• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாய்ம் - 15

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
442
13
43
india

என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -15



ஈஸ்வரின் ஆஃபீஸ், கார்த்திக்கும் அங்கே தான் இருந்தான். அவர்களது டேபிள் மேல் வழக்கம் போல கேஸுக்குத் தேவையான அனைத்தும் சிதறிக் கிடந்தன.



ஈஸ்வர், கமல் சக்சேனாவின் மனைவி கொடுத்த பாங்க் ஸ்டேட்மெண்ட்டைக் கையில் எடுத்துப் புரட்டினான். கடந்த ஐந்து வருடங்களுக்கான வரவு செலவு அதில் இருந்தது. ஆனால் அவை அத்தனையும் ஒரு நாலைந்து பக்கத்தில் முடிந்தன. குறிப்பாக ஒரு வருடத்தில் நான்கு அல்லது ஐந்து முறை வரவு இருந்தது.



அவை எல்லாமே கோடிகளில் இருந்தது. தற்போதைய இருப்பு மட்டுமே இருநூற்று ஐம்பது கோடி என்றது.



“கார்த்திக்! இங்கே பாரு, ஒவ்வொரு ட்ரான்சாக்ஷனும் கோடில தான்டா நடந்திருக்கு. இவ்வளவு பணம் ஏதுடா இவனுக்கு, அஞ்சு வருஷத்து ஸ்டேட்மெண்ட், அஞ்சே பக்கத்தில் முடிஞ்சு போச்சு.”



“வரவெல்லாம் பார்த்தியா குறைஞ்சது பத்து கோடி, மாக்ஸிமம் பாரு நூறு கோடி. ஹப்பா.. சாமி பார்க்கும் போதே தலை சுத்துதே. இதை எப்படி குடும்பத்துக்கு கூட தெரியாமல் மெயின்டெய்ன் பண்ணி இருக்கான்.”



“டெபிட் ட்ரான்சாக்ஷன் நடந்த மெத்தட் பார்த்தியா.. ஒவ்வொரு க்ரெடிட் வந்த உடனே அது அஞ்சு இல்லேன்னா ஆறு பேருக்கு ஷேர் ஆகி இருக்கு. இதைத் தவிர வேறெந்த ட்ரான்சாக்ஷனும் இல்லை.”



“அந்தப் பேரெல்லாம் கொஞ்சம் படி.. எவன் எவனுக்கு பணம் அனுப்பி இருக்கான்னு.. நாம நினைச்ச ஆசாமிகள் தானா. இல்லை.. புதுசா யாரும் இருக்காங்களா பார்ப்போம்..”



“இந்த அக்கவுண்ட்டோட லாக் இன் டீடெயில்ஸ் கிடைச்சா பெட்டரா இருக்கும்.. மத்த அக்கவுண்ட்ஸ்ல என்ன நடந்திருக்குன்னு ஈஸியாக தெரிஞ்சுக்கலாம்.‌”



“நீ முதல்ல கையில் இருக்கிற பேரைப் படி. மத்ததை அப்புறம் பார்க்கலாம்.”



“முதல் ஆள் விகாஸ் மிஸ்ரா.. இது எதிர்பார்த்தது தான். அடுத்து.. யாருடா இந்த யுவான் சுவாங்..”



“வாட்! என்னடா உளர்ற?”



“நான் உளறலை. நீயே பாரு. பேர் யுவான் ச்சாங். சைனாக்காரன் போல, இன்டர்நேஷனல் ட்ரான்சாக்ஷன். அடுத்த ஆளும் அப்படித்தான். ஆலிவர் ஸ்மித், இவன் எந்த ஊரா இருப்பான்.”



“மே பி ஆஸ்திரேலியாவா இருக்கலாம், மலர் கிட்ட கேட்டால் தெரியும்.”



“மலர் கிட்ட இவங்க யாருன்னு மட்டும் கேட்கக் கூடாது. இவங்க உயிரோட தான் இருக்காங்களான்னு சேர்த்துக் கேட்கணும்.”



