங்க ஹரி! நான் ஒரு டாக்டர். கார்டியாலஜிஸ்ட். இங்க அடையார்ல இருக்கற மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல்ல வேலை பாக்கறேன்."

அபி கூறியதைக்கேட்ட ஹரி தன் தலையில் இடி இறங்கியதை போல நிற்க, பொன்னம்மாள் அவனுக்கு மேல் அதிர்ந்து போய் நின்றாள்!




தொடரும்....



 

Author: Annapurani
Article Title: எனது சொந்தம் நீ - 12
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.