அத்தியாயம் - 10
சென்ற வாரத்தில் வந்த சம்யுக்தாவின் பிறந்தநாளைக் கொண்டாடவென எழில்மலரும், சம்யுக்தாவும் அந்த வார இறுதியில் சற்று உயர்ரக உணவகத்துக்குச் சென்றிருந்தார்கள்.“பர்த்டே அன்னைக்கு வெளியில் போலாம் எனக் கூப்பிட்டா ரொம்பவும் பிகு பண்ணிக்கிட்ட.. அவ்வளவு பிஸியா இருந்தியா?” என சம்யுக்தா, எழில்மலரிடம் குறும்பாகக் கேட்க,
“அடிப்பாவி. ட்ரீட் நீ கொடுக்கணும். போனா போகுதுன்னு நான் கூட்டிட்டு வந்தா. பர்த்டே அன்னைக்கு ரொம்.ப பிஸின்னு சொல்லிட்டு என்னையே குறைச் சொல்லறியா?” என்றாள் எழில்மலர்.
எழில்மலரும், சம்யுக்தாவும் எல்.கே.ஜியில் இருந்து பனிரெண்டாவது வரையில் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்தத் தோழிகள். பின்னர் இருவருக்கும் வெவ்வேறு துறையில் நாட்டமிருந்தாலும் அவர்களின் நட்பு இன்று வரையில் சிறிதும் தடங்கலில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
சமீபத்தில் கூட அவர்களின் இருபத்திஒன்றாவது நட்பு வருடத்தைக் கொண்டாட பெங்களூரு சென்று வந்தார்கள். இப்படி வருடா வருடம் அவர்கள் எங்காவது செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் இரு குடும்பங்களும் உடன் சென்றன.
இருவரும் வளர்ந்துவிட்ட பின்னர், விடுமுறை நாட்கள் ஒத்து வந்தால் மட்டுமே இரு குடும்பத்தினரும் இணைந்து செல்வார்கள்.
“பிறந்தநாள் அன்னைக்குக் கோவில் கோவிலா ஏறி இறங்கற மாதிரி, ரெஸ்டாரன்ட், ரெஸ்டாரன்ட்டா ஏறி இறங்கினேன். அதான் கொஞ்சம் பிரேக் எடுக்கலாம் என நினைச்சேன். ஆனா, அப்பா எங்கே சாப்பிடவிட்டார்? பேசியே கொன்னுட்டார்” எனக் குறும்பாக சம்யுக்தா சொன்னதும்,
“என்னடி ஆச்சு மாப்பிள்ளைப் பார்க்கிறது?” என எழில்மலர் கேட்டாள்.
நடந்தவற்றைச் சம்யுக்தா சொல்லவும், “பேசாமல் நீ லவ் பண்ணியிருந்தா உனக்கு பிரச்சனையில்லையே.. இப்போ பாரு அப்பா-அம்மா எவ்வளவு கஷ்டப்படறாங்க” என்றாள்.
“ஆமாம்.. நீ லவ் பண்ணி ஒரு கவிதை மழையைக் கொட்டிட்ட பாரு” என்றதும், கதிரின் முகம் எழில்மலரின் கண் முன் தோன்றிச் சிரித்தது.
“கவிதை என்ன? கூடிய சீக்கிரம் காவியமே எழுதறேனா இல்லையான்னு பாரு” என்றாள் எழில்மலர்.
“அடப்போடி.. இந்தக் காலத்துல நல்ல பசங்களைத் தேடிப் பிடிக்கிறது கஷ்டம்.. அதான் அந்தக் கவலையை அப்பா-அம்மாகிட்டே தள்ளிவிட்டுட்டேன்” என்றாள் சம்யுக்தா.
“அப்படி வர்றவன் மட்டும் நல்லவனா இருப்பான்ன்னு என்ன நிச்சயம்?” என அவளை மடக்கினாள் எழில்மலர். சம்யுக்தாவும், எழில்மலரும் எல்லாக் குணங்களிலும் ஒத்துப் போனாலும் ஒரேயொரு விஷயத்தில் மட்டும் நேரெதிர்.
கல்யாணம் என்றால் காதல் கல்யாணம் தான் சிறந்தது என எழில்மலர் நினைக்க, பெற்றோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் திருமணம் தான் நல்லது என அடித்துச் சொல்வாள் சம்யுக்தா. அதற்காக இருவரும் அடித்துக் கொண்டெல்லாம் இருக்க மாட்டார்கள்.
பஃபே முறை என்பதால் தேவையான உணவுகளைத் தங்கள் தட்டில் நிரப்பிக் கொண்டு தோழிகள் மீண்டும் அமரவும், “எல்லோருக்கும் வணக்கம்! வார இறுதியில் வழக்கமாக இங்கு இசைக்கச்சேரி நடக்கும் என்று நீங்கள் அனைவரும் அறிந்ததே” எனக் கணீரென்ற குரல் கேட்டது.
இசைக் கச்சேரி என்றாலும் மண்டையைப் பிளக்கும் இசையில்லாமல் அதே சமயத்தில் கர்நாட்டிக் இசை என்றில்லாமல் அனைவரும் கேட்டு ரசிப்பதைப் போல் ரம்மியமான இசையாகவே இருக்கும்.
“இன்று எதிர்பாரதவிதமாக இசைக்கச்சேரி நடைபெற இயலாததால்” என மேடையில் ஒருவர் பேசிக் கொண்டிருக்க, “நான் பாட்டுப் பாடப் போறேன்” எனத் திடீரென்று மேடையில் தோன்றினான் கதிர்.
“எங்கே ஓடறீங்க?. அட நில்லுங்க, சத்தியமா நீங்க இப்போ வெளில போக முடியாது. நான் பாடி முடிக்கிற வரைக்கும், கதவையெல்லாம் இழுத்து மூடியாச்சு. காத்துக் கூட கதவைத் தட்டிட்டுத் தான் வரும்” எனக் கதிர் சொல்ல, அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.
“இன்று ‘சிரிப்போம் சிந்திப்போம்’ என்ற புதிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கோம். இவர் கதிர்” என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கதிரை அறிமுகப்படுத்தினார்.
கதிரைப் பார்த்த சம்யுக்தா, “ஏய், நம்ம ஸெல்ப் தம்பட்டம்” என்றாள். அப்போது அவர்கள் பக்கத்து மேஜையில் வந்து அமர்ந்த ஒரு நடுத்தர வயது பெண்மணியின் காதில் அவர்கள் சொன்னது கேட்க, “உங்களுக்குத் தெரிஞ்ச பையனா?” என்றார்.
“ஒருமுறை தான் பார்த்திருக்கோம். ஆனால் பார்த்த அரை நொடியில் தன்னோட சரித்திரத்தை பேஸ்புக், வாட்ஸ் அப் இல்லாமல் ஒளிபரப்பின ஆளு” என்றாள் சம்யுக்தா.
“அப்படியா?” என அவர் வியக்க, “நம்பமுடியலையா? ஆளைப் பார்த்தா ஆவின் பாலைக் குடிக்கிற மூஞ்சி மாதிரி இருக்கும். ஆனா பேச்சைக் கேட்டீங்க, இல்லாத பாலைச் சுண்டவச்சு பால்கோவா கிண்டிடுவாரு” என்றாள் எழில்மலர்.
“அப்படியா?” என மீண்டும் அந்தப் பெண்மணி மேடையைப் பார்க்க, “நீங்களே கேளுங்க” என தோழிகள் மேடையைப் பார்த்தனர்.
“ஹலோ, யூ சீ.. ஒன்ஸ் அபான் ஏ டைம், நம்ம தமிழ்நாட்டுக்கு ரொம்பவும் ஒரு நல்ல விஷயம் நடந்தது” எனக் கதிர் ஆரம்பிக்க, சம்யுக்தாவும், எழில்மலரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
“என்ன நல்லதுன்னு யோசிக்கிறீங்க தானே? அது. நான். இந்த. மண்ணில்” என இடைவெளிவிட்டுச் சொன்ன கதிர், “பிறந்த தினம்” எனப் படுவேகமாகச் சொல்லவும், உணவகத்தில் இருந்தவர்கள் சிரித்தனர்.
“பார்க்கத் தான் இப்படிக் ‘காமெடிப் பீஸா’ இருப்பேன்.. ஆனா, நான் உங்களில் ஒருவன். நான் ஒரு ஆர்கிடெக்ட். ஆனால் வாரக் கடைசியில் மட்டும் இது மாதிரி ஹோட்டலில், ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ நிகழ்ச்சியை நடத்தறேன். இந்த ஹோட்டல்ல இது தான் முதல் முறை.
உங்களுக்குப் பிடிச்சிருந்தா உங்கள் ஆதரவில் தொடர்ந்து நடத்துவேன். பிடிச்சிருக்குன்னு மட்டும் சொல்லி என் வாழ்க்கையில் ‘லைட் சுவிட்ச்’ போட்டு விட்டுடுங்க ப்ளீஸ். ஏன்னா இருட்டுன்னா எனக்குப் பயம்” எனக் கதிர் சொல்ல, அங்கே மீண்டும் சிரிப்பலை எழும்பியது.
“உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு இப்போ உங்க மனசில் ஓர் கேள்வி வந்திருக்குமே?” எனக் கதிர் இடைவெளிவிட்டு, “சரி, உங்களில் எத்தனைப் பேருக்குச் சார்லி சாப்ளினைத் தெரியும்?” எனக் கதிர் கேட்டதும், பெரும்பாலானோர் கையைத் தூக்கினர்.
“‘வாழ்க்கையில் சிரிக்காமல் ஒரு நாள் இருந்தால் அந்த நாளை நாம் வீணாக்கிவிட்டோம்’ என அவர் அழகாக ஒரு தத்துவம் சொல்லியிருக்கார். அது முற்றிலும் உண்மை எனப் புரிஞ்சதும், அப்போதிலிருந்து தினமும் சிரிச்சுட்டே இருக்கிறேன்.
என்னுடன் இருப்பவர்களையும் சிரிக்க வைப்பேன்.. நம்ம மட்டும் மெண்டல் ஆகக் கூடாது பாருங்க. கூட இருக்கிறவங்களையும் சேர்த்து மென்டல் ஆக்கிடணும்” எனக் கதிர் சொல்ல, அங்கே கரகோஷமும், சிரிப்பொலியும் நிரம்பி வழிந்தது.
“நான் பேபியா இருக்கும் போதே என்ஜீனியர் ஆயிடுவேன்னு என் அம்மா-அப்பாக்குத் தெரிஞ்சிருச்சு. எப்படித் தெரியுமா?” என ஓர் நொடி நிறுத்தியவன்,
“வீடு கட்ட முதல்ல என்ன செய்வோம். குழி வெட்டுவோம். நான் சிரிச்சு, சிரிச்சே அந்தக் குழியை என் கன்னத்துல வெட்டிட்டேன். என்னப் பார்க்கறீங்க? நான் சிரிக்கறப்போ என் கன்னத்தில் அழகாகக் குழி விழும்” என்றதும் எழில்மலரின் முகத்தில் சிரிப்புப் பொங்கியது.
கதிர் சிரிக்கும் பொழுதெல்லாம் இரகசியமாக அதைப் பார்த்து ரசித்தவள் அல்லவா?
“பார்த்தீங்களா? நான் சொன்னப்போ நம்பலை இல்லை நீங்க?” என எழில்மலர் பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்தவரிடம் சொல்ல, “ஹா. ஆமாம்” எனத் தலையை உருட்டினார்.
தொடர்ந்து அவன் இந்த நிகழ்ச்சியைத் தன் சொந்த லாபத்துக்காக நடத்தவில்லை என்றும் இதன் மூலமாக வரும் பணத்தை அனாதை இல்லம் கட்டப் பயன்படுத்தப் போவதாகவும் சொன்னான். அவன் தனி ஒருவனாக நின்று இல்லம் கட்டலாம் என்றாலும், அனைவரும் சேர்ந்து உதவினால் அதன் பலனை அந்தக் காப்பகக் குழந்தைகள் வெகுவிரைவில் அடையலாம் என்றான்.
“உதவுவது உங்கள் விருப்பம். எதுவும் கட்டாயம் அல்ல.” எனக் கதிர் பேசிக் கொண்டிருக்க, “ஆளு பெரிய ஆளா தான் இருக்கிறான்” என்றாள் சம்யுக்தா. அவளையுமறியாமல் எழில்மலரின் முகத்தில் ஏனோ பெருமை பொங்கி வழிந்தது.
தன் மனதுக்குப் பிடித்தவன், அதுவும் அடிக்கடி தன் சிந்தனையில் திடீர், திடீரென்று குதித்துத் தொல்லை செய்பவன், இப்படிச் சமூக அக்கறையுடன் செயல்பட்டால் அவளுக்குப் பெருமையாக இல்லாமல் இருக்குமா?
பதில் சொல்லாமல் பெருமையுடன் மேடையைப் பார்த்துக் கொண்டிருந்த எழில்மலரைப் பார்த்த சம்யுக்தாவுக்கு முதல் முறையாக, ‘இவளுக்குக் கதிரைப் பிடித்திருக்கிறதா?’ என்ற சந்தேகம் எழுந்தது.
“இனி நிகழ்ச்சிக்குப் போகலாமா?” என்ற கதிரின் குரலில் சம்யுக்தாவும் மேடையைப் பார்க்க,
“அதுக்கு முன்னாடி ஒரே ஒரு வேண்டுகோள்.. நிகழ்ச்சிப் பிடிக்கலைன்னா, கோபத்துல அப்படியே தட்டில் இருக்கிறதை என்மேலே தூக்கி வீசுங்க. அதையும் பிளான் பண்ணி அடிக்கணும். அப்படியே அந்த ஒண்ணாம் நம்பர் டேபிளில் இருந்து ஒவ்வொருத்தரா வரிசையா அடிக்கணும்..
அப்போத் தானே நான் வாயிலேயும், கையிலேயும் கரெக்ட்டா கேட்ச் பண்ணிச் சாப்பிட வசதியாயிருக்கும். வர்ற அவசரத்துல சாப்பிடாம வந்துட்டேன். உங்க புண்ணியத்தில் என் பசியாறட்டும்.. என்னைப் பெற்ற மனம் குளிரட்டும்” எனக் கதிர் தொடர்ந்து பேச, அந்த இடமே சிரிப்பினால் களைக்கட்டியது.
“அதே மாதிரி நான் சொல்லற ஜோக்குக்கு உடனே சிரிக்கணும். சிரிக்கலைன்னு வச்சுக்கோங்க.. அதுக்கும் சேர்த்து அப்புறம் பில் கட்டணும்” என்றதும், அங்கிருந்த சில இளைஞர்கள் “எஸ்கேப்” என ஓடுவதைப் போல் பாவனை செய்ய, “டூ லேட். அதான் கதவை மூடிட்டோமே” என்றான் கதிர்.
“இந்த ரயில் சிநேகம் என்கிறது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா இருக்கும். எனக்கு நடந்த சம்பவத்தைச் சொல்லறேன் கேளுங்க. நான் ஒரு தரம் வெளியூர் போயிருந்தேன். அப்போ எனக்குப் பக்கத்து சீட்டில் இருந்தவர், போர்க்களத்துக்குப் போகிற மாதிரி தூங்கறதுக்கு ஆயத்தமாகிட்டு இருந்தார்.
நான் என் புக்கில் கவனமாக இருந்தேன். தூங்கறதுக்கு முன்னாடி அவர் என்கிட்டே, ‘சார், என்னை இந்த ஸ்டேஷன் வந்தா எழுப்பி விடுங்க’ன்னு சொன்னார். நமக்குத் தான் உதவி செய்யறது அல்வா சாப்பிடறது மாதிரி ஆச்சே.