“கரெக்ட்.. அடுத்த ஆளைப் பாரு.. டேய் முரளிதரன் டா. அப்போ இந்த ஆளு வீடு வாங்கின பணம் எல்லாம் இப்படி சம்பாதிச்சது தானா? அதான் போய் சேர்ந்துட்டான்” என்று கடினமான குரலில் கூறினான் கார்த்திக்.



“இன்னும் ஒரு ஆள் அது…”



இவர்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்த போது ரஞ்சனிடம் இருந்து கார்த்திக்கின் மொபைலுக்கு அழைப்பு வந்தது.



“இவன் எதுக்கு டா.. என்னைக் கூப்பிடறான்?” என்று எரிச்சலுடன் மொபைலையே முறைத்து வைத்தான் கார்த்திக்.



அதுவோ, நீ எடுக்காமல் விடமாட்டேன் என்று விடாமல் கூவிக் கொண்டே இருந்தது.



“டேய்! ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்கப் போகுது. இல்லேன்னா எதுக்கு இத்தனை தடவை கூப்பிடப் போறான். ஒரு வேளை மலர் கூட அவன் போனிலிருந்து கூப்பிடலாம். இப்படியே காலம் பூராவும் இருக்க முடியாது டா. இப்போ நீ அட்டென்ட் பண்றியா இல்லை நான் பண்ணட்டுமா?” ஒரு நண்பனாக ஈஸ்வர் கார்த்திக்கைக் கடிந்து கொண்டான்.



“போதும் டா, போதும். நிப்பாட்டு.. உன் அட்வைஸ் கேட்கறதுக்கு பதிலாக நான் அவனை டீல் பண்ணிடுவேன். ஆளை விடு” என்று அழைப்பை ஏற்று மொபைலை ஸ்பீக்கரில் வைத்தான்.



“ஹலோ! கார்த்திக்! கார்த்திக் தானே.. நான் ரஞ்சன் பேசறேன். நீங்க இம்மீடியட்டா **** ஹாஸ்பிடல் வாங்க. அர்ஜென்ட்” ரஞ்சனின் குரலில் தெரிந்த பதட்டம் கார்த்திக்கை பயப்பட வைத்தது. மலருக்கு என்னவோ என்று பதறிப் போனான். அந்த நிலையிலும் ரஞ்சனின் மேல் சந்தேகம் வந்தது.



“டேய் அவளை என்ன பண்ணின? என் தங்கை உன்னை மாதிரி ஆளையெல்லாம் லவ் பண்ணினதே பெரிய விஷயம். அவளை எதுவும் பண்ணிடாத. அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னை சும்மா விடமாட்டேன்.” கார்த்திக்கின் வார்த்தைகளில் அனல் பறந்தது.



“அடேய்! அமைதியா இரு டா. முதல்ல எழுந்து போ, காரை ஸ்டார்ட் பண்ணு, நாம கிளம்பலாம்” என்று நண்பனை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளிய ஈஸ்வர், “நீங்க சொல்லுங்க ரஞ்சன், நான் ஈஸ்வர். மலருக்கு என்ன ஆச்சு? பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை தானே?” என்று கேட்டான்.



“எனக்குத் தெரியலை ஈஸ்வர். நல்லா தான் பேசிட்டு இருந்தா. நாங்க கேண்டீன்ல இருந்தோம், ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கலாம்னு போனேன். திடீர்னு ஒரு சத்தம். மலர் அப்படியே மயங்கி கீழே விழுந்துட்டா. என்ன பண்ணினாலும் கான்சியஸ் வரலை. நான் அவளைக் கூட்டிட்டு ஹாஸ்பிடல் போறேன். நீங்களும் சீக்கிரம் வாங்க, ப்ளீஸ்.” ரஞ்சனின் குரலில் தெரிந்த நடுக்கம் ஈஸ்வரைச் சற்றே இளக்கியது.



“ம்ம்.. ஓகே ரஞ்சன். பயப்படாதீங்க, அவளுக்கு எதுவும் ஆகாது. நாங்க கிளம்பிட்டோம். பத்தே நிமிஷத்தில் அங்கே இருப்போம். டேக் கேர்” என்று அழைப்பைத் துண்டித்தான்.



“அவன் சரியில்லைன்னு நான் சொல்லிட்டே இருக்கேன். நீ கூட காