அத்தியாயம் - 9
அர்ஜூனின் பிறந்த நாள் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தவள், மனதுக்குள் மாமியாருக்கும் நாத்தனாருக்கும் நன்றி சொல்லிக் கொண்டாள். பின்னே வீடு வாங்க வேண்டும் என்ற உத்வேகம் வந்தது அவர்களால் தானே! வெறும் கையில் முழம் போடுவது எப்படி என்று கற்றுக் கொடுத்தவர்களை மறக்கலாமா??
மாமியார் வீட்டில் இருந்தவரை மூச்சு விடவே திணறிக் கொண்டிருந்தவள், தனக்கே தனக்கு என்று அமைந்த கூட்டில் நிம்மதியாக உணர்ந்தாள். விஷ்ணு தான் தனியாகச் செல்லும் முடிவை தைரியமாக எடுத்தான். ஏதோ அவசரத்தில் மகனைப் பேசிவிட்ட பெற்றோரும், அவன் தனியாகப் போய் விட்டால் என்ன செய்வது என்று கலங்கியே இருந்தனர். அவன் அருகிலேயே ஒரு வீடு பார்த்து முடிவு செய்ய, தனியாக அனுப்புவதில் தங்களுக்கு இஷ்டமில்லை என்று அவ்வப்போது வார்த்தைகளில் வெளிப் படுத்தவும் செய்தனர்.
இவர்கள் புது வீட்டுக்கென, கேஸ் ஸ்டவ், மிக்ஸி இத்யாதிகளை வாங்க, "விஷ்ணு! இதெல்லாம் எதுக்கு புதுசா வாங்கிட்டு இருக்க? நம்ம வீட்டுல இருக்கிறதே நல்லா தான் இருக்கு" என்றார் அவனது அன்னை. இது போல் அவ்வப்போது வந்த கமெண்டுகளை எல்லாம், ஒரு காதில் வாங்கி மறு காது வழியே மறக்காமல் வெளியேற்றினான்.
கிரகப் பிரவேசத்திற்கு முன்னால் தந்தையைத் தனியே அழைத்தவன், தன் முடிவைச் சொல்லி விட்டான். இது தெரியாத வசுதா மாமியாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாள். "எனக்கு இருக்கிறது ஒரே பிள்ளை. அவனை எப்படி நீ தனியா கூட்டிட்டு போகலாம். எல்லாரும் உன்னைத் தான் பேசுவாங்க. என் பொண்ணையும் பிள்ளையும் பிரிச்ச, இப்போ எங்களையும் பிரிக்கிற" கூடவே சில பல நல்ல ஆசீர்வாதங்களையும் கொடுத்தார்.
'அது என்ன இவங்க பொண்ணும் பையனும் எதோ கொஞ்சி குலாவிட்டு இருந்தது மாதிரியும், நான் தான் வந்து பிரச்சிட்டேன்ற மாதிரியும் பேசுறாங்க. இந்த விஷ்ணு இப்போ என்ன பண்ணி வச்சிருக்காரு?" என்று அவளுக்கு மண்டை காய்ந்தது.
"பெருசா ஒண்ணும் இல்ல. இந்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில வரும் பாரு, அதே மாதிரி தள்ளி இருந்து நீ நல்லா இருக்கியா நான் நல்லா இருக்கியான்னு கேட்போம் சொல்லிட்டேன்" என்றான் சாதாரணமாக.
இப்படியாக ஆரம்பித்த அவர்களின் வாழ்க்கையில் காலத்திற்கு ஏற்ப மாறுதல்கள் வந்தது. வசுதா கல்லூரி வேலையை விட்டு வேறு வேலைக்குப் போனாள், அர்ஜூனின் பள்ளி வாழ்க்கை தொடங்கியது. வசுதாவின் தாய் மகளின் ஆசை தீர அவளது வீட்டில் வந்து ஒரு மாதம் தங்கிப் போனார். அந்த நேரத்தில் தாய் சிதம்பர ரகசியமாகப் பொத்தி வைத்திருந்த பலவற்றை அவரது மனதில் இருந்து தோண்டி எடுத்தாள்.
"அம்மா உனக்கும் அப்பாக்கும் ஏகப்பட்ட விதத்துல மேட்ச்சே ஆகாது நீ எப்படி கல்யாணத்துக்கு ஓகே சொன்னே. உங்கப்பா எதாவது உன்கிட்ட கேட்டாரா? இல்ல அவரை முடிவு பண்ணிட்டாரா?"
"எங்க அப்பா என்கிட்ட கேக்க தான் செஞ்சாரு" என்றவர் அந்த நாளின் நினைவுகளில் மூழ்கிப் போனார்.
"இங்க பாரு…. உனக்கு ஒரு வரன் வந்திருக்கு. நல்ல பையன், ஜாதகம் எல்லாம் நல்லாவே பொருந்தி இருக்கு. நல்ல வேலையில இருக்கான். ஒரு சில விஷயங்களைத் தவிர எனக்கு எல்லாமே ஓகே மா. நீதான் பதில் சொல்லணும்"
"அதென்ன பா ஒரு சில விஷயங்கள்?"
"முதல்ல பையன் உன் கலருக்கு கிட்ட கூட வரமாட்டான். அப்புறம்,அவங்களும் நம்ம வீடு மாதிரி ஒரு பையனும் அடுத்து நிறைய பொண்ணுங்களும். விவசாயம் இருக்கு, அவங்க அப்பா வேலைல இருக்காரு, ஆனாலும் பின்னாடி நீ தான் பொறுப்பெல்லாம் ஏத்துக்க வேண்டியது வரும்"
"கலர்….. அது பாத்துக்கலாம் பா. அப்புறம் குடும்பம்…. நம்ம வீட்டுக்கு நாளைக்கு வரப் போற பொண்ணு இதே போல யோசிச்சா என்ன பண்ண? எனக்கு சரின்னு சொல்லிடுங்க"
இப்படித் தான் அவர்களது திருமணம் முடிவு செய்யப் பட்டது. "ஓ.. தாத்தா கிரேட். அப்போவே ஒப்பீனியன் கேட்டு இருக்கார்"
"ஆமா, அதே மாதிரித் தான் என் மாமனாரும். வந்த முதல் நாளே, குருவித் தலைல பனங்காய் வைக்கிற மாதிரி பொறுப்பை கொடுக்கிறேன் மா. நீ தான் இந்த குடும்பத்தைக் கரையேத்தணும்னு சொன்னார். அவருக்காகத் தான், எத்தனையோ விஷயங்களை, வார்த்தைகளை சகிச்சிட்டு இருந்தேன்"
"இது கரெக்ட்டு. இந்த வளையலை நீ இன்னும் மாத்தலையா மா? நான் வாங்கி கொடுத்தது எங்க? ஓ... இந்த கையில இருக்கு. இந்த வருஷம் உங்க வெட்டிங் டேக்கு அப்பா கிட்ட நல்லா கெட்டியா ஒரே ஒரு வளையல் கேளு மா"
"உங்க அப்பா தானே, வாங்கி கொடுத்துட்டு தான் மறு வேலை பார்ப்பார்"
"எங்க அப்பாவைப் பத்தி, நீ எப்படி இப்படி சொல்லலாம். முதல்ல வாபஸ் வாங்கு"
"நான் சொல்லாம வேற யாரு சொல்லுவா? உங்க அப்பா மட்டும் லேசுப் பட்ட ஆளா? வார்த்தையிலேயே நறுக்குன்னு ஊசி ஏத்திடுவார். எவ்வளவு கொபம் வரும் தெரியுமா?"
"மா! வாய் இருக்குன்னு எதை வேணும்னாலும் பேசக் கூடாது. எங்க அப்பாவுக்கு கோபம் வருமா?"
"கோபம் வந்தா யாரை அடிக்கிறதுன்னு தெரியாம தலைலயே கொட்டிப்பார் தெரியுமா?" இது அவளுக்கே தெரியுமே, மனைவியா, தங்கைகளா, மகளா என்று எத்தனையோ சந்தர்ப்பங்களில் குழம்பி தந்தை செய்த காரியம் அது. வசுதா வாய்க்கு பெரிய பூட்டாகப் போட்டுக் கொண்டாள்.
இது போன்ற பல விஷயங்கள் தாயும் மகளும் வாழ்க்கையில் நெருங்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. அந்த வருடம் பெற்றோரின் திருமண நாளை வசுதாவின் வீட்டில் கொண்டாட, தாய்க்கு கெட்டியாக ஒரு வளையலை (அஃப்கோர்ஸ் தந்தையின் பணத்தில் தான்!) வாங்க வைத்துப் பெருமை தேடிக் கொண்டாள் மகள்.
"அடுத்த வருஷமாவது இங்கே ஷிஃப்ட் ஆக முயற்சி பண்ணுங்க மா. உன் தங்கையை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க சொல்லு" என்ற கட்டளையுடன் தாய்க்கு விடை கொடுத்தாள்.
-----
அடுத்து இருந்தவை, அவளது கடைசி சித்தியின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள். இடைப்பட்ட காலத்தில் பாட்டி இறந்து போய் இருக்க, தங்கையை தனது வீட்டிலேயே வைத்துக் கொண்டார், அந்த பாசமான அக்கா. அவளைச் சாக்கிட்டு மற்ற சகோதரிகளும் வந்து போக, அவர்களது நிறம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்த காலம் அது. அட்டைப் பூச்சி போல ஒட்டிக் கொண்டு உயிரை உறிஞ்சினார்கள்.
ஒரு வழியாக, நல்ல வரனைத் தேடி நல்ல படியாக திருமணம் செய்வித்து அனுப்பி வைத்ததுடன் தங்களது கடமையைத் திருப்தியாக முடித்தனர். இதோ இந்த புகைப்படம், வசுதாவின் குடும்பம் மட்டுமே, அதாவது தாய் தந்தை வசுதா மற்றும் அவளது தம்பி என்று நால்வர் மட்டுமேயாக முதன் முதலாக. இதுவரையில் எடுத்த படங்களில் அவர்கள் நால்வருடன் யாராவது ஒருவராவது உடன் இருப்பார்கள். எல்லா வீடுகளிலும், இப்படி ஒரு புகைப்படத்தை பார்க்கும் போது ஆசையாக இருக்கும் அவளுக்கு. இதோ இப்போது அவளது முப்பதாவது வயதில் நிறைவேறி இருக்கிறது.
ஆனால் அதுவே, அவளது தாயின் கடைசிப் புகைப்படமாக அமைந்தது தான் விதி என்பதா? வசுதா இரண்டாம் முறையாக கர்ப்பத்தை உறுதி செய்து இருந்தாள். அந்த வருடம் கோடை விடுமுறைக்காக வீட்டில் அனைவரும் குழுமி இருக்க, அர்ஜூனின் விடுமுறையை முன்னிட்டு அவளும் அந்த ஜோதியில் ஐக்கியமானாள். கடமையை முடித்து விட்ட பெற்றோர், கோடை விடுமுறைக்குப் பின் தம்பியுடன் வந்து விடலாம் என்று முடிவு செய்து, அதற்கான பேக்கிங் வேலைகள் எல்லாம் ஜரூராக நடந்து கொண்டு இருந்தது.
"வசும்மா! இந்த தடவை நம்ம ஒரே ஊர்ல தான் இருக்கப் போறோம். ஏழாம் மாசம், பூச்சூட்டி, வளையல் அடுக்கி, உனக்குப் பிடிச்ச மாதிரி மைசூர் சில்க்ல நல்ல கருப்பு கலர்ல புடவை வாங்கி திருப்தியா செய்யணும்" கண்கள் மின்ன சொன்னவர் செய்தது என்ன?
"மா! நீ முதல்ல அங்கே வா. அப்புறம் ப்ளான் போடலாம். இப்போ இந்த காப்பில கொஞ்சம் டிகாஷன் ஊத்து. இது காப்பி மாதிரியே இல்லை"
"அதெல்லாம் முடியாது. விஷம் மாதிரி கருப்பாவா சாப்பிடுவ, இப்போ பித்தம் ஜாஸ்தியானா கஷ்டம்"
"நீ மட்டும் லெஸ் சுகர் மோர் டிகாஷன்னு சாப்பிடுவ, நான் கூடாதா?"
"கூடாதுன்னா கூடாது தான். இடத்தைக் காலி பண்ணு. நான் இந்த சேப்பங்கிழங்க வதக்கணும்" வாக்கரைப் பிடித்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பும் மகளுக்கு பிடித்த சமையலைச் செய்து கொண்டு இருந்தார் அவர்.
"பாட்டி! நீ தள்ளிக்கோ. நான் உனக்கு பாத்திரம் தேய்ச்சுத் தரேன்" அர்ஜூன் சமையல் மேடையில் ஏறி அமர்ந்து பாத்திரங்களைத் தேய்க்க, "அஜ்ஜூ கண்ணு! போதும் மா. உனக்கு இப்போ என்ன வேணும்னு சொல்லு பாட்டி செஞ்சு தரேன்"
"எனக்கு கோல்ட் வர மாதிரி இருக்கு பாட்டி, கஷாயம் செஞ்சு தா. அஜ்ஜூ குட் பாய். கசப்பாவே இருந்தாலும் குடிச்சிடுவேன்"
"இதோ ஒரு நிமிஷம் கண்ணு.. பாட்டி வந்துட்டேன்"
"ஓகே மா. நான் கிளம்பறேன். ஜாக்கிரதையா கிளம்பி வாங்க. ஊர்ல பார்க்கலாம்" இது தான் வசுதா அவளது தாயிடம் நேரில் பேசிய கடைசி வார்த்தைகள். அதன் பிறகான ஒன்றரை மாதத்தில் எத்தனையோ முறை அலைபேசியில் பேசினாலும், கடைசி இரு நாட்கள் விதியோடு சேர்ந்து பலர் செய்த சதியில் அவள் அலைபேசியில் கூட தொடர்பு கொள்ள வில்லை. அந்தக் கருப்பு தினத்தின் ஒவ்வொரு நொடியும் இன்னும் பசுமையாக அவளுக்கு நினைவில் இருக்கிறது.
அது ஒரு திங்கட்கிழமை. இரண்டாவது கர்ப்பம் என்றாலும், அவளுக்கு மார்னிங் சிக்னெஸ் என்று சொல்லப்படும் தலைசுற்றல், வாந்தி மயக்கம் எல்லாமே இருந்தது. வீட்டிலும் வேலை செய்து, அலுவலகம் சென்று வந்து குழந்தையைக் கவனித்துக் கொண்டு என ஒரு நாளின் விழித்துக் கொண்டு இருந்த நேரம் எல்லாம் பிஸியாகவே இருந்தாள். வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத நிலையில், விஷ்ணு தன்னால் இயன்றவரை அவளது வேலைகளைப் பகிர்ந்து கொண்டான்.
------
தலைக்குள் அடித்த அலாரத்தில் கஷ்டப்பட்டு இமைகளைப் பிரித்தவள், கடிகாரத்தை பார்க்க அது என்றைக்கும் போல ஆறு மணி என்றது. 'என்ன தான் இருக்கோ இந்த மண்டைக்குள்ள? ஆறு மணியானா டாண்ணு எழுப்பி விட்டுடுது. கடிகாரத்தை விட மோசமான இருக்கு' என்று எரிச்சல் அடைந்தவளுக்கு அன்று ஏனோ மிகவும் சோர்வாக இருந்தது. மனதில் ஏதோ இனந்தெரியாத உணர்வு ஆட்டிப் படைக்க, உடலோ இன்னும் கொஞ்ச நேரம் படுத்திரேன் என்று கெஞ்சியது.
ஆனால் இன்றைக்கு அணிவகுத்து நிற்கும் கடமைகள் அவளை வலுக்கட்டாயமாக எழ வைத்தது. பல் துலக்கும் போதே தலையைச் சுற்றி மயக்கம் வந்தது. வயிறு உடனடியாக ஏதாவது போடு என்று பிராண்டியது. வயிற்றில் இருந்த இன்னொரு ஜீவனுக்கும் அதே நினைப்பு தான் போல, லேசாக அசைந்து முதலில் என்னைக் கவனி என்றது.
காலைக்கடன்களை முடித்துக் குளியல் அறையை விட்டு வெளியே வந்தவள், எந்த சத்தமும் எங்களை அசைக்கவே முடியாது என்பது போல ஆழ்ந்த நித்திரையில் இருந்த கணவனையும் மகனையும் பார்த்து 'கொடுத்து வைத்தவர்கள்' என்று ஒரு பெருமூச்சினை வெளியிட்டாள்.
அவசரமாகப் பாலைக் காய்ச்சி டிகாஷன் போட்டு அவளுக்குப் பிடித்த வகையில் ஸ்ட்ராங்கான காபியைக் கலந்து வைத்தாள். அத்தனை பசியில் வந்தவள் அந்த காபியைக் குடிக்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை. அவள் இருக்கும் நிலையில் எது உள்ளே போனாலும், அடுத்த ஐந்தாவது நிமிடம் வெளியே வந்துவிடும் அபாயம் இருக்கிறதே!
அதன் பிறகான அவளது தொண்ணூறு நிமிடங்களை சமையலறை இழுத்துக் கொண்டது. காலை டிபன், மதிய உணவு, தனக்கான பழங்கள், பழச்சாறு, குழந்தைக்கான கார்ன் ஃப்ளேக்ஸ் என்று நேரம் பரபரப்புடன் சென்றது. காலை உணவு, பேக் செய்யப்பட்ட மதிய உணவு என்று எல்லாவற்றையும், மேசையில் அடுக்கியவள் 'அப்பாடா' என்று அமர்ந்தாள்.
இதற்கு மேல் தாங்காது என்ற நிலையில் அந்த ஆறிப்போன காபியை அவசரமாகத் தொண்டையில் ஊற்றிக் கொண்டாள். காபிப் பிரியையான அவள் என்றுமே அதை ரசித்துக் குடித்ததாக அவளுக்கு ஞாபகம் இல்லை, தண்ணீரை விழுங்குவது போல, ஒரு கடமையை முடித்து விட வேண்டும் என்பது போலவே அவள் காபி குடிக்கும் லட்சணம் இருக்கும்.
உள்ளே இருந்த நபருக்கு ஆறிப்போன காபி பிடிக்கவில்லையோ என்னவோ உடனடியாக வெளியே தள்ளப்பட்டது. அவசரமாகக் குளியலறைக்குள் ஓடியவளுக்குக் குடலே வாய் வழியே வெளியேறிவிடும் போல இருந்தது. ஒரு முறை இந்த அனுபவங்களை பெற்றவள் தான். அப்போது அவள் இருந்த சூழ்நிலையே வேறு, இப்போது தனியே சமாளிக்க கஷ்டமாக இருந்தது.
"வசு! இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கே? சீக்கிரம் வெளியே வா, எவ்வளவு நேரம் தான் பாத்ரூம்ல இருப்ப? நீயா வாந்தி எடுக்க ட்ரை பண்ணாத"
"அம்மா வெந்நீர்ல வாயைக் கொப்பளிச்சிட்டு, முகம் கழுவிட்டு வா. நான் வந்து ஹெல்ப் பண்ணவா?"
விஷ்ணு மற்றும் அர்ஜூனின் குரலில் மெதுவாக வெளியே வந்தவள், படுக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.
"காலைல காஃபி தான் குடிப்பேன்னு அடம் பிடிக்காத வசு. மாதுளை ஜூஸ் போட்டு வச்சிட்டு குடிக்கலேன்னா என்ன அர்த்தம்?" கையில் ஜூஸோடு வந்தான் விஷ்ணு.
"சாப்பிடவே பிடிக்கலைங்க" என்றவளை வற்புறுத்திக் குடிக்க வைத்தவன் அர்ஜூனைக் கவனிக்கப் போனான். அவனே குழந்தையைக் கதறக் கதறக் குளிப்பாட்டினால் தான் அவனுக்குத் திருப்தி.
அடுத்து அவனுக்கு உடை மாற்றி, எண்ணெய் வைத்து நன்றாகத் தலைசீவி, முள்ளம் பன்றி போலப் படியாமல் நிற்கும் அவனது முடிகளை அன்றைய தினத்தின் கோட்டாவாக ஒரு தடவை அழுந்த சீவி, அவனை டைனிங் டேபிளில் அமர்த்தும் வரை தந்தையின் வேலை.
அதன் பிறகு காலையில் அருந்திய ஜூஸ் ஜீரணம் ஆகும் வரை அவனுடன் போராடி அந்தக் கார்ன் ஃப்ளேக்ஸை சாப்பிட வைப்பது வசுதாவின் வேலை.
"மா! இன்னைக்கு சாயங்காலம் பாட்டி கூட பேசலாம்னு சொல்லி இருக்க. ஞாபகம் இருக்கு தானே. நேத்து நைட்டு மாமா என்னை பேசவே விடலை"
"கண்டிப்பா பேசலாம் அஜ்ஜூ. இன்னைக்கு பாட்டி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். நாம சாயங்காலம் பேசலாம்"
"பாட்டிக்கு ஜூரமா? யாரு கஷாயம் போட்டு தருவாங்க? நாம ஊருக்கு போலாமா? ….? …?" கேள்வியின் நாயகன் இவன்.
"அஜ்ஜூ! சாப்பிட்டு பேசு. பாட்டிக்கு ஜூரம் தான். பேச முடியலை, தொண்டை வலிக்குதுன்னு சொன்னாங்களாம். அதான் மாமா உன் கிட்ட மொபைல் தரலை. இன்னைக்கு மாமா பேச மாட்டாங்க, நாம பேசுவோம், சரியா?" என்று சொன்னவளுக்குத் தெரியுமா, இனிப் பேசவே முடியாது என்பது?
சரியாக ஏழு நாற்பதுக்குக் கதவை அடைத்து வெளியேறியது விஷ்ணுவின் குடும்பம். அரக்கப்பரக்கக் கிளம்பியும், ட்ராஃபிக்கில் மாட்டி அவளது அலுவலக வாசலில் இறங்கிய போது எட்டு பதினைந்து. அப்பாடா என்று பெருமூச்சு விட்டாள்.
லிஃப்டுக்குக் காத்திருந்து, ஆறாவது மாடியில் இருந்த அலுவலகம் சென்று சேரும் போது இன்னும் ஐந்து நிமிடங்கள் கடந்திருக்க முழுமையாக ஐந்து நிமிடங்கள் லேட். மேலாளரிடம் வழிந்து, ஒரு ஸாரி சொல்லி மற்றவருடன் சேர்ந்து வரப் போகும் மண்டல மேலாளருக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.
ஒன்பதரை மணியளவில் அவரது தலையைக் கண்டவுடன் எல்லோரும் அவர்களது மொபைலை சைலண்ட் மோடில் போட்டு அன்றைய ட்ரைனிங்கில் கலந்து கொண்டனர். பத்து மணிக்கு ஆரம்பித்த ட்ரைனிங், மதிய உணவுக்காக ஒரு மணி அளவில் நிறுத்தப் பட்டது.
காலையில் சாப்பிட்ட உணவுக்குப் பின் எதுவும் சாப்பிடாமல் இருந்தவள், அடித்துப் பிடித்து மதிய உணவைக் காலி செய்தாள். வயிற்றில் இருக்கும் ஜூனியரைப் பாராட்டியே ஆக வேண்டும். அலுவலக நேரங்களில் அவளைப் படுத்துவதே இல்லை. சாப்பிட்டு முடித்து, மொபைலைக் கையில் எடுத்தவள் அதிலிருந்த மிஸ்டு கால்களைப் பார்த்து பயந்து போனாள். அத்தைகள், மாமாக்கள், அத்தை மகனென்று மாறி மாறி அழைத்து இருந்தார்கள்.
என்னவாக இருக்கும் என்று பதறி மாமா ஒருவரை அழைக்க, "வசு! அம்மாக்கு ரொம்ப முடியலேன்னு ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்களாம். ரொம்ப சீரியஸ்னு சதீஷ் சொன்னான். என்ன தான் ஆச்சு? உனக்கு அப்பா கூப்பிடலையா?"
ஒரு நிமிடம் தரையின் கீழே பூமி நழுவியது அவளுக்கு. "எனக்கு யாரும் எதுவும் சொல்லலை மாமா. அப்பா கிட்ட பேசிட்டு வரேன்" நடுங்கிய குரலை கட்டுப் படுத்த முயன்றாள். இவளது நிலை கண்டு அருகில் வந்த சித்ரா, "என்ன ஆச்சு வசுதா? யார் ஃபோன்ல?"
"எங்க…. மாமா. அம்மா…. சீரியஸ்னு சொல்றார்" சதீஷை அழைக்க முயன்றவாறு பதில் சொன்னாள்.
"மாமிக்கு சீரியஸ்னு தான் சொல்லி இருக்காங்க, மா. நீ பதட்டப்படாத. விஷ்ணு கிட்ட சொல்லி இருக்கேன். நாங்க எல்லாம் ஊருக்கு போயிட்டு வரோம். ஈவ்னிங் பஸ்ஸூக்கு டிக்கெட் வாங்கி இருக்கேன்"
"ம்" என்றவளுக்கு அதெப்படி பெத்த பிள்ளைகளுக்கு சொல்லாமல் இருப்பது என்று விஷ்ணுவின் மீதும் தந்தையின் மீதும் கண் மண் தெரியாத கோபம் வந்தது.
கொஞ்ச நேரம் மொபைலையே வெறித்துப் பார்த்திருந்தவள், நடுங்கும் கைகளால் எல்லா தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்து தந்தையை அழைத்தாள். மறுமுனையில் வந்த பதிலில் உறைந்து போனாள். வெறித்த பார்வையுடன் அமர்ந்து இருந்தவளை அருகில் இருந்த சித்ரா உலுக்கி, "என்ன ஆச்சு வசுதா?" என்றாள்.
"அம்மா...… இறந்துட்டாங்களாம்" என்றாள் தலையில் கை வைத்தபடி. கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லை. அழுகை வரவில்லை. சித்ரா தான் பயந்து போய் விஷ்ணுவை அழைத்து விட்டாள்.
தம்பிக்கு அழைத்துச் சொல்ல, அப்போது தான் விஷயம் அறிந்திருந்த அவனும் வார்த்தை வராமல் திணறினான்.
அரை மணி நேரத்தில் வந்த விஷ்ணு, "ரொம்ப தேங்க்ஸ் சித்ரா. நான் பாத்துக்கிறேன்" என்று அழைத்துச் சென்றவன், அடுத்த ஆயத்தங்களில் இறங்கினான். சதீஷ் கிளம்பிய பேருந்திலேயே அனைவரும் கிளம்பினார்கள்.
தம்பியை நேரில் கண்டவள், அவனருகில் அமர்ந்து கைகளைப் பிடித்துக் கொள்ள இருவரும் மௌனமாக துக்கத்தை விழுங்கிக் கொள்ள முயற்சி செய்தனர்.
"ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா" ஏசுதாஸின் குரலில் பேருந்தில் ஒலித்த பாடல் அவர்களின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டது. சாதாரண நாட்களிலேயே மனதைப் பிசையும் இந்த பாடல், இன்று சூழ்நிலையுடன் பொருந்தி ஏதேதோ செய்தது.
"நீ முந்தி போனது நியாயம் இல்லையே
நான் முந்தி போகவே யோகம் இல்லையே
கூண்டை விட்டு தாய் கிளி பறந்ததிங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால் சோறு எங்கே
என் தேவியே நானும் செய்த குற்றம் என்ன கூறு ஒரு பார்வை பாரு"
உதடுகள் நடுங்கப் பாடலைக் கேட்டுக் கொண்டு இருந்தவள், அவசரமாகத் தந்தையை அழைத்தாள். தன்னில் உழன்று அவரை மறந்து விட்டோமே என்று புத்தி இடித்துரைத்தது.
"அப்பா!"
"ம்ம் …. சொல்லு மா!"
"என்ன பண்ணிட்டு இருக்க பா?"
"என்னம்மா பண்ணுவேன் நான்? இப்படி விட்டுட்டுப் போயிட்டாளே?" குலுங்கி அழுதார் அவர். அவரது அழுகையை நிறுத்த வழியறியாது,
"அப்பா! பக்கத்தில யார் இருக்கா? நீ எங்கே இருக்க?" என்று வார்த்தைகளில் அழுத்தம் கூட்டினாள்.
"அவளைக் கண்ணாடி பெட்டிக்குள்ள பத்திரமா வச்சாச்சு. நான்… நான்… வாசல்ல உட்கார்ந்து இருக்கேன். பக்கத்தில உமா இருக்கா, அவகிட்ட கொடுக்கிறேன்"
"அத்த, நீ எப்போ வந்த? அப்பா என்ன சாப்பிட்டார்? எப்போ சாப்பிட்டார்?"
"நான் மதியமே வந்திட்டேன், வசு! அண்ணி இப்படி பண்ணிட்டாங்களே? நான் நாலு நாள் முன்னாடியே வரேன்னு சொன்னேன். வேண்டாம் ஆளிருக்காங்கன்னு சொல்லிட்டாங்க. இப்போ இப்படி ஆகிடுச்சே?" அவள் குரலெடுத்து அழ,
"ம்ச், முதல்ல அழறத நிப்பாட்டு. அப்பாக்கு பால் காய்ச்சி கொடு"
"கொடுத்தேனே, ஆனால் அண்ணா ஒண்ணும் வேண்டாங்கிறாரு"
"அவர் அப்படித் தான் சொல்வாரு. நீ தான் கம்பெல் பண்ணிக் கொடுக்கணும்"
"சரி டா. நீங்க பார்த்து வந்து சேருங்க"
மனதில் இனந்தெரியாத பாரம் ஏறிக் கொண்டது. ஐந்து மாதமாக கருவுற்ற மருமகளைக் கண்டு கொள்ளாத மாமியார், மாதுளை முத்துக்கள், தயிர் சாதம் என்று இவளைத் தாங்கியதில் மனதில் ஒரு வெறுப்பு சூழ்ந்து கொண்டது.
அதிகாலை மூன்று மணியளவில் வீடு சென்று சேர்ந்த போது, தாயைக் கண்ணாடிப் பேழையில் பார்க்க மாட்டேன் என்று வாசலிலேயே அமர்ந்து கொண்டாள். அனைவரும் வற்புறுத்தி அவளை உள்ளே அழைத்துச் செல்ல, மௌனமாகவே தாயை வெறித்தாள்.
காதுகளில், பேருந்தில் கேட்ட பாடல் வரிகள் எதிரொலித்தது.
"உயிர் தந்த தேவிக்கு உயிரில்லையோ
பாலூட்டி பார்த்தியே பாலூற்றலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு அரிசி போட வந்தேன்
எனை நானே நொந்தேன்"
சுற்றிலும் அனைவரும் அழ, வீடே அழுகையின் கூடாரமாக மாற, இவள் மட்டுமே கருங்கல் சிலையாக இருந்தாள், குரலெடுத்து அழுதவர்களில் அவளது மாமியாரும் அடக்கம். பிள்ளைகளைப் பார்த்ததும் கட்டிப் பிடித்து அழுத தந்தையுடன் சேர்ந்து தம்பியும் அழ, இவளிடம் அதே வெறித்த பார்வை.
"பிள்ளைத்தாச்சிப் பொண்ணு, துக்கத்தை அடக்கி வைக்கக் கூடாது. அழுதுடு கண்ணு" ஆளாளுக்கு உபதேசம் செய்தார்கள். அவளுக்கு அழுகை வரவில்லையே, என்ன செய்ய?
சற்று நேரத்தில் கண்ணாடிப் பேழையை அகற்ற, வசுதாவும் அவளது தம்பியும் தாயை வருடிக் கொண்டே இருந்தார்கள், எப்பொழுதும் போல அந்த பட்டுப் போன்ற சருமம். அது வரையில் மற்றவர் அழுவதைப் பயத்துடன் என்னவோ என்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த அர்ஜூன், பாட்டியின் அருகில் வந்து உலுக்கி எழுப்பினான்.
"பாட்டி, அஜ்ஜூ வந்திருக்கேன் பாரு. எழுந்துக்கோ பாட்டி. என் கூட பேசு பாட்டி. இந்த மாமாவும் அம்மாவும் என்னை பேசவே விடலை தெரியுமா? எழுந்து அவங்களை என்னன்னு கேளு" விதம் விதமாக பாட்டியை எழுப்ப முயற்சி செய்தவன், "மா பாட்டிய எழுப்பு மா. நான் நேத்து பேசணும்னு சொன்னேன் தானே. இப்போ என் கூட பேச மாட்டேங்கிறாங்களே. பாட்டீஈஈஈஈ" என்று குரலெடுத்து அழ, அவனது அழுகையில் சுற்றி நின்ற அனைவரும் பங்கெடுத்தனர், அவனது தாயைத் தவிர.
நெய்ப் பந்தத்தைத் தூர எறிந்து, "பாட்டிக்கு வலிக்கும். நெருப்பு வைக்காதீங்க. நோஓஓஓ" என்று ரோட்டில் புரண்டு அழுதவனை அடக்கமாடாடாமல் அனைவரும் திணறிப் போனார்கள்.
-------
அதிகாலை நான்கு மணி. பழமை மாறாத தனி வீடுகளால் நிறைந்த வீதி. இன்றும் வீடு வீடாகச் சென்று பால் விற்பனை செய்பவர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கத் தான் செய்கிறார்கள். அந்தத் தெருவெங்கும் பால்காரர்களின் மணி ஓசையும், பல வீட்டு வாசல்களில் தண்ணீர் தெளித்துப் பெருக்கும் ஓசையும் ஒலிக்க ஆரம்பித்தது.
தெருவின் நடுவில் இருந்த அந்த வீட்டில் ஆழ்ந்த அமைதி நிலவியது. ஆண்கள் அனைவரும் வெளியே சென்றிருக்க, பெண்களும் குழந்தைகளும் மட்டுமே வீட்டில் இருந்தனர். பால்காரர் வந்து மணியடிக்க, யாரோ சென்று பாலை வாங்கி வந்தனர்.
"பாப்பா கொஞ்சமாச்சும் அழுதுச்சாம்மா? அழுதா தாம்மா நல்லது. அதுவும் பாப்பா இப்ப இருக்க நிலைமையில் அழணும்மா. உங்களுக்கு தெரியாதா? கொஞ்சம் பாத்துக்கோங்க" பால்காரர் சொல்வது காதில் விழுந்தது. காலையும் மாலையும் பால் வாங்கும் எல்லாரிடமும் தன்னைக் கேட்கிறார். அவருக்கு இருக்கும் அக்கறை கூட உடன் பிறந்து கூடவே இருந்தவர்களுக்கு இருந்திருக்கவில்லையே?
வருடம் முழுவதும் விருந்தாளிகளால் நிரம்பி வழியும் வீடு, பல வருடங்களாக அவரது வியாபாரம் அமோகமாக இருந்த வீடு. இனி எப்படியோ என்று நினைத்தாலும் அந்த வீட்டோடு அவரது பிணைப்பு வியாபாரமாக மட்டுமே இருந்ததில்லை. அதிகம் பால் கேட்கும் போதெல்லாம் தண்ணீர் கலக்காமல் அடுத்தவரிடம் வாங்கியாவது தனியே கொடுத்து விடுவார். மனிதத் தன்மை கொண்ட சக மனிதர்.
அந்த குடும்ப வண்டி சீராக ஓடக் காரணமாக இருந்த அச்சாணி முறிந்து முழுதாக நாற்பத்தெட்டு மணி நேரம் கூட ஆகவில்லை. திடீரென நிகழ்ந்த அசம்பாவிதத்தால் குடும்பத்தின் முக்கிய அங்கத்தினர்கள் யாவரும் ஸ்தம்பித்துப் போனார்கள். சாதாரண காய்ச்சல் என நினைத்தது பலரது உயிரை உருவி விட்டுச் சென்றிருந்தது.
அஸ்தியைக் கரைக்க ஆண்கள் அனைவரும் சென்றிருக்க இங்கே பால் வாங்கி காப்பிக்கு வழி செய்தாகிறது. கறந்த பசும் பாலில், அப்போது இறக்கிய டிகாஷனில் காபி குடித்தால் தான் தொண்டையில் இறங்குமாம், இது இறந்தவளின் அருமைத் தங்கைகளின் வாதம். கடந்த பத்து நாட்களாக அவளை உடனிருந்து கவனிக்க வந்தவர்கள், தங்களை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள் போலத் தெரிகிறது.
பால்காரரின் பேச்சைக் கேட்டபடியே கடனே என்று எழுந்து, பல்துலக்கி, முகம் கழுவி வெளியே வந்த வசுதா, காலியாக இருந்த கட்டிலைக் கண்டதும் துக்கம் தொண்டையை அடைக்கத் தரையில் பொத்தென அமர்ந்து விக்கி விக்கி அழத் தொடங்கினாள்.
தாய் இல்லை, இனித் திரும்ப முடியாத இடம் சென்று விட்டார் என்ற நிதர்சனம் அப்போது தான் புத்தியில் உரைத்தது. அதே கட்டிலில் தான் இரவு முழுவதும் அவள் படுத்து இருந்தாள் என்பதும் அது அவளது தாயின் கட்டில் என்பதும் அவளது நினைவுக்கு வர அடக்கமாட்டாமல் அழுதாள்.
அவளது அழுகைச் சத்தம் கேட்டு அனைவரும் அவளருகில் கூடி விட்டனர். நான்கு மாத கர்ப்பிணியான அவள் இவ்வளவு அழுவது கூடாது என்று நினைத்தாலும், நேற்றில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் சிந்தாதவள், அழுதுவிட்டால் மனதின் பாரம் குறையும் என்று சுற்றி நின்ற அனைவரும் நினைத்து நிம்மதி ஆனார்கள்.
அந்த அதி காலை வேளையிலேயே அந்த வீடு முழுவதும் ஆட்களால் நிரம்பி இருந்தது . சாயங்காலம் வந்த பூக்காரரும் அதையே நினைவுபடுத்தி விட்டுத் தன் பங்கிற்கு ஏராளமான பூக்களோடு அன்பையும் வழங்கி விட்டுப் போனார். "பாப்பாவுக்கு முல்லைப்பூ தான் இஷ்டம் நீளமா வச்சுக்கணும்னு சொல்லுவாங்க அம்மா. கொஞ்சம் குறைந்தாலும் கரெக்டா கண்டுபிடிச்சுடுவாங்க. அவங்கள மாதிரி பூ வாங்க அவங்களே பிறந்து வந்தால்தான் உண்டு. ஊரோட போயிடப் போறீங்களாம்மா. அதுவரைக்கும் நான் பூ கொண்டு வந்து கொடுக்கிறேன் கண்டிப்பா வச்சுக்கணும் மா. அம்மாவுக்கு மனசு திருப்தியா இருக்கும். காசு கொடுக்கிறேன்னு சொல்லக் கூடாது சொல்லிட்டேன்" என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டு போனார்.
ஃபிரஷ்ஷாக வடிக்கப்படும் டிகாஷனின் மணம் மூக்கைத் நுழைந்தாலும் எழுந்து கொள்ள முடியாமல் படுக்கையில் கிடந்தாள் வசுதா. 'என்ன மனிதர்கள் இவர்கள்' என்று மனம் வெறுத்துப் போனது. அவ்வளவே தான், பாலுக்காக காத்திருந்தவர்கள், பிரஷ்ஷான காபியை குடித்துவிட்டு மாடியேறி விடுவார்கள். பிறகு சாப்பாட்டிற்கு தான் கீழே வருவார்கள். இவர்களுக்காக சாப்பாடு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும். அடுத்தவர்களுக்காக துரும்பையும் அசைக்க தயாராக இல்லாதவர்கள் எப்படி அடுத்தவர்களிடம் எதிர்பார்க்கிறார்கள் என்பது மட்டும் புரியவே இல்லை.
பொறுத்திருந்து பார்த்தவள் நான்கு நாட்கள் கழித்து தந்தையிடம் சென்று நின்றாள். அச்சாணி முறிந்த வண்டி எப்படி இருக்குமோ அப்படி இருந்தார். "அப்பா! பால்காரர் கணக்கை செட்டில் பண்ணிடுங்க பா. இனிமேல் பசும்பால் வேண்டாம். எனக்காக தான் கண்டினியூ பண்ணுனீங்க எனக்கு சிட்டில ஒண்ணும் பசும்பால் தேடி போக முடியாது, அதனால நிப்பாட்டுங்க இப்பவே" என்றாள் மொட்டையாக.
"நாம ஊருக்கு கிளம்ப இன்னும் பத்து நாள் இருக்கேமா. அது வரைக்கும் என்ன பண்றது? பாக்கெட் பால் உனக்கு ஆகுமா?" என்றவரைப் பரிதாபமாகப் பார்த்தவள் "பா! இத்தனை நாளும் நான் பாக்கெட் பால் தான் குடிச்சிட்டு இருக்கேன் பசும் பால் குடிக்கிறேன்னு நீங்க பாத்தீங்களா? எனக்காக ஒன்னும் நீங்க பசும்பால் வாங்கலை. இனிமேலும் யாருக்கு வேணுமோ அவங்க காசு கொடுத்து வாங்கிப்பாங்க" என்று இது என் முடிவு என்பது போல் சத்தமாக சொல்லி விட்டு சென்றாள்.
நினைவுகள் கனக்க, புகைப்படங்களை எடுத்து வைத்தவள் பெருமூச்சு விட்டாள். ஆயிற்று, கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள். அம்மா என்று நினைக்கும் போதெல்லாம், "வசும்மா! அம்மா பேசறேம்மா!" என்ற குரல் காதில் ஒலிக்கும். என்ன செய்வது? நாமும் கூட போக முடியாதே? அழைப்பு வரும் வரை இருந்துதானே ஆகவேண்டும்?
Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 9
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் - 9
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.