17.
அபி நந்தினியை இரவு பகல் என ஒவ்வொரு நிமிடமும் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள்.
தன் மனைவி தன் அம்மாவிடம் மிகவும் அன்பாகவே நடந்து கொள்கிறாள் என்பதை கவனித்து வந்தாலும் அவள் மேல் அவனுக்கு ஏற்பட்ட கோபம் கொஞ்சம் கூடக் குறையவில்லை ஹரிக்கு!
அந்த கோபத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவனும் விரும்பவில்லை!
ஆனால் தன்னுடைய கோபத்தை தன் தந்தையிடம் காட்ட அவனால் முடியவில்லை!
ஹரி தன் அப்பாவுடன் சீராடினான். ப்ளஸ் டூவில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்தது முதல், பி.டெக்., எம்.டெக்., எல்லா வகுப்பிலும் தங்கப் பதக்கம் வாங்கியது, எம்பிஏ முடித்து நலிவடையும் நிலையில் இருந்த கம்பெனியை வாங்கி அதை வெற்றிகரமாக நடத்துவது, அபியைக் கண்டு மயங்கியது, அவள் டாக்டர் எனத் தெரிந்து அதிர்ந்தது வரை அத்தனையையும் சொன்னான்.
“நான் ப்ளஸ் டூல நல்ல மார்க் எடுத்தா நீங்க திரும்பி வந்துடுவீங்கன்னு அம்மா சொன்னாங்க! அதான் நான் நல்லா படிச்சு ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தேன். ஆனா உங்க கிட்டேந்து ஒரு க்ரீட்டிங் கார்ட் கூட வரலன்னப்போ ரொம்ப ஃபீல் பண்ணினேன்ப்பா!”
மகனை ஆரத் தழுவிக் கொண்டார். அன்று மகன் வாங்கிய மார்க்குக்காக இன்று அவனுக்கு பரிசாக முத்தங்களை வழங்கினார். தாமதமாகக் கிடைத்தாலும் மகனுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.
"நான் உங்கள ஒரு இடத்துக்கு கூட்டிட்டுப் போறேன்! வாங்கப்பா!” என்று கூறி தன் காரில் அவரை ஏற்றிக் கொண்டு அவரை அழைத்துப் போய் தன் கம்பெனியைக் காட்டினான். அவர் பூரித்துப் போனார்.
ஹரி தான் இளவயதில் தொலைத்த சந்தோஷங்களையெல்லாம் இப்போது கண்டு கொண்டான். தன் நேரத்தையெல்லாம் தந்தையுடனேயே செலவிட்டான். அவர் தன் கையால் சமைத்து மகனுக்கு போட்டார். ஹரி தன் தந்தையின் மேல் காலைப் போட்டுக் கொண்டு உறங்கினான். மிகவும் சந்தோஷமாக இருந்தான்.
சந்தர் தன் மனைவி சீமாவை சென்னைக்கு வரவழைத்து சிவசங்கரனின் குடும்பத்தை அறிமுகப் படுத்தினார். சீமாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
நந்தினியிடம் சிவசங்கரன் எப்படியெல்லாம் அவர்களுக்காகத் தவித்தார் என்று சொன்னாள். ஹரியும் நந்தினியும் பூரித்துப் போனார்கள்.
அபியைக் கண்டு சீமா தன் மகளைப் போலவே இருக்கிறாள் என்று கொஞ்சி மகிழ, ஹரி தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
இரண்டு நாட்கள் பிறந்த வீட்டில் இருந்து சீராடிவிட்டுச் செல்வது போல சீராடிவிட்டுச் சென்றாள் சீமா.
ஹரியின் நண்பன் டேவிட்டும் அவன் மனைவி ஜூலியும் ஹரியின் தந்தை திரும்பி வந்ததை அறிந்து வந்து பார்த்து தங்கள் மகிழ்ச்சியை காட்டினர். ரகுவும் ஸ்கைப்பில் வாழ்த்து தெரிவித்தான்.
தினமும் இரவு முழுதும் நந்தினியுடன் அபி இருப்பாள். காலை ஹரி அலுவலகத்துக்கு கிளம்பி, தன் அப்பாவுடன் மருத்துவமனை வருவான். அன்னையைப் பார்த்துவிட்டு அவன் கிளம்புவான். சிவசங்கரன் மருத்துவமனையில் நந்தினியுடன் துணைக்கிருக்க அபி வீட்டுக்குச் சென்று குளித்து உடை மாற்றி மாமியார் மாமனாருக்கும் தனக்கும் உணவு எடுத்துக் கொண்டு மருத்துவமனை செல்வாள்.
பொன்னம்மாளை இன்னும் ஹரி வீட்டு வேலைக்கு அனுமதிக்கவில்லை!
மாலை ஹரி அலுவலகத்திலிருந்து வந்து அன்னையைப் பார்த்து சிறிது நேரம் அளவளாவிவிட்டு அப்பாவுடன் வீட்டுக்கு கிளம்பிவிடுவான். இரவு உணவு நந்தினிக்கும் அபிக்கும் முத்து எடுத்து வந்து தந்துவிட்டுப் போவான்.
இப்படியே ஆபரேஷன் முடிந்து பதினைந்து நாட்கள் ஓடிவிட்டது. நந்தினி நன்றாகத் தேற ஆரம்பித்தாள். முகத்தில் பழைய களை வந்துவிட்டது. பேச்சில் உற்சாகம் தொற்றிக்கொண்டது.
நடுநடுவே இந்துவும் பாண்டியனும், சாருமதியும் கோபாலனும் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். ஆனந்தியும் வந்து சென்றாள்.
இந்த நிலையில் ஹரியிடம் சிவசங்கரன் கேட்டார்.
“எப்ப ஹரி கல்யாணம் பண்ணிகிட்ட?”
"அதப்பத்தி மட்டும் கேக்காதீங்கப்பா... நானே கடுப்பில இருக்கேன்...." என்று கூறிவிட்டான்!
அவன் கூற விரும்பாத ஒன்றை அவனிடம் கேட்க அவரும் விரும்பவில்லை!
ஆனால் ஆனந்தி எல்லாவற்றையும் அவரிடம் கூறினாள்!
"அவன் மனசு இந்த அளவுக்கு நொந்து போயிருக்கும்னு நந்தினி எதிர் பாக்கலண்ணா! இல்லன்னா அவ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க மாட்டா! அவனுக்கு நல்லது பண்றதாதான் அவ நெனச்சிகிட்டிருந்தா... பாவம்...." என்றாள் ஆனந்தி!
"ம்..." என்றார் சிவசங்கரன்!
“நீங்க நந்தினிய பிரிஞ்சதுக்கு அவ அதிகம் படிச்சதாலதான்னு நெனச்சு தனக்கு படிக்காத பொண்ணுதான் வேணும்னு நெனச்சான். ஆனா அபிய ஒரு வாட்டி அவனோட பிஸினஸ் மீட்டிங்க் முடிஞ்சி வரச்ச பாத்தானாம். அவனுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சதாம். ஆனா அவ படிச்சவளாதான் இருப்பான்னு நெனச்சு மறக்க ட்ரை பண்ணினானாம். ஆனா நந்தினி இவளப் பத்தி சொன்னா. இவ ப்ளஸ்டூ ஃபெயில்ன்னு பொய் சொன்னா. அத நம்பி இவனும் சரின்னு ஒத்துகிட்டான்!
அன்னிக்கு நந்தினி நெஞ்சப் பிடிச்சுகிட்டு விழுந்தப்பதான், இவ டாக்டருக்குப் படிச்சிருக்கான்னு அவனுக்கு தெரிஞ்சது!
தெரிஞ்சதுக்கப்றமும் கூட அவன் அவ கிட்ட சாதாரணமாதான் நடந்துகிட்டான்!
நந்தினிக்கு நெஞ்சு வலின்னு விழுந்ததப் பார்த்த அதிர்ச்சியில அவனால கார் ஓட்ட முடியல! அபிதான் நந்தினியையும் அவனையும் கார்ல ஏத்திகிட்டு ஹாஸ்பிடலுக்கு ஓட்டிட்டு வந்து எமர்ஜென்ஸி ட்ரீட்மென்ட் குடுத்தா!
நந்தினிக்காக மருந்தீஸ்வரர் கோவில்ல வேண்டிக்க போகும் போது கூட அபியையும் கூட்டிட்டுதான் போனான்!
ஆனா உங்கள பாத்ததும் நந்தினி பொழச்சுக்குவான்னு அவனுக்கு நம்பிக்கை வந்திச்சோ என்னமோ, உடனே அபிய நந்தினிக்கு ஆபரேஷன் பண்ணக் கூடாதுன்னு ரகளை பண்ணினான்! நல்ல வேளை! நீங்க தலையிட்டு இந்த பிரச்சனைய முடிச்சி வெச்சீங்க!
அதே மாதிரி நந்தினி ரெகவர் ஆகி வீட்டுக்கு வரதுக்குள்ள அவங்களுக்குள்ள இருக்கற பிரச்சனையையும் சரி பண்ணிடுங்கண்ணா!" என்று கேட்டுக் கொண்டாள் ஆனந்தி!
"கண்டிப்பா! நேரடியா இல்லன்னாலும் இந்த பிரச்சனைக்கு முழு முதற் காரணமே நாந்தான்! சரி பண்ணிடறேம்மா!" என்று கூறிய சிவசங்கரன்,
"அபி எப்டிம்மா கேரக்டர்?!" என்று கேட்டார்!
"ரொம்ப நல்ல பொண்ணு! டாக்டருக்கு படிச்சிருக்கேன்னு மனசில துளி கூட கர்வமில்ல! இவ்ளோ நாளா தான் ஒரு டாக்டர்ன்னு யார் கிட்டயும் காட்டிகிட்டதேயில்ல. நந்தினி அடிக்கடி சொல்வா! வீட்ல டாய்லெட் கழுவறதுலேர்ந்து எல்லா வேலையையும் இழுத்து போட்டுகிட்டு செய்வாளாம்! பொன்னம்மா சமையல் செய்யறதுக்கு இருந்தாலும் அவளேதான் சமைப்பாளாம்! அவ வந்ததுக்கப்றம் வீட்ல ஒரு தூசி தும்பு கூட இல்ல. வேலக்காரங்க க்ளீன் பண்ணுவாங்கதான். அதுல எங்கியாவது ஒரு குறை இருந்துகிட்டே இருக்கும். ஆனா அபி வந்ததுக்கப்றம் வீடு அப்டியே பளிங்கு மாதிரி எங்க பாத்தாலும் சுத்தமாதான் இருக்கு. அவ யூஸ் பண்ற காய்கறி கூட சுத்தமாதான் இருக்கணும்னு பொன்னம்மாகிட்ட சொல்வா! முத்து வாங்கிட்டு வர கறி கூட நல்ல க்ளீனா இல்லன்னா ரொம்ப சத்தம் போடுவா! ஆனா கெட்ட வார்த்தை பேசினா அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது, அப்டீன்னு நந்தினி அடிக்கடி சொல்லிகிட்டே இருப்பா!"
"ஓ...."
"ஆமாண்ணா! ஒரு பூக்காரி அவ மருமகளப்பத்தி தப்பு தப்பா பேசிகிட்டு வருவா! இப்டி பேசிகிட்டு இங்க வரவே வராதன்னு சொல்வா!”
“அடேங்கப்பா! ரொம்ப கோவக்காரியா?”
“அதான் இல்ல! அதே பூக்காரி கால்ல அடிபட்டுகிட்டு வந்தப்ப காயத்துக்கு மருந்து போட்டு, டிபன் குடுத்து சாப்டச் சொல்லி மாத்தர குடுத்து முழுங்கச் சொல்லி அடுத்த வேளை மாத்தரையும் குடுத்து அனுப்பினாளாம்! அனுப்பும்போது மருமககிட்ட அன்பா நடந்துக்கோன்னு சொல்லி அனுப்பினாளாம்! அவ சொன்னமாதிரி நடந்தாளாம் அந்த பூக்காரி! இப்ப அவளும் அவ மருமகளும் அன்பா ஆகிட்டாங்களாம். இனிமே பூ விக்க போகாதீங்க அத்தன்னு அவ மருமக சொன்னான்னு பூக்காரி வந்து சொல்லிட்டுப் போனாளாம்! சொன்னவளுக்கு புது சுடிதார் மெட்டீரியல குடுத்து மருமககிட்ட குடுன்னு சொல்லி அபி குடுத்தப்ப அந்த பூக்காரி முகத்தில எவ்ளோ சந்தோஷம் தெரியுமான்னு நந்தினி அபிய பத்தி சொன்னப்ப எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சுண்ணா!”
“அதிசயமாதான் இருக்கு! நிறைகுடம் தளும்பாதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க! அபிநயா ஒரு நிறைகுடம்!" என்ற சிவசங்கரன் அபியையும் ஹரியையும் இணைப்பதற்குண்டான வேலைகளில் இறங்கினார்!
அவருடைய முயற்சிகளுக்கு பலன் கிட்டுமா?
தொடரும்....
Author: Annapurani
Article Title: எனது சொந்தம் நீ - 17
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: எனது சொந்தம் நீ - 17
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.