சரின்னு நானும் தூங்காமல் முழிச்சு அவரை எழுப்பிவிட்டுட்டு, பெருமை வழியப் படுக்கப் போறேன், கண் முழிச்சவர் திரும்பிப் படுத்துட்டு மீண்டும் தூங்க ஆரம்பிச்சுட்டார்.
“‘என்ன சார், இறங்கலை?’ எனக் கேட்டா, ‘அதுக்கு இன்னும் நேரமிருக்கே’ன்னு சொன்னார். எனக்கு ஒண்ணும் புரியலை. நாம் தான் தப்பான ஸ்டேஷன்ல எழுப்பிவிட்டுட்டோமேன்னு
டென்ஷனாகிட்டேன்.
‘சாரி சார். தப்பா எழுப்பிவிட்டுட்டேனா?’ எனக் கேட்கவும், அவர் கொடுத்தாருங்க பாருங்க அல்வா. இருட்டுக்கடை அல்வா எல்லாம் தோத்துப்போயிடும். அப்படி வழுக்கிட்டுப் போச்சு.
‘தூங்கறப்போ தூக்கக் கலக்கத்தில் திரும்பிப் படுக்கறது மறந்து போயிடும். அப்புறம் கையும் காலும் மரத்துப் போயி சிரமமாயிடும் பாருங்க.. அதான் திருப்பிப் படுக்கறதுக்கு உங்களை எழுப்பிவிடச் சொன்னேன்.’ எனச் சொல்லிட்டு குறட்டைவிட ஆரம்பிச்சுட்டார்” என தன் கதையை தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடரைப் போல் ஓட்ட,
“பல்புக்கே பல்பா?” எனக் கதிரை கலாய்த்தது ஓர் இளைஞர் கூட்டம்.
“சரி நமக்கு ரயில் சிநேகம் தான் இப்படி ஆயிடுச்சு.. போனாப் போகுதுன்னு பெங்களூர் போயிருந்தேன். அங்கே வேற மாதிரி நம்மை அட்டாக் பண்ணறாங்க. அதுவும் இந்தக் காலத்துப் பெண்களை நான் பாராட்டியே ஆகவேண்டும். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்கள் பாருங்க”
அவன் தொடர்ந்து அவனுக்கு ‘லால்பாக்’ பார்க்கில் நடந்ததை, சம்யுக்தா பெப்பர் ஸ்ப்ரே அடித்ததை என அவன் பக்கம், பக்கமாக எடுத்துவிட்டுக் கொண்டிருக்க, தோழிகளுக்குச் சிரிப்புப் பீறிட்டது.
“தன் வாழ்க்கையில் நடக்கறதை எல்லாம் இப்படிக் கதையாகத் திரித்துச் சொல்லி விடுவானாட்ட இருக்குடி. கில்லாடி” என சம்யுக்தா சொல்ல, “பேசாமப் பாருடி” என அவளை எழில்மலர் அதட்டினாள்.
“ம்ம்ம்.” எனத் தோழியை ஓர் பார்வைப் பார்த்தவள், பேச்சை வளர்க்காமல் மீண்டும் மேடையைக் கவனித்தாள்.
“சினிமாத் தியேட்டருக்குப் போனா என்னப் பண்ணுவோம்?” எனக் கதிர் கேட்க, “சினிமா பார்ப்போம். டிக்கெட் வாங்குவோம்.. “ என பதில்கள் வந்தன.
“நம்ம ஆளு ஒருத்தர் உள்ளே போய் ஒரு மாங்கா மாலை கொடுங்கன்னு கேட்டார். டிக்கெட் கொடுக்கிறவருக்கு ஒண்ணும் புரியலை.
‘நீங்க தானே நகைச்.சுவைன்னு போட்டிருக்கீங்க.. நகையைச் சுவைக்கலாம் எனக் கேட்டா என்னையே லூசுப் பயபுள்ள மாதிரி பார்க்கறீங்க?’ என நம்ம ஆளு முறைக்க,
“யோவ்.. நகைச்சுவைப் படம் யா” என டிக்கெட் கொடுக்கிறவர் தலையில் அடிச்சுகிட்டார்” எனக் கதிர் நிறுத்தினான்.
