20. (Final)
அபி நந்தினிக்கு ஊசி போட்டுக் கொண்டிருந்தாள். நந்தினியின் அருகில் சிவசங்கரன் அமர்ந்திருந்தார்! ஹரி உள்ளே வருவது கண்டு தன் மாமியாரிடமும் மாமனாரிடமும் தலையசைத்துவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்!
“எப்டிம்மா இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் ஹரி!"
ஹரி தன்னைப் பற்றியோ அபியைப் பற்றியோ பேசாமல் பொதுவாக ஏதேதோ சொல்லிச் சிரித்தபடி தன் அம்மாவிடம் பேசினான்! அவனுடைய எண்ணம் புரிந்து நந்தினியும் அவர்களைப் பற்றி எதுவும் பேசாமல் சாதாரணமாகப் பேசினாள்! ஆனால் மிகவும் உற்சாகமாய்ப் பேசினாள்.
சிவசங்கரன் அமைதியாக அமர்ந்திருந்தார்!
அதன் பின்னர் அபியின் சீஃப் டாக்டரிடம் சென்றான். டாக்டர் தன் லேப்டாப்பிலிருந்து கண்ணை எடுக்காமலேயே அவனை அமரச் சொன்னார். தன் வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்தார்.
“சொல்லுங்க ஹரி!"
“அம்மாவ வீட்டுக்கு கூட்டிட்டு போலாமா டாக்டர்?” ஹரி கேட்டான்.
“போலாம் ஹரி! இன்னும் நாலு இஞ்செக்ஷன் பாக்கி இருக்கு! இன்னிக்கு ரெண்டு! நாளைக்கு ரெண்டு! அதோட முடிஞ்சுடும். அதுக்கப்றம் வீட்டுக்கு போலாம்!”
“அப்றம் அம்மாவோட டயட், மருந்து மாத்திரை இதெல்லாம் டாக்டர்?”
“எல்லாம் அபிக்குத் தெரியும். ஷீ வில் டேக் கேர் ஆஃப் எவ்ரிதிங்! நீங்க கவலையே படாதீங்க!”
“தேங்கயூ டாக்டர்!” என எழுந்து கொண்டான்.
அவன் வெளியே செல்ல, அவர் மீண்டும் லேப்டாப்பில் கவனம் செலுத்தினார்.
சீஃப் டாக்டரின் அறையிலிருந்து வெளியே வந்தவன் அபியைத் தேட,
அபி நந்தினி இருக்கும் அறை வாசலில் நின்று யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள்!
யாரென்று இவன் கவனிக்க அது வேறு யாருமல்ல, அவன் வீட்டில் வேலை செய்த பொன்னம்மாதான்!
இவ எதுக்கு இங்க வந்திருக்கா? என்று நினைத்தபடியே ஹரி நிற்க,
"ம்மா.... என்னிய மன்னிச்சிரும்மா... ஏதோ... வூட்டு செலவுக்கு துட்டு பத்தல... வாத்யாரம்மாகிட்ட ஆட்டய போட்டுகினேன்.... மன்னிச்சிரும்மா.... புள்ளைக்கு இஸ்கோல்ல பீஸ் (school fees) கட்டணும்மா...." என்று கூறி பொன்னம்மா கண்ணீர் சிந்தினாள்.
"ஐயோ... பொன்னம்மாக்கா.... இதென்ன இங்க வந்து ஒப்பாரி வெக்கறீங்க? நீங்க வீட்டுக்கு வாங்க!" என்று கூறினாள் அபி!
"அப்ப நா நாளைக்கிலேந்து வேலக்கி வரவாம்மா...." கண்களைத் துடைத்தபடி ஆவலாகக் கேட்டாள் பொன்னம்மா!
"நாளைக்கு எதுக்கு? இன்னிக்குலேர்ந்தே வாங்க!"
"வரேம்மா.... இப்பவே நா நம்ம வூட்டுக்கு போறேன்!" என்று கூறி அவள் நகர்ந்துவிட்டு, பின்னர் தயங்கியபடி அபியைப் பார்த்துக் கேட்டாள்!
"ஆனா.... அம்மா... சின்னய்யா..." என்று இழுத்தாள்!
"அவர் ஒண்ணும் சொல்ல மாட்டார்! அவருக்கும் உன் குடும்ப கஷ்டம் தெரியும்!" என்று கூறிவிட்டு,
"ஆனா... இனிமே இது மாதிரி தப்பெல்லாம் செய்யக் கூடாது! சரியா!?" என்று கண்டிப்புடன் கேட்டாள் அபி!
"மாட்டேம்மா.... இனிமே எந்த தப்பும் செய்ய மாட்டேன்.... அந்த மாரியாத்தா மேல சத்தியம்!" என்று அவசரமாகக் கூறினாள் பொன்னம்மாள்!
"சரி! வீட்ல நிறைய வேலை பாக்கி வெச்சிட்டேன்... பாத்துக்கங்க..." என்று அபி கூற,
"நீ ஒன்யும் கவலப் படாதம்மா... அல்லாத்தையும் நா பாத்துக்கறேன்.... நீ நம்ம அம்மாவ கருத்தா பாத்துக்க.... வரட்டா..." என்று சொல்லிவிட்டு சிட்டாகப் பறந்தாள் பொன்னம்மா!
இதையெல்லாம் தள்ளியிருந்து பார்த்த ஹரி, அபியின் குணத்தை நினைத்து வியந்தே போனான்!
பொன்னம்மாள் சென்றதும் அபிக்கு அடுத்தடுத்து இரண்டு பேர் அவசர சிகிச்சைக்கு வந்து விட, ஹரி தங்கள் விவகாரத்தைப் பற்றி அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துக் கொண்டான்! நந்தினியிடம் சொல்லிவிட்டு தன் தந்தையுடன் அவன் வீடு திரும்ப கீழே இறங்கும்போது காரிடாரில் அபியின் சீஃப் டாக்டர் போனில் யாரிடமோ கோபமாக கத்திக் கொண்டிருந்தார்.
இவர் என்ன இந்த வயசில இவ்ளோ கோபப்படறாரு! என்று மனதுக்குள் எண்ணியபடியே அவரை கடக்கும்போது,
"உங்களால ஒரு லேப்டாப்பை ஒழுங்கா ஸர்வீஸ் பண்ண முடியாதா? என்ன ஸர்வீஸ் சென்டர் வெச்சிருக்கீங்க! நீங்க பண்ணின அரைகுறை வேலையால என் மொத்த வேலையும் கெட்டுப் போகுது? ஒரு ரெஸ்பான்ஸிபிலிட்டியே (responsibility) இல்லையா?"
என்று கோபமாக கேட்டுக் கொண்டிருந்தார்.
ஹரி தன் தந்தையை தங்கள் காரில் காத்திருக்கச் சொல்லிவிட்டு நின்றான். அவர் போன் பேசி முடியும் வரை காத்திருந்துவிட்டு அவரருகில் சென்றான்.
“மே ஐ ஹெல்ப் யூ டாக்டர்?” என்றான்.
“ப்ளீஸ்!” என்று கூறி தன்னுடைய அறைக்கு அவனை அழைத்துச் சென்றார். அவனிடம் தன் லேப்டாப்பைத் தந்து அதில் உள்ள பிரச்சனையைச் சொன்னார்! அவன் அதை கழட்டிப் பார்த்து ஏதோ செய்தான். பின்னர் அதை ஆன் செய்து சரியாக வேலை செய்கிறதா என்றும் சோதித்து அதில் இருந்த குறைகளையும் நிவர்த்தி செய்து அவரிடம் தந்தான்.
“ரெடி டாக்டர்! நீங்க யூஸ் பண்ணிப் பாருங்க!” என்றான்.
அபிக்கும் ஹரிக்கும் நடுவே இருந்த கருத்து வேறுபாடுகளை தன்னால் மாற்ற முடியாது! ஆனால் குறைக்க முயற்சிக்கலாமே என்று எண்ணியவராய் அபியைப் பற்றி ஹரியிடம் இரண்டொரு வார்த்தை சொல்லலாம் என்று தன் மனதில் நிச்சயித்துக் கொண்டார் சீஃப் டாக்டர்!
“தேங்க்யூ ஹரி! தேங்க்யூ சோ மச். ஹூம்.... நீங்களும் அபி மாதிரியே பயங்கர மூளைக்காரன்தான். எ பர்ஃபெக்ட் மேட்ச்! லாங் லிவ் போத் ஆஃப் யூ!” என்றார். அவன் புன்னகைத்தான்.
“தேங்க்யூ டாக்டர்! இனிமே ப்ரச்சனை வராது. வந்தா எப்ப வேண்ணாலும் எனக்கு கால் பண்ணுங்க. நான் சரி செய்யறேன்!” என்று கூறி தன் விஸிட்டிங் கார்ட்டை அவரிடம் தந்தான். டாக்டர் தன்னுடைய செல்லை அவனிடம் தந்தார்.
“ஹரி! நீங்களே உங்க நம்பரை என் செல்லில சேவ் பண்ணிடுங்க! ப்ளீஸ்! அப்டியே உங்க மொபைலுக்கு ஒரு மிஸ்டு கால் குடுத்து என் நம்பர சேவ் பண்ணிக்கோங்க! இந்த டெக்னாலஜி ஒண்ணும் புரில!” என்றார்.
சிரித்தபடியே அவர் சொன்னதை செய்துவிட்டு அவருடைய செல்லை அவரிடம் தந்தான்.
"உங்களுக்கு தெரியுமா? அபி ஒரு டெடிக்கேட்டட் (dedicated person) பர்சன்! அவ மதுரைல காலேஜ் படிக்கறதுலேர்ந்தே அவள எனக்கு தெரியும்! நாந்தான் அவள சென்னை வரச் சொன்னதே! என்னோட கம்பல்ஷன்லதான் அவ சென்னைக்கு வேலை பாக்க வந்தா! படிக்கறப்பவும் சரி, இப்ப இங்க வேலைக்கு சேர்ந்தப்றமும் சரி, எனக்குத் தெரிஞ்சு லீவே எடுத்ததில்ல! கார்டியாலஜிஸ்ட் (Cardiologist) ஆகறது அவளோட பேஷன் (passion). ஆனா உங்களுக்காக இத்தன நாள் லீவ் போட்டுட்டாப்பா! என்னம்மான்னு கேட்டா புருஷனுக்காக டாக்டர்ன்னு சொல்றா! நீங்க குடுத்து வெச்சவர். புருஷனுக்காக உயிரக் குடுக்கற மனைவி ஒரு ரகம். புருஷன் உயிர எடுக்கற மனைவி ஒரு ரகம். இதுல அபி முதல் ரகம். உங்களுக்காக உயிர குடுக்கற ரகம். இப்டிபட்ட மனைவி அமையணும்னா நீங்க நிறைய புண்ணியம் பண்ணி இருக்கணும்.” என்றார்.
என்ன பேசுவது என்று புரியாமல் இருந்தான் ஹரி.
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.” என்று பாடிக்கொண்டே அவனிடம் கை குலுக்கினார்!
ஹரியின் முகத்தில் மெல்லியதாய் மாற்றத்தை அவர் கவனித்ததும், ஏதோ தன்னால் முடிந்ததைச் செய்து விட்டேன்! இனி அவர்கள் இருவரும் ஒற்றுமையாய் வாழ்ந்தால் சந்தோஷம் என்று நினைத்துக் கொண்டார் சீஃப் டாக்டர்.
இருவரும் கை குலுக்கி விடை பெற்றனர்.
ஹரி அமைதியாக யோசித்தான். அவனுக்கு ஒருபக்கம், தன்னை ஏமாற்றிவிட்டாளே என்று அபியின் மேல் பயங்கர கோபமாக வந்தது. மறுபக்கம் ஆச்சர்யம் ஏற்பட்டது. டாக்டர் சொல்படி பார்த்தால் எனக்காக தொழிலை மறந்து விட முடிவு செய்துவிட்டாளா? என்ன இவள்? இப்படி ஒருத்தியால் இருக்க முடியுமா?
நான் அவளுக்காக என்று எதையுமே செய்ய முன் வரவில்லை! ஆனால் அவள் எனக்காகத் தன் தொழிலையே விடத் தயாராகி விட்டாளா! என்று எண்ணி நெகிழ்ந்தான். அதே நேரத்தில் தன்னை ஏமாற்றிவிட்டாளே என்ற கோபமும் ஒரு பககம் இருக்கத்தான் செய்தது.
ஆனால் அவள் இத்தனை நாட்களாக தன்னிடமும் தன் அன்னையிடமும் நடந்து கொள்ளும் விதத்தையும் அவன் சிந்திக்கலானான்! (அப்டிதான்.... நல்ல புத்தியோட யோசனை செஞ்சி ஒழுங்கா அபியோட சேர்ந்து வாழற வழியப் பாருப்பா ஹரி!?!?)
மறுநாள் அபி லக்ஷ்மியின் பில்லுக்கான பணத்தை செலுத்த போன போது அதை வேறு யாரோ கட்டிவிட்டதாகவும் லக்ஷ்மியை டிஸ்சார்ஜ் செய்து கூட்டிக் கொண்டு போய் விட்டதாகவும் அக்கவுண்ட்ஸில் கூறினார்கள். யாரென்று கேட்டதற்கு தெரியவில்லை என்ற பதில்தான் கிடைத்தது. அபி மனதுக்குள் லக்ஷ்மி எங்கிருந்தாலும் பத்திரமாய் பாதுகாப்பாய் இருக்க வேண்டுமே என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டாள்.
இரண்டு நாட்கள் கழித்து நந்தினியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
நந்தினி உள்ளே வந்து தன்னுடைய அறையில் படுத்து விட, சிவசங்கரனும் ஹரியும் அடுத்த அறையில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அபி இதில் கலந்து கொள்ளவில்லை. அவள் பொன்னம்மாளுடன் சேர்ந்து சமையலை கவனிக்கச் சென்றுவிட்டாள்.
வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டு சிவசங்கரன் எழுந்து சென்று கதவைத் திறந்தார்.
“நான் உள்ள வரலாமா?” என்று கேட்டபடி ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளே நுழைந்தாள்.
நந்தினியும் யாரென்று பார்க்க வெளியே வந்தாள்.
பரிச்சயமான குரல் கேட்டு அங்கு வந்த ஹரி, அங்கே தன் அலுவலகத்தில் பணிபுரியும் நிஷா கர்ப்பிணியாய் நின்றிருந்ததைப் பார்த்து குழம்பினான்.
இவ எப்ப கல்யாணம் பண்ணிகிட்டா? கர்ப்பமா வேற இருக்காளே!? இது நடக்க சான்சே இல்லையே? ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என்ன ப்ரபோஸ் பண்ணினவ இப்ப எப்டி இவ்ளோம் பெரிய வயத்தோட வர முடியும்? என்ன ப்ரபோஸ் பண்ணும்போது ப்ரக்னென்ட்டா இருந்தாளோ? ஒரு வேள இதுக்காகதான் ப்ரபோஸே பண்ணினாளோ? ஆனா முந்தா நேத்து கூட பாத்தேனே! இவ்ளோம் பெரிய வயிறு இல்லியே! ரெண்டு நாள்ல வயிறு பெரிசாய்டுமா? ஒண்ணும் சரியில்லியே! என்று பலவாறு மனதில் நினைத்துக் கொண்டான்.
“சொல்லுமா! உனக்கு யாரப் பாக்கணும்?”
“நான் இந்த வீட்டுப் பெரியவங்களதான் பாக்க வந்தேன்.”
“சொல்லுமா! நானும் இந்த வீட்டுப் பெரியவன்தான்.”
“ஹரி........” என்று இழுத்தாள்.
“என் பையன்!”
“இந்தக் குழந்தைக்கு உங்க பையன்தான் அப்பா! இதுக்கு ஒரு வழி சொல்லுங்க!” என்று தன் வயிற்றைக் காட்டிக் கேட்டாள். இதைக் கேட்ட மூவரும் அதிர்ந்தனர்.
“வாட் நான்சென்ஸ்? மிஸ் நிஷா! என்ன விளையாட்டு இது?” ஹரி கோபமாகக் கேட்டான். ஹரியின் கோபமான பேச்சைக் கேட்டு ஹாலுக்கு வந்தாள் அபி.
“நீங்க என்கிட்ட விளையாடிட்டு இப்ப என்ன கேள்வி கேக்கறீங்களா?” சாவதானமாக பதில் சொல்லி எதிர் கேள்வி கேட்டாள்.
“ஹரி? என்னடா இதெல்லாம்? இந்தப் பொண்ண உனக்கு தெரியுமா?” சிவசங்கரன் கேட்டார்.
“அப்பா! இவ என் பி ஏ! மிஸ் நிஷா!” என்றான்.
“பரவால்ல! எங்க என்ன தெரியவே தெரியாதுன்னு சொல்லிடுவீங்களோன்னு நெனச்சேன். உங்க பி ஏ - ன்னு ஞாபகம் வெச்சுருக்கீங்களே!” என்று ஏளனமாய்க் கேட்டாள் நிஷா.
“ஷட் அப்! இங்க எதுக்காக வந்திருக்கீங்க?” கண்டிப்புடன் கேட்டான் ஹரி.
“வேற எதுக்கு? இதோ என் வயித்தில வளருதே உங்க குழந்தை! அதுக்கு ஒரு நல்ல வழி சொல்வீங்கன்னுதான் வந்தேன்.”
“ஹரி! என்னடா இவ இப்டி சொல்றா?” என்றாள் நந்தினி.
அபிக்கு காலின் கீழே பூமி நழுவியது போல இருந்தது.
“எனக்கும் இவ கர்ப்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல!” என்றான்.
“ஏன் ஹரி பயப்படறீங்க! தைரியமா ஒத்துக்கோங்க. பொம்பள நானே பயத்தையெல்லாம் தூக்கி வீசிட்டு தைரியமா முன்னால வந்து சொல்றேன். உங்களுக்கென்ன பயம் வேண்டிக் கிடக்கு. நானும் நீங்களும் லவ் பண்ணினது, நீங்க என் கூட ஜாலியா இருந்தது, இப்ப குழந்தை உண்டானப்றம் என்ன இங்க வந்து இப்டி பேசச் சொன்னது, எல்லாம் சொல்லுங்க ஹரி!”
“ஹரி? என்னடா சொல்றா இவ?” - கேட்டாள் நந்தினி!
“ம்மா. இவ பொய் சொல்றாம்மா!” என்றான்.
“ஹரி! நீங்க என்ன இப்டி ஏமாத்துவீங்கன்னு சத்யமா நான் நெனச்சு கூட பாக்கல!” என்று சொல்லிவிட்டு அழுதாள் நிஷா.
அவ ஏன் இப்டி சொல்றா? என்று யோசித்தபடி ஹரியின் அருகில் சென்றாள் அபி!
நிஷா, ஹரியின் மிக அருகில் வந்து, “உங்க வாழ்க்கைல இனிமே நான் மட்டும்தான்னு அன்னிக்கு என்கிட்ட சொன்னீங்கல்ல! ஏன் பயப்படறீங்க?” என்று கேட்டுக் கொண்டே அபியை பிடித்து பின்னால் தள்ளப் பார்க்க, அபியோ நிஷா விழுந்துவிடப் போகிறாளே என்று நிஷாவைப் பிடித்தாள்.
நிஷாவின் கையைப் பிடித்த அபிக்கு அவளுடைய நாடித் துடிப்பு உண்மையை காட்டிக் கொடுத்தது!
அபிக்கு சட்டென்று எல்லாம் புரிந்து போயிற்று!
நானே ஒரு தில்லாலங்கடி! எங்கிட்டயேவா? வாடீ... என் சக்காளத்தி.....
மாட்டீகிச்சே... மாட்டிகிச்சே.... என்று ஹிப் பாப் ஆதியின் பாடல் பின்ணணியிசையாக அபிக்குக் கேட்டது!
அபி நிஷாவின் கையைப் பிடித்தபடியே பேசினாள்.
“முதல்ல நீங்க காதல் சொன்னீங்களா? இல்ல அவரா?”
"ஏய்! பட்டிக்காடு.... தள்ளிப் போ!" என்றாள் நிஷா!
ஓஹோ.... நா படிச்சவன்னு ஒனக்கு தெரியாதுல்ல..... மவளே! ஒனக்கு இருக்குடீ.... என்று நினைத்த அபி,
"ஐய... சொம்மா சொல்லுமா... பஸ்ட்டு ஐ லவ்வு யூன்னு அவுரு சொன்னாரா... இல்ல நீ சொன்னியா...." என்று பக்கா சென்னைத் தமிழில் அபி கேட்டதும் உள்ளே வேலையாயிருந்த பொன்னம்மாவுக்கு வியப்போடு சிரிப்பும் வந்தது!
ஐயியோ... எங்க அபிம்மாவ பத்தி தெரியாம வந்து மாட்டிகினியே பொண்ணு.... என்று தனக்குள் நினைத்து சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டாள்!
அப்போதும் நிஷா பதில் சொல்லவில்லை!
நந்தினி அபியைப் பார்க்க, அபியின் முகத்திலிருந்த புன்னகை, நந்தினிக்கு எதையோ உணர்த்திவிட்டது! நந்தினிக்கு அபியின் விளையாட்டு புரிந்தும்விட்டது!
எலி தானா வந்து பொறிக்குள்ள மாட்டிகிச்சு! அபிம்மா! இன்னிக்கு உன் காட்டுல மழைதான்! சும்மா பட்டைய கௌப்பு! என்று நினைத்துக் கொண்டாள் நந்தினி!
சிவசங்கரனுக்கும் அபியின் அறிவுக் கூர்மை பற்றியும் அவளுடைய குறும்புத்தனங்களையும் பற்றித் தெரிந்ததால், அவள் ஏதோ செய்யப் போகிறாள் என்று புரிந்து விட்டது!
அபிக்கு அவள் ஒழுங்காக பதிலளிக்காததால் சிவசங்கரன் அதையே நிஷாவிடம் கேட்டார்!
“முதல்ல நீ ப்ரபோஸ் பண்ணினியா? இல்ல என் மகனா?”
“ஹரிதான் ப்ரபோஸ் பண்ணினார் அங்கிள். நான் உடனே ஒத்துக்கல. கொஞ்ச நாள் போக்கு காட்டிட்டு அப்றம் ஒத்துகிட்டேன்.”
“ஏன் உடனே ஒத்துக்கல?” - சிவசங்கரன்!
“ஹரி ஆஃபீஸ்ல எல்லா பொண்ணுங்க கிட்டயும் வழியற மாதிரி என்கிட்டயும் வழியறாருன்னு நெனச்சேன்! அப்றம்தான் நிறைய டெஸ்ட் பண்ணி என்ன லவ் பண்றாருன்னு கன்ஃபர்ம் பண்ணிகிட்டேன்.”
“லவ்வுக்கே இவ்ளோ டெஸ்ட் பண்ணவ, மேரேஜ்க்கு முன்னாடி இதுக்கு ஏன் ஒத்துகிட்ட?” நிஷாவின் பெரிய வயிற்றைக் காட்டிக் கேட்டாள் நந்தினி.
“பயம் ஆன்ட்டி! பயம்!"
"பயமா? யாருக்கு? ஹரிக்கா?"
"ஆமா ஆன்ட்டி! ஹரிக்கு உங்க கிட்ட சொல்ல பயம் ஆன்ட்டி! அதுனால உங்க முன்னாடி இப்டி வந்து நின்னா நீங்க ஒத்துப்பீங்கன்னு! ஆனா அதுக்குள்ள நீங்க இந்த பட்டிக்காட்டு அபிய கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க!” என்று குற்றம் சாட்டினாள் நிஷா.
“ஆமா அத்த. இவங்க வயிறு பெரிசாகறதுக்குள்ள நான் வந்துட்டேன். என்ன அத்த இப்டி பண்ணிட்டீக.... பாவம் இவிங்க..... ஆமா நிசா..... இப்ப எத்தனி மாசம்?” - அபி!
“இதென்ன கேள்வி! ஆறு மாசமாகுது!”
அபியும் நிஷாவும் பேசுவது எதுவும் ஹரிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
“இல்லையே! பாத்தா எட்டு மாசம் மாதிரி இருக்கு! ஏன் அத்த? எட்டு மாசத்துக்குதானே வயிறு இவ்ளோம் பெரிசா தெரியும்?” என்று அபி தன் இரண்டு கைகளையும் விரித்துக் காட்டிக் கேட்டாள்!
நந்தினி மனதுக்குள், நீ ஜமாய் அபி! என்று நினைத்தாள்.
“சொல்லுங்க அத்த!” என்று அபி சிணுங்கினாள்!
“ஆமா!” மனதுக்குள் சிரித்தபடி கூறினாள்.
நிஷா தடுமாறினாள்.
“ஆமா! நான்தான் கவனமில்லாம சொல்லிட்டேன். எட்டு மாசம்தான் ஆகுது!”
“எட்டு மாசம் ஆயிடுச்சுன்னா, இப்பவே ப்ரசவமாகற மாதிரி வலிக்க ஆரமிச்சுடுமே? உங்களுக்கும் வலிக்கிதா?” - அபி!
ஹரி பொறுமையிழந்தான்.
“வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்?” என்று கத்தினான்!
“நெசமாதேன் மாமா! எட்டு மாசத்துக்கே ப்ரசவமாகற மாதிரி வலிக்க ஆரமிச்சுடும். மயக்கம் வரும். வாந்தி வரும். ஒண்ணுமே சாப்பிட முடியாது. அப்டி இருக்கறச்சே நடு நாக்கில ஒரே ஒரு சூடு போட்டா வாந்தி நின்னுடும்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாக. உங்க கம்பெனில வேல பண்றவக. உங்க புள்ளய சுமக்கறாக. இவுகளுக்கு இது கூட செய்ய மாட்டேனா?” என்று ஹரியிடம் சொல்லிக் கொண்டே நிஷாவின் கையைப் பிடித்து சமையலறைப் பக்கம் தள்ளிக் கொண்டு போனாள்.
“அது என் குழந்தையில்ல!” கடுப்பாகக் கூறினான் ஹரி.
“பொன்னம்மாக்கா! கரண்டிய அடுப்பில சூடு பண்ணுங்க. இவங்களுக்கு நடு நாக்கில சூடு போடணும்!” என்று கூவிக் கொண்டே நிஷாவை இழுத்துக் கொண்டு சென்றாள்.
ஆஹா... போட்டாய்யா... ஒரு போடு! என்று பொன்னம்மாளும்,
அப்டி போடு! என்று சிவசங்கரனும்,
பின்ன! அபியா? கொக்கா? என்று நந்தினியும் தங்கள் மனதுக்குள் நினைத்து சிரித்துக் கொண்டார்கள்!
“ஏய்! என்ன செய்யற! விடு! என்ன விடு! எனக்கு ஒண்ணும் ஆகல! மயக்கம் வரல! வாமிட்டும் இல்ல! விடு என்ன! ஸார் உங்க வைஃப் கிட் சொல்லுங்க ஸார். என்ன விடச் சொல்லுங்க ஸார்!”
“என்ன நிசா! இவ்ளோ நேரம் ஹரி ஹரின்னு ஹரி பஜன பண்ணீக! இப்ப ஏன் ஸார்ன்னு கூவறீக! சும்மா ஹரின்னே கூப்பிடுங்க!” என்ற அபி,
“அக்கா! கரண்டி ரெடியா?” என்று குரல் கொடுத்தாள்.
“இதோ! இந்தா அபிம்மா! சூடா கீது கரண்டி! பாத்து புடி!” என்று பழுக்கக் காய்ச்சிய கரண்டியை எடுத்து வந்து அபியிடம் நீட்டினாள் பொன்னம்மா!
அபி ஒரு கையால் நிஷாவை பிடித்தபடியே மறுகையால் கரண்டியை வாங்கிக் கொண்டாள். நிஷாவுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்கத் தொடங்கியது.
“வேணாம். சூடு போடாதீங்க. எனக்கு ஒண்ணுமில்ல. ஸார்! ப்ளீஸ்! எனக்கு சூடு வேணாம். காப்பாத்துங்க ஸார்!” நிஷா கத்தத் தொடங்கினாள்.
“இல்ல நிசா! லேசா! ஒரே இழுப்புதான். கொஞ்சமாதான் வலிக்கும். அப்றம் பழகிடும். ஒழுங்கா காட்டுங்க. இல்லன்னா வேற எங்கியாவது பட்டுடப் போகுது.” என்று கூறிக் கொண்டே கரண்டியை நிஷாவின் முகத்தருகே காட்டினாள்.
நந்தினியும் சிவசங்கரனும் சும்மாயிருக்க, ஹரி பதறினான்!
"அபி.... நீ என்ன பண்ற.... அவள விடு!" என்று அதட்டினான்! அபி இதற்கெல்லாம் அசருபவளா என்ன?
நிஷாவால் ஒன்றும் செய்யமுடியாமல், “இல்ல! நான் சூடு போட்டுக்க மாட்டேன். எனக்கு சூடு வேணாம்.” என்று கத்தினாள்.
“எட்டு மாசமானா சூடு போட்டுக்கணும் நிசா!” கரண்டியை இன்னும் அருகே கொண்டு வந்தாள் அபி.
“எட்டு மாசமாகல! எனக்கு எட்டு மாசமாகல!”
“இல்ல உன் வயித்தப் பாத்தா எட்டில்ல ஒம்போது மாசம் மாதிரி தெரியுது. அப்ப நீ ரெண்டு சூடு போட்டுக்கணும்!”
“எட்டு மாசமும் இல்ல! ஒம்போது மாசமும் இல்ல! நான் ப்ரக்னென்டே இல்ல! என்ன விடு! சரியான பட்டிக்காடு!” என்று கூறிக்கொண்டு தன் சுடிதாருக்குள் கையை விட்டு வயிற்றில் கட்டியிருந்த துணி மூட்டையை கழற்றி வீசினாள்.
"அப்டி வாடீ வழிக்கு!" என்ற அபி கரண்டியை ஓரமாக கீழே விட்டெறிந்தாள்.
“எனக்கு அது முன்னாலயே தெரியும்! ஆனா அத உன் வாயாலயே சொல்ல வெக்கணும்னுதான் இப்டி பண்ணினேன்.” என்றாள் அபி.
நிஷாவுக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது!
“சொல்லு! ஏன் இங்க வந்து இப்டி ஒரு பொய் சொன்ன? எதுக்கு அவர் மேல இப்டி ஒரு பழியப் போட்ட?” அபி கேட்டாள்.
"உன்னாலதான்.... நா அவர ப்ரபோஸ் பண்ணினப்ப அவர் என்ன வேணாம்னு ரிஜக்ட் பண்ணினார்... சரின்னு நா விட்டுட்டேன்....
ஆனா அன்னிக்கு அம்பது லட்ச ரூபா பேங்க் டென்டர் சப்மிட் பண்ண சீரியசா வேல பண்ணிகிட்டிருக்கும்போது, எங்க வேலையில நீ குறுக்க வந்த... காபிய கொட்டி எல்லா டாக்குமென்ட்ஸையும் நாசம் பண்ணின... அன்னிக்கு சார் ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டார்....
உன்னாலதான்..... படிக்காத உன்னாலதான் இது மாதிரி தப்பு நடந்துச்சு.... இதே ஒரு படிச்சவ இருந்திருந்தாள்ன்னா அன்னிக்கு அப்டி ஒரு தப்பு நடந்திருக்காது... அந்த டென்டர் எங்களுக்கு கிடைச்சிருக்கும்....
ஆன்ட்டியோட கம்பல்ஷன்ல உன்ன கல்யாணம் பண்ணிகிட்டு சார் படற கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல....
அதான் சாரை உன் கிட்டேந்து பிரிச்சி அவருக்கு நல்ல துணையா நான் இருக்கணும்னு முடிவு பண்ணிகிட்டேன்... அதுக்குதான் இந்த ட்ராமா! போதுமா!
மரியாதையா சார் வாழ்க்கைலேர்ந்து ஓடிடு.... இல்லன்னா ஓட வெப்பேன்!" என்றாள் நிஷா கோபமாக!
"ஓ....... ஷட் அப் நிஷா! நா கஷ்டப் படறேன்னு உனக்கு தெரியுமா? உன்கிட்ட வந்து நா சொன்னேனா? லூசு மாதிரி இங்க வந்து இப்டி சில்லியா பிஹேவ் பண்ண உனக்கு வெக்கமாயில்ல? கெட் ஔட்!" என்று ஹரி நிஷாவைப் பார்த்து கோபமாகக் கத்தினான்!
"ஏன் சார்? ஏன் இப்டி கோவப்படறீங்க... உங்களுக்காகதானே நா பேசிகிட்டிருக்கேன்.... நீங்க இப்டி அடங்கி போறதினாலதான் உங்க பிஸ்னஸ்ல அவ்ளோ லாஸ்! நா உங்க கூட இருந்தா இப்டிலாம் நடக்க விடவே மாட்டேன்...."
"ஓ.... கமான்... உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதா.... இங்க நின்னு தேவையில்லாதத பேசி என் கோவத்த கௌப்பாத.... போ..." என்றான் ஹரி திரும்பவும்!
நிஷா சொன்னதைக் கேட்ட அபிக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சியாக இருந்தது! ஆனால் உடனேயே சுதாரித்துக் கொண்டாள்.
"ஐயோ மாமா! உங்களுக்கு ரெம்ப கஸ்ட்டத்த குடுத்துபுட்டேன்.... என்னிய மன்னிச்சி போடுங்க மாமா.... ஆனா அதுக்காக இந்த பட்டிக்காட்டு அபிய வேணாம்னு சொல்லிப் போடாதீக மாமா...." என்று அபி ஒப்பாரி வைத்தாள்!
இதைக் கேட்ட நந்தினிக்கும் சிவசங்கரனுக்கும் சிரிப்பு வந்தது! தங்கள் சிரிப்பை கட்டுப்படுத்த அவர்கள் பெரு முயற்சி செய்தனர்!
ஆனால் ஹரிக்கு அபியின் ஒப்பாரி சுத்தமாய் பிடிக்கவில்லை!
"வில் யூ ஸ்டாப் யுவர் நான்சென்ஸ் அபி!" என்று அபியைப் பார்த்துக் கத்தினான்!
இதைக் கேட்ட நிஷா, அபியைப் பார்த்து,
"அவரு என்ன சொல்றாருன்னு புரியலையா அபி?" என்று நக்கலாகக் கேட்க,
"ஐயோ! ரெண்டு லூசுப் பொம்பளைங்க மத்தியில என்ன மாட்டி வுட்டியே ஆண்டவா!" என்று வாய் விட்டுப் புலம்பிக் கொண்டே ஹரி தன் தலையில் அடித்துக் கொண்டான்!
அபி ஹரியை முறைக்க, நந்தினியும் சிவசங்கரனும் இப்போது வாய்விட்டுச் சிரித்தனர்!
இதைப் பார்த்த நிஷா குழம்ப, அப்போது அங்கு வந்த ஹரியின் அலுவலக மேலாளர் நவீன், நிஷாவை பிடித்து இழுத்துக் கொண்டு போய் அவள் காதில் எதையோ சொன்னான்!
இதைக் கேட்ட நிஷா அதிர்ச்சியாகி அபியைப் பார்க்க,
"என்ன மிஸ் நிஷா? உண்மை தெரிஞ்சிருச்சா?" என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஸ்டைலாகக் கேட்டாள்!
"நீ.... நீ.... படிச்சவளா? ஆனா...." என்று நிஷா கேட்டாள்.
"ஆமா.... வெறுமனே டிகிரீ படிச்சவ இல்ல.... டாக்டருக்கு படிச்சவ.... அதுவும் கார்டியாலஜிஸ்ட்... போறுமா?" என்றாள் நந்தினி!
"அப்டீன்னா..... அன்னிக்கு தெரிஞ்சேதான் அந்த டென்டர் டாகுமென்ட்ஸ நாசம் பண்ணினியா?" என்று நிஷா கோபமாகக் கேட்க,
"நிஷா! அபி ஒரு நாளும் இது மாதிரி சில்லியான விஷயத்த செய்ய மாட்டா!" என்று ஹரி சொன்னதைக் கேட்டதும் அபி உட்பட அனைவரும் வியந்தனர்!
"உங்கள இவ படிக்காதவன்னு சொல்லி ஏமாத்தியிருக்கா... உங்க கம்பெனிக்கு வர வேண்டிய அம்பது லட்ச ரூபா டென்டர இவ சூழ்ச்சி பண்ணி நாசம் பண்ணியிருக்கா.... அதனால பல லட்ச ரூபா உங்க கம்பெனிக்கு லாஸ் ஏற்பட்டிருக்கு.... ஆனா நீங்க இவளுக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்ட பேசறீங்க.... ரொம்ப நல்லாயிருக்கு சார்!" என்று நிஷா ஹரியைப் பார்த்து கோபமாகக் கேட்டாள்!
"நிஷா! இந்த டென்டர் டாகுமென்ட்ஸ் எப்டி நாசமாச்சு.... யாரால நாசமாச்சுன்னு எல்லா விவரமும் எனக்கு ரொம்ப நல்லா தெரியும்.... உன் மரியாதைய காப்பாத்திக்கணும்னு நெனச்சா...." என்று கூறி விட்டு தன் வீட்டு வாசல் பக்கமாகக் கை காட்டி அவளைப் போ என்று செய்கையால் சொன்னான்!
நிஷாவுக்கு ஆத்திரமாய் வந்தது!
"என்ன சார்? தப்பு பண்ணினது உங்க வைஃப்! அவள அதட்ட துப்பில்ல.... என்னமோ என்ன மெரட்டறீங்க?" என்றாள் கோபம் கொப்பளிக்க!
இதைக் கேட்ட நவீன் தன் தலையில் அடித்துக் கொண்டான்!
"தட்ஸ் இட்!" என்ற ஹரி, தன் கைப்பேசியை எடுத்து அதில் ஒரு காணொலியை காட்டினான்!
இரண்டு நிமிடங்கள் ஓடக் கூடிய அந்தக் காணொலியில் நிஷா யாரிடமோ தன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாள்!
"அந்த டென்டருக்கு ஹரி இன்னிக்கு டாகுமென்ட்ஸ் சப்மிட் பண்ண மாட்டான்! அதுக்கு நா கேரண்ட்டீ!"
"......"
"ஆமா.... என்ன வேணாம்னு ரிஜக்ட் பண்ணிட்டு இப்ப ஒரு பட்டிக்காட்ட கல்யாணம் பண்ணிகிட்டு தன் வாழ்க்க ரொம்ப நல்லா இருக்கற மாதிரி நடிச்சிகிட்டுருக்கான்.... படிச்ச பொண்ண ஏன் ரிஜக்ட் செஞ்சோம்னு அவன் வருத்தப் படணும்ல.... அதுக்குதான்...."
என்று அவள் பேசி முடித்து கைப்பேசியை அணைத்தாள். அத்துடன் அந்தக் காணொலி முடிந்தது!
"என்ன நிஷா? இது போதுமா? இன்னும் வேணுமா?" என்று கேட்ட ஹரி,
"இருக்கு! இன்னும் இருக்கு!" என்று மற்றொரு காணொலியை ஓட்டினான்.
அதிலும் நிஷா தன் கைப்பேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள்!
"இங்க பாருங்க! நீங்க சொன்ன மாதிரி நா செஞ்சுட்டேன்! ஹரி டென்டர் சப்மிட் பண்ண முடியாத மாதிரி நா செஞ்சுட்டேன்.... நா கேட்டத நீங்க எப்ப தருவீங்க...."
"....."
"ஓ ரியலி.... என் அக்கௌன்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டீங்களா.... தேங்க்யூ.... தேங்க்யூ சோ மச்!" என்று கூறி நிஷா தன் கைப்பேசிப் பேச்சை முடித்தாள்!
"போதுமா நிஷா?" என்று ஹரி கோபமாகக் கேட்டான்!
"இல்ல... இல்ல.... அது.... வந்து.... இது.... இது பொய்... இதுல... என்ன.... " என்று உளறினாள் நிஷா!
"என்ன? பேச்சு வரலியா?" என்று ஹரி கேட்க,
"இல்ல... நீங்க வேணும்னே என் மேல பழி போட பொய்யா ஒரு வீடியோவ ரெடி பண்ணியிருக்கீங்க..." என்று அவள் குற்றம் சாட்டினாள்!
"அடச்சீ வாய மூடு.... உன்ன கையும் களவுமா பிடிச்சிருந்தும் உன் மேல ஆக்ஷன் எடுக்காம இருக்கேன் பாரு.... என்ன சொல்லணும்...." என்று நிஷாவிடம் கோபமாகச் சொன்ன ஹரி, நவீனைப் பார்த்து சொன்னான்!
"நவீன்! உன் மூஞ்சிக்காக இவள சும்மா வுடறேன்! கூட்டிட்டு போ!" என்றான்!
"சாரி சார்! மேம்! சாரி மேம்!" என்று ஹரியிடமும் அபியிடமும் கூறிய நவீன், நிஷாவின் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல முயல,
"ஏய்.... என்ன விடு..." என்று நவீனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட நிஷா ஹரியிடம் திரும்பி கேட்டாள்!
"இவன் மூஞ்சிக்காக என்ன விடறீங்களா.... இது என்ன புதுசா கதை வுடறீங்க?"
"சாரி நவீன்!" என்ற ஹரி, தன் கைப்பேசியை எடுத்து யாரையோ அழைக்க முற்பட, நவீன் அவசரமாக வந்து ஹரியை தடுத்துவிட்டு, நிஷாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்!
"சார் எவ்ளோ பெருந்தன்மையா உன்ன மன்னிச்சிருக்கார்! ஆனா... இன்னும் உன் திமிர் அடங்கலல்ல.... நீயெல்லாம் எப்டிடீ எங்கம்மா வயித்தில பொறந்த.... உன்ன என் தங்கச்சின்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு.... சே!" என்றான்!
ஹரியைத் தவிர மற்றவர்கள் எல்லாம் அதிர்ந்தனர்!
நிஷாவுக்கும் அதிர்ச்சி!
"எப்டி தெரியும்? இவருக்கு எப்டி தெரியும்? நீ சொன்னியா?" என்று நவீனைப் பார்த்து நிஷா கோபமாகக் கேட்டாள்!