கூட்டத்தில் இருந்த இளைஞர்கள், “அந்த நம்ம ஆளு. நீங்க தானே?” எனக் குரல் கொடுக்க, “ச்சே. கேட்ச் பண்ணிட்டீங்களே. இப்படியே புத்திசாலியாக இருங்க” எனச் சொன்ன கதிர்,
“உங்களுக்கு இதை நான் சொல்லியே ஆகணும். நான் ஒரு மிகச் சிறந்த கலைஞன் தெரியுமா?” என நிறுத்தினான்.
அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ சலசலத்துக் கொண்டிருக்க, “அன்னைக்கே நம்மகிட்டே ரைட்டர்ன்னு மொக்கை போட்ட ஆளாச்சே. அதனால் ஏமாந்துடாத” என சம்யுக்தா எழில்மலரிடம் சொன்னாள்.
“தொந்தரவு பண்ணாமப் பாருடி” என எழில்மலர், மேடையை விட்டுக் கண்களை எடுக்காமல் சொன்னாள்.
“எப்போதிருந்து இப்படி சின்சியர் சிகாமணி ஆன?” என ஆச்சர்யமானாள் சம்யுக்தா. அதற்கு பதில் என்று எதுவும் சொல்லாமல் கதிர் சொல்வதைக் கேட்பதில் மட்டுமே எழில்மலரின் கவனம் இருந்தது.
“கலைகள் இல்லைனா எல்லோருடைய வாழ்க்கைக்கும் அர்த்தமே இல்லை.. யோசிச்சுப் பாருங்க. நல்ல டாக்டரா, என்ஜினியரா, விவசாயியா. விஞ்ஞானியா, ஆசிரியரா இப்படிப் பல, பல துறையில் கஷ்டப்பட்டாலும், அதை நாம் விரும்பியே செய்கிறோம்.
ஆனால் அதில் ஏற்படற சலிப்பை அகற்றுவதற்கு நமக்கு கலைகள் மிகவும் முக்கியம். அதனாலேயே எனக்குக் கலைகள் ரொம்பப் பிடிக்கும்.
அதற்காக நிறையக் கலைகளைக் கத்துக்க முயற்சி செஞ்சேன். கடைசியில் சுலபமான கலையைக் கத்துக்கிட்டேன். கத்துக்கிட்டேன் எனச் சொல்வதை விட, அது பிறக்கும் போது ‘ப்ரோக்ராம்’ செய்து அனுப்பப்பட்டது.
அது தான் சிரிப்பு. சிரிப்பும் ஒரு கலை தான்.. உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச கலை. அதனால் சிரிங்க. நீங்களும் கலைஞன் ஆகுங்க. உங்க நேரத்தை அதிகம் நான் எடுத்துக்க விரும்பலை. இத்துடன் என் பேச்சை நிறுத்திக்கிறேன்.
ஆனால் மறுபடியும் வருவேன். என் பேச்சு உங்களுக்குப் பிடிச்சிருந்தா. உண்மையிலேயே நீங்க மனம் விட்டுச் சிரிச்சிருந்தா உங்களால் முடிஞ்ச உதவி செய்யுங்க. கட்டாயமில்லை. ஆனால் அனாதை விடுதி கட்ட உபயோகமா இருக்கும்” எனப் பேச்சை முடிக்க, நிறைய பேர் அவர்கள் இருக்கையில் இருந்து எழுந்து கரகோஷம் எழுப்பினர்.
நீண்ட நேரம் கழித்தே அந்தக் கைத்தட்டல் அடங்கியது. எழில்மலரும், சம்யுக்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “சொன்ன மாதிரி ஆளு விசித்திரமாத் தான் இருக்காரு” என்றாள் எழில்மலர்.
தோழியைக் கிண்டலாகப் பார்த்தவாறே, “என்னடி, இருக்கான். இருக்கா...ருன்னு” மாறிடுச்சு” என சம்யுக்தா கேட்க, “எப்படியும், நம்மளை விட வயசு அதிகமில்லையா?” என்றாள்.
“அஹ். அப்படியாங்க? நம்பிட்டோம்” என சம்யுக்தா தோழியின் மனம் போகும் போக்கை நினைத்து அவளைப் பரிகாசம் செய்ய, “நம்பலைன்னா எனக்கென்ன” எனத் தோள்களைக் குலுக்கினாள் எழில்மலர்.
உடனே ஞாபகம் வந்தவளாக கதிர் தன் நண்பன் பாலசரவணனுக்காக அலுவலகம் வந்ததைப் பத்திச் சுருக்கமாகச் சொல்ல,
“இது வேற நடந்திருக்கா? ஆளு சுத்தக் காமெடிப் பீசா இருக்கார். இவரோட பேசிட்டு இருந்தா கலகலப்பா இருக்கும் போல. நானும் சொல்ல மறந்துட்டேன். கதிர் சொன்னான்” என வேண்டுமென்ற சொல்லி நிறுத்திய சம்யுக்தா, தோழியின் முகத்தை ஆராய்ந்துவிட்டு,
“சொன்னா.ருன்னு என் பிறந்தநாளுக்குச் சித்தார்த்தும் நானும் ‘டயட் பிரியாணி’ சாப்பிடலாம் எனப் போனோம்” என்றாள் சம்யுக்தா.
“அப்படியா? பிரியாணி எப்படி இருந்தது?” என ஆர்வமாக எழில்மலர் கேட்க,
“அவங்க மெனுவில் பிரியாணியே இல்லை.. அது மெக்சிகன் புட்.. ஆரம்பிச்சு ஆறேழு மாசமிருக்கும். அதை நம்ம ருசிக்கு ஏற்ப மாத்தி வித்தியாசமாப் பண்ண ‘ட்ரை’ பண்ணியிருக்காங்க. நல்ல முயற்சி. அதைப் பற்றி இந்த வாரம் எங்க செய்தித்தாளில் ஒரு பத்தி எழுதியிருக்கேன். விளம்பரமா இருக்கட்டும்” என்றாள் சம்யுக்தா.
“ஆமாமாம், ஹீரோவுக்கே விளம்பரம் முக்கியமா இருக்கும் போது, சாப்பிடற உணவகத்துக்கு ரொம்பவும் முக்கியம்” எனக் கதிர் அன்று சொன்னதை எழில்மலர் சொன்னாள்.
பேசியவாறே இருவரும் மேடையைப் பார்க்க, அதற்குள் பிரபலமாகியிருந்தான் கதிர். அவனைச் சுற்றி கல்லூரிப் பெண்களும், மாணவர்களும் சூழ்ந்திருக்க, அனைவருடனும் இன்முகத்துடன் பேசிக் கொண்டிருந்தான்.
சாப்பிட்டு முடித்த சிலர், தங்களால் முடிந்த உதவித் தொகையைப் போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்ப, பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்தவர் எழுந்து மேடையை நோக்கிப் போனார்.
“மேடம். சொன்னோமில்லை. பாலில்லாமலேயே பால்கோவா கிண்டற ஆளுன்னு. இப்போ நம்பறீங்களா?” என்றாள் எழில்மலர்.
“ம்ம்ம்ம்” எனத் தலையை ஆட்டியவர், “நீங்க அந்தத் தம்பியோட பேசலையா?” எனக் கேட்க, “நேரமாயிடுச்சுங்க மேடம். எப்படியும் ஆளு பேமஸ் ஆயிடுவார். அப்போப் பார்த்துக்கலாம்” என்றாள் சம்யுக்தா.
எழில்மலருக்குக் கதிரை நேரில் பார்த்துப் பேச வேண்டும் என்ற பேராவல் இருந்தது. அது சம்யுக்தாவுக்குத் தெரிந்தால் தோழி அதையும் கிண்டல் செய்வாள் என்ற எண்ணத்தில்,
‘இவனைத் தான் இனி அடிக்கடிப் பார்க்கப் போகிறோமே’ எனத் தன்னையே சமாதானம் செய்து கொண்டு தோழியுடன் அகன்றாள்
Author: Lavans
Article Title: அத்தியாயம் - 10
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் - 10
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.