"ஆமாடீ.... சாருக்கு கொஞ்ச நாளாவே உன் மேல டௌட்டு.... அதான் யாருக்கும் தெரியாம உன் கேபின்ல எக்ஸ்ட்ராவா ரெண்டு சிசிடிவி கேமரா ஃபிக்ஸ் பண்ணி தன் மொபைல்ல கனெக்ட் பண்ணி வெச்சிகிட்டாரு.... எனக்கு கூட தெரியாது.... அன்னிக்கு இந்த சிசிடிவி ரெக்கார்டிங் பார்த்ததுமே உன்ன போலீஸ்ல ஹேன்ட் ஓவர் பண்ண ட்ரை பண்ணினார்! நாந்தான் நீ என் தங்கச்சி அப்டீன்னு சொல்லி அவர உன் மேல ஆக்ஷன் எடுக்க விடாம தடுத்தேன்! ஆனா இப்ப அதுக்காக வருத்தப் படறேன்...." என்றான் நவீன்!
"சே.... நீயும் உங்கம்மாவும் என் வாழ்க்கையில மண்ணள்ளிப் போடணும்னே அலையறீங்க.... என்ன நிம்மதியாவே வாழ விட மாட்டீங்களா?" என்று நிஷா கோபத்துடனும் ஆற்றாமையுடனும் அழுதாள்!
அப்போது வாசல் கதவைத் தட்டிவிட்டு அபியின் பால்ய வயதுத் தோழனாயிருந்து இப்போது தோழியாய் மாறியிருக்கும் லக்ஷ்மி தன் பெற்றோருடன் வந்தாள்!
லக்ஷ்மியைப் பார்த்த அபி அவளருகே ஓட, உள்ளே வந்த லக்ஷ்மியோ நேராக ஹரியிடம் வந்தாள்!
"வாங்க லக்ஷ்மி!" என்றான் ஹரி!
"ரொம்ப தேங்க்ஸ் சார்! நீங்க செஞ்ச உதவிய என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்!" என்றாள் லக்ஷ்மி.
"ஐயோ... இதிலென்ன இருக்கு! நா ஒண்ணுமே பண்ணல!" என்றான் ஹரி!
பார்த்துக் கொண்டிருந்த ஹரியின் பொற்றோருக்கு ஒன்றும் விளங்கவில்லை! ஆனால் அமைதியாக இருந்தார்கள்!
அபி ஒருவித மகிழ்ச்சி கலந்த வியப்புடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்!
நவீன் அமைதியாக நிற்க, நிஷாவுக்கு லக்ஷ்மியைப் பார்க்கவே பிடிக்கவில்லை! முகத்தைச் சுளிக்கியபடி நின்றிருந்தாள்.
"என்ன சார் ஒண்ணுமே பண்ணலன்னு சொல்லிட்டீங்க.. என் வாழ்க்கைய எனக்கு திருப்பி குடுத்திருக்கீங்க! என்னப் பெத்தவங்களோட என்ன சேத்து வெச்சிருக்கீங்க! அதுக்கே உங்களுக்கு கோவில் கட்டி கும்புடணும் சார்! அதுக்கும் மேல என் மேற்படிப்புக்கு ஏற்பாடு செஞ்சிருக்கீங்க! அது மட்டுமில்லாம உங்க கம்பெனியிலயே எனக்கு வேல போட்டு குடுத்திருக்கீங்க! இதுக்கெல்லாம் நா எப்டி கைம்மாறு செய்யப் போறேன்னே தெரில சார்!" என்றாள் லக்ஷ்மி!
"அதெல்லாம் எதுவும் வேணாம் லக்ஷ்மி! நீங்க அபிக்கு மட்டும் தோழி இல்ல! எனக்கும் தோழிதான்!" என்றான் ஹரி!
"ரொம்ப தேங்க்ஸ் சார்!" என்று லக்ஷ்மி திரும்பவும் சொல்ல, அவளுடைய தந்தை ஹரியிடம் நன்றி சொன்னார்!
"என்ன பாவம் செஞ்சோமோ! இப்டி ஒரு புள்ள பொறந்துடுச்சேன்னு தப்பா நெனச்சிகிட்டிருந்தோம்! ஆனா நாங்க அவள தள்ளி வெச்சதுதான் பாவம்னு எங்களுக்கு புரிய வெச்சு எங்கள அவளோட சேத்து வெச்சுட்டீங்க! ரொம்ப நன்றி தம்பி!" என்றார் அவர்!
ஹரி லக்ஷ்மியையும் அவளுடைய பெற்றோரையும் தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தான்!
அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் ஹரி நிஷாவிடம் வந்தான்!
"இங்க பாரு நிஷா! தப்பு பண்றது மனித இயல்பு! உனக்கு திருந்தறதுக்கு ஒரு சான்ஸ் குடுத்தேன்! ஆனா நீ திருந்தல...
இந்த பொண்ணு லக்ஷ்மிய பாத்தியா? எந்த தப்புமே பண்ணாம குடும்பத்திலிருந்து தள்ளி வைக்கப் படட்டவங்க! என்னால ஒரு லக்ஷ்மிக்குதான் உதவ முடிஞ்சது! இப்டிலாம் சோத்துக்கே கஷ்டப்படறவங்க எத்தனையோ பேர் நம்ம நாட்டில இருக்காங்க!
இது மாதிரிலாம் நீ கஷ்டத்த அனுபவிக்கல.... ஆண்டவன் உனக்கு நல்ல பெத்தவங்கள குடுத்திருக்கார்! நீ தப்பு பண்ணினாலும் உன்ன அரவணைக்கற குடும்பத்த குடுத்திருக்கார்! இதுக்கு நீ ஆண்டவனுக்கு நன்றி சொல்லணும்!
நீ எனக்கு ஏற்படுத்தின நஷ்டம் கண்டிப்பா பெரிசுதான்! இல்லங்கல... மன்னிக்கறவன்தான் மனுஷன்! ஆனா மறக்கறவன் கடவுள்! நான் மனுஷன்தான்! கடவுள் இல்ல!
என்னால உன்ன மன்னிக்க முடியும்! ஆனா நீ பண்ணின தப்ப மறக்க முடியாது! அதனால தயவு செய்து.... என் கம்பெனி வேலைலேர்ந்தும், என் வீட்லேர்ந்தும்..... கெட் ஔட்!" என்றான்!
நிஷா தலை குனிந்தபடி வெளியேற, நவீன் ஹரியிடம் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அவள் பின்னால் போனான்!
ஹரி அவர்கள் போவதையே பார்த்தபடி தன் வீட்டுத் தோட்டத்தில் போடப்பட்டிருந்த சிமென்ட் பெஞ்சில் வந்து அமர்ந்தான்!
லக்ஷ்மியின் பெற்றோர் ஹரியின் பெற்றோருடன் பேசிக் கொண்டிருக்க, லக்ஷ்மி அபியிடம் ஹரிதான் தன்னை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து தன் பெற்றோர்களிடம் அழைத்துச் சென்றான் என்றும் தன்னை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தபோது, அவர்களிடம் வாக்குவாதம் செய்து அவர்களைச் சம்மதிக்க வைத்தான் என்றும் கூறினாள்!
அபிக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது!
லக்ஷ்மியும் அவள் பெற்றோரும் சிறிது நேரம் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்றார்கள்!
அபி தன் கணவனைத் தேடி வந்தாள்.
ஹரி தோட்டத்தில் அமர்ந்திருந்தான். அபிக்கு அவனிடம் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை. அவன் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
அபி மெதுவாக அவனை அழைத்தாள்.
“ஹரி!”
“ம்!” கண் விழித்தான்.
“ஸாரி! வந்து ........ வெரி ஸாரி! என்ன மன்னிச்சிடுங்க! உங்கள ஏமாத்தணும்ங்கறது என் நோக்கமில்ல.... உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சது! வாழ்ந்தா உங்க கூடதான் வாழணும்னு நெனச்சேன்! ஆனா அதுக்கு முறைப்படி உங்க கிட்ட பேசாம... லூசுத்தனமா நடந்துகிட்டேன்.... என்ன மன்னிச்சிடுங்க!" என்றாள்!
ஹரி ஒன்றும் பேசாமல் எழுந்து உள்ளே போனான்! அபிக்கு மிகவும் வேதனையாக இருந்தது!
என்ன இவரு... ஒண்ணும் சொல்லாம எழுந்து போறாரு.... ம்ஹூம்... இத இப்டியே விடக் கூடாது! இன்னிக்கு இதப் பத்தி பேசி ஒரு முடிவுக்கு வந்தே ஆகணும்! என்று நினைத்தபடி அவன் பின்னாலேயே போனாள்!
"என்ன ஹரி? ஒரு மாதிரி இருக்க?" என்று கேட்ட சிவசங்கரனுக்கு அவனும் பதிலளிக்கவில்லை!
"என்னாச்சு அபி!?" என்று கேட்ட நந்தினிக்கு அவளும் பதிலளிக்கவில்லை!
அவன் வேகமாக மாடியேறி நேராகத் தன்னுடைய அறைக்குள் நுழைய, பின்னாலேயே அவளும் நுழைந்தாள்!
"இப்ப என்ன வேணும் ஒனக்கு! அதான் உன்ன எல்லாரும் கொண்டாடறாங்களே.... அப்றம் என்ன உனக்கு? மகாராணி மாதிரிதானே இருக்க?" என்றான் கோபமாக!
அவள் கண்கள் குளம் கட்டியது!
"இங்க பாரு! இப்டி கண்ணுல தண்ணி வுட்டுகிட்டு நின்னாக்க எனக்கு செம்ம கோவம் வந்திடும்! போ! என் கண் முன்னால நிக்காத! போ இங்கேர்ந்து!" என்ன சொல்கிறோம் என்று புரியாமல் கடுமையாக வார்த்தையை விட்டான்!
அபிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது!
எதுவும் பேசாமல் தலை குனிந்தபடி ஒரு ட்ராவல் பேகில் தனக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வைக்கத் தொடங்கினாள்!
அவள் செய்வதைப் பார்த்த பின்னரே தான் என்ன சொன்னோம்! அவள் அதை எவ்வாறு புரிந்து கொண்டாள் என்று ஹரிக்கு விளங்கியது!
ஐயோ! ஹரி! அவ நெஜமாவே இங்கேர்ந்து போகப் போறா போலிருக்குடா! எதாவது சொல்லி அவளத் தடுத்து நிறுத்துடா! என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்!
தன் பையை அடுக்கிக் கொண்டவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல்,
"நா இங்கேர்ந்து போய்டறேன்! உங்க கண்ணு முன்னால வர மாட்டேன்! இனிமே உங்கள தொந்திரவு செய்ய மாட்டேன்!" என்று கூறிவிட்டு அவள் நகர,
"ஹலோ! டாக்டர் மேடம்! எங்க கௌம்பிட்டீங்க?" என்று நக்கலாகக் கேட்டான்!
அவள் எதையோ கூறத் தொடங்க, அவனுடைய கைப்பேசி சிணுங்கியது!
"ஒரு நிமிஷம் இரு!" என்று அவளிடம் கூறிவிட்டு தன் கைப்பேசி அழைப்பை எடுத்தான்!
அந்தப் பக்கம் யார் பேசினார்களோ, அவன் அவளைப் பார்த்து முறைத்தபடியே பேசினான்!
அவள் தன்னிலேயே மூழ்கியிருந்ததால் அவன் என்ன பேசுகிறான் என்று கவனிக்கவில்லை! கவனித்திருந்தால் அவன் தன் சீஃப் டாக்டரிடம்தான் பேசுகிறான் என்று அவள் கண்டு பிடித்திருப்பாள்!
சில நிமிடங்களில் பேசி முடித்தவன், கைப்பேசியை அணைத்து கட்டிலின் மேல் போட்டுவிட்டு,
"ம்... சொல்லுங்க டாக்டர் மேடம்! எங்க கௌம்பிட்டீங்க?" என்றான்.
"நீங்கதானே சொன்னீங்க.... உங்க கண்ணு முன்னாடி நிக்காத.... இங்கேர்ந்து போன்னு... அதான் போறேன்!"
"அதான் எங்க போறன்னு கேட்டேன்!"
"எங்கியோ போறேன்! உங்களுக்கென்ன?"
"ஓ.... அப்ப எங்கம்மாவ யாரு கவனிச்சுப்பா.... உங்க சீஃப் டாக்டர் என்னமோ என் சிஷ்யை எல்லாத்தையும் பாத்துப்பான்னு பெரிசா பில்ட் அப்பெல்லாம் வுட்டாரு.... நீ என்னடான்னா பொறுப்பேயில்லாம போறேன்னு கௌம்பிட்ட...."
"......." அவள் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள்!
"கேக்கறேன்ல... பதில் சொல்லுடீ...."
ம்க்கும்.... எவளையெல்லாமோ மன்னிப்பாராம்... என்ன மன்னிக்க இவருக்கு மனசு வராது... போடா... நீ ரொம்ப மோசம்! என்று தன் மனதுக்குள் புலம்பினாள்!
அப்போது அபியின் கைப்பேசி சிணுங்கியது!
வேண்டா வெறுப்பாக எடுத்துப் பேசினாள்! அழைத்தது வேறு யாருமல்ல, அவளுடைய அம்மா, இந்து!
"ம்ச்! என்னம்மா? எதுக்கு கூப்பிடறீங்க!?"
"...." இந்து என்ன சொன்னாளோ,
"ம்மா! நானே கடுப்பாயிருக்கேன்! போனை வெய்ங்கம்மா!" என்று கோபமாகக் கூறியபடி கைப்பேசி அழைப்பை துண்டித்தாள்!
அவள் பேசியதைக் கேட்ட ஹரியும் தன் பங்குக்கு அவளை கோபப்படுத்தினான்!
"உன்னதாண்டீ..." அவன் மேலும் உசுப்பினான்!
"ம்..... உங்களுக்குதான் என்ன மன்னிக்க மனசு வரலியே...." என்றாள்!
"என்ன மன்னிக்க மனசு வரலயா... என்ன உளறுற..."
"நா பண்ணினது தப்பு! என்ன மன்னிச்சிடுங்கன்னு நா சொன்னேன்ல..."
"ஓஹோ... மன்னிக்கலன்னா உடனே இங்கேர்ந்து போய்டுவியோ?"
"நீங்கதானே சொன்னீங்க! என் கண் முன்னால நிக்காத..." என்று அவள் கூறும் போதே அவன் குறுக்கிட்டு,
"கண் முன்னால நிக்காதன்னா கண் முன்னால உக்காரு.... அவ்ளோதானே!" என்றான்!
"இங்கேர்ந்து போய்டுன்னீங்களே?"
"போய்டுன்னு சொன்னேன்தான்.... ஆனா வராதன்னு சொல்லலியே!"
"இப்ப நீங்கதான் உளறுறீங்க...."
"சரிடீ... நா மனுஷன்! உன்ன மன்னிச்சுட்டேன்! ஆனா கடவுள் இல்ல! அதனால மறக்க மாட்டேன்!"
"நா பண்ணின தப்ப மறக்க மாட்டீங்க... அப்டிதானே?"
"மறக்க மாட்டேன்னு சொன்னேன்! படிக்காதவ மாதிரி நடிச்சுகிட்டு என்ன என்னல்லாம் பாடு படுத்தின.... எவ்ளோ சுத்தல்ல வுட்ட.... மாமா மாமான்னு கூப்ட்டு கூப்ட்டு எவ்ளோ டார்ச்சர் பண்ணின... எதையும் மறக்க மாட்டேன்...." என்று சீரியசாகக் கூறிக் கொண்டே அவளை இறுக்கமாக அணைத்தபடி,
"அதெல்லாம் திரும்பவும் வேணும் எனக்கு.... மரியாதையா மாமான்னு கூப்பிடு!" என்றான் அவள் காதில் காதலுடன்!
அவள் அவன் கைகளில் நெகிழ்ந்தபடி,
"என்ன மன்னிச்சிட்டீங்களா மாமா!" என்றாள்!
"லூசு! என்னமோ... சின்னதா கோவப்பட்டா உடனே சீரியசா எடுத்துப்பியா?"
"ஆனா..."
"ஆனாவும் இல்ல... ஆவன்னாவும் இல்ல.... இனிமே என்ன விட்டு போவேன்னு சொல்லவே கூடாது! எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்! சரியா!"
"ஆனா..."
"இப்பதானே சொன்னேன்.... ஆனாவும் இல்ல... ஆவன்னாவும் இல்லன்னு!?"
"ம்ஹூம்... அதில்ல.... எப்டி... மனசு மாறினீங்க...."
"அது இப்ப ரொம்ப முக்கியமா? அதான் மனசு மாறிட்டேன்ல.... அப்றம் என்ன?"
"பாத்தீங்களா... கோவப்படறீங்களே..."
"கோவப்பட்டா என்ன? நீதான் மாமா மாமான்னு மூச்சுக்கு முந்நூறு முறை கூப்பிட்டு என்ன கூல் பண்ணிடுவியே...."
"ம்..."
"நீ ஏன் என்ன கல்யாணம் பண்ணிகிட்ட? உண்மைய சொல்லணும்!"
"அது...... உங்களப் பாத்ததும் பிடிச்சுது! உங்களப்பத்தி தெரிஞ்சதும் உங்களுக்கு ஒரு நல்ல தோழியா, சிறந்த காதலியா, அன்பான மனைவியா, அத்தையவிட அதிகமா பாசம் காட்ற அம்மாவா நானே ஆயிடணும்னு நெனச்சேன். உங்க மன வருத்தமெல்லாத்துக்கும் நானே மருந்தா ஆகணும்னு நெனச்சேன். என் படிப்பு, வேலை எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு நான் ஒரு கைநாட்டுன்னு சொல்லி உங்க முன்னாடி வந்து வேலக்காரியா நின்னுடணும்ன்னு நெனச்சேன். அதனாலதான் உங்க கண்டிஷன் என்னன்னு தெரிஞ்சும் அத்தையப் பாத்து பேச எங்கப்பா வந்தார். அத்தைக்கும் என்ன பிடிச்சுது. நான் அப்பவே ரிசைன் பண்ணிடறேன்னுதான் சொன்னேன். அத்ததான் நான் அவன்கிட்ட சொல்லிக்கறேன். நீ இப்போதைக்கு லீவ் மட்டும் போடுன்னு சொன்னாங்க! அத்தைக்கு உடம்பு சரியில்லாம போய்ட்டதுனால வேற வழியில்லாம நான் உண்மைய சொல்ல வேண்டியதாப் போச்சு. இல்லன்னா நான் சத்தமில்லாம வேலைய ரிசைன் பண்ணிருப்பேன்!” என்றாள்.
"ஓ... அதான்! சீஃப் கிட்ட அப்டி சொல்லிட்டு வந்தியா?"
"என்ன சொன்னேன்?"
"நடிக்காதடீ.... வேலைய ரிசைன் பண்றேன்னு சொன்னியா?"
"அது வந்து!"
"சரி! ரிசைன் பண்ணிட்டு?"
"இல்லங்க... வேலைய ரிசைன் பண்ணிட்டு... என் சர்டிஃபிகேட் எல்லாத்தையும் கிழிச்சி...."
"லூசா நீ... இல்ல லூசா நீன்னு கேக்கறேன்! கிழிச்சிப் போடறதுக்கு சர்டிஃபிகேட் என்ன டிஸ்யூ பேப்பரா? இர்ரெஸ்பான்ஸிபுள் இடியட்!?!?"
"உங்களுக்கு படிக்காத பொண்டாட்டியா இருந்திடலாம்னு..."
"ஐயோ! கடவுளே! அம்மா! பரதேவதே! படிக்காத பொண்ணு வேணும்னு தெரியாம கேட்டுட்டேன்மா!
இப்ப என்ன ஆய்டுச்சுன்னு நீ இப்டியெல்லாம் பண்ற? அன்னிக்கு அந்த பூக்காரிகிட்ட நீ சொன்னல்ல? நீ பேரன் கேட்டியே! பேத்தி பொறந்தா பாக்க மாட்டியான்னு கேட்டல்ல?
அது மாதிரிதானே? உயரமா பொண்ணு வேணும்னு கேக்கறவனுக்கு குள்ளமா பொண்ணு அமையும்! நல்ல அழகான பொண்ணுன்னு கட்டிப்பான். அது அழகா இருக்கும் ஆனா மக்கா இருக்கும். அதே மாதிரிதான். நான் படிக்காத பொண்ணு வேணும்னேன். எனக்கு நல்லா படிச்ச பொண்ணு அமைஞ்சிருக்கு. அதுக்காக பிரிஞ்சு போவாங்களா? என்ன மடத்தனமா யோசிக்கற!?
பெரிசா தியாகம் பண்றாளாம்! வேலைய வுட்டுட்டு.... நம்ம வீட்டு டாய்லெட்ட கழுவப் போறியா? உனக்காக அங்க பேஷன்ட்ஸ் காத்துகிட்டிருக்காங்க! உன்ன மாதிரி டெடிகேட்டட் டாக்டர்ஸ் நாட்ல ரொம்ப கம்மி! உன்ன மாதிரி சேவை மனப்பான்மை அவ்ளோ சீக்கிரம் யாருக்கும் வந்திடாது அபி!
உன்ன நெனச்சி நா ரொம்ப பெருமைப் படறேன்! நா உன்ன மன்னிக்கணும்னு நீ எதிர்பாக்கறது அர்த்தமில்லாத ஒண்ணு....
தப்பு பண்றவங்க தான் மன்னிப்ப எதிர் பார்ப்பாங்க... நீ எனக்கு நல்லதுதான் பண்ணியிருக்க... எனக்கு அன்பான மனைவியா..... எங்கம்மாவுக்கு நல்ல மருமகளா.... இந்த வீட்ட அழகா நிர்வாகம் பண்ணி.... நல்ல நடத்தையோட.... இருந்திருக்க.... நா அத சரியா புரிஞ்சுக்காம உன் மேல கோவப்பட்டேன்... உண்மைய சொல்லணும்னா நாந்தான் உன்ன வேதனைப் படுத்திட்டேன்! அதுக்கு நீதான் என்ன மன்னிக்கணும்!
ரியலி! ஐ ஃபீல் அஷேம்ட் ஆஃப் மைசெல்ஃப்!" என்றான் அவன் உண்மையான வருத்தத்துடன்!
"ஐயோ... என்னங்க நீங்க போய் இப்டிலாம் பேசறீங்க.... நமக்குள்ள என்னங்க சாரில்லாம்..."
"அதேதான்! நமக்குள்ள நோ சாரி.... நோ தேங்க்யூ.... இப்பலேர்ந்து ஒன்லி லவ்.... ஓகே!" என்றான் அவன்!
"ஓகே!" அவன் கைகளில் குழைந்தபடி சிரித்துக் கொண்டே கூறினாள் அவள்!
“நீ என் தேவதைடா! நீ என் செல்லம்! என் உயிரே நீதான். என் வாழ்க்கை நீதான். என் வாழ்க்கைல நான் சம்பாதிச்ச பெரிய சொத்தே நீதான்! நீ மட்டும்தான். உன்னப் போக விடுவேனா? நான் உன்ன என் கண்ணுக்குள்ள வெச்சு பத்திரமா பாத்துப்பேன். சரியா!” என்றான் அபரிமிதமான காதலுடன்!
இப்போது ஹரியின் கைப்பேசி சிணுங்கியது! அவனுடைய மாமியார் இந்துமதிதான் அழைத்தாள்!
"அத்த சொல்லுங்க!"
"இல்ல மாப்ள! நாங்க ஹால் புக் பண்ணியாச்சு! கேட்ரிங் சொல்லி அட்வான்ஸ் குடுத்தாச்சு! சொந்தக்காரங்க எல்லரையும் கூப்ட்டுகிட்டு இருக்கோம்! அபிக்கு ட்ரஸ் செலக்ட் பண்லாம்னு கூப்ட்டா அவ கோவமா பேசறா? அதான்..."
"அதெல்லாம் ஒண்ணுமில்ல அத்த! நீங்க பயப்படற மாதிரி எதுவுமில்ல!"
"அப்ப... நம்ம ப்ளான்படி உங்க ரிசப்ஷன்க்கு ஏற்பாடு பண்ணிடலாம்தானே!"
"ஆமா அத்த! பண்ணிடலாம்! நா அப்பா அம்மாவ கூட்டிகிட்டு அபியோட நாளைக்கு மத்தியானம் கிளம்பி வந்திடறேன்!
அவளுக்கும் எனக்கும் ட்ரஸ்லாம் நானே பாத்து செலக்ட் பண்ணிடறேன்! நீங்க எதுக்கும் வொரி பண்ணிக்காதீங்க!
உங்க ஆசைப்படி மதுரைல இந்த ரிசப்ஷன ஜாம் ஜாம்னு நடக்கும்!"
"சரி மாப்ள! நா போய் மத்த வேலைகளை கவனிக்கறேன்! வெச்சிடவா?"
"சரி அத்த!"
ஹரி பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட அபி விழி விரிய அவனைப் பார்க்க,
"என்ன டாக்டர் மேடம்! அப்டி பாக்கறீங்க?" என்று கேட்டான்!
"உங்களுக்கு இவ்ளோ சகஜமா கூட பேசத் தெரியுமா?"
"எல்லாம் எம்பொண்டாட்டி அபியோட ட்ரெய்னிங்தான்! ஒரு நிமிஷம் கூட ஓயாம பேசிகிட்டே இருக்கற இந்த வாய் இருக்கே...." என்று கூறிக் கொண்டே அவளுடைய சிவந்த இதழ்களைத் தன் இதழ்களால் அவன் சிறை பிடித்தான்!
**********************
ஹரிக்கும் அபிக்கும் நடுவே இருந்த கலவரங்கள் யாவும் ஓய்ந்து அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அதிகமாகக் காதலிக்க, அவர்கள் இருவரும் என்றும் இது போல ஒற்றுமையுடன் வாழ வாழ்த்தி நாமும் விடை பெறுவோம்!
நன்றி! வணக்கம்!
Author: Annapurani
Article Title: எனது சொந்தம் நீ - 20 (Final)
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: எனது சொந்தம் நீ - 20 (Final)
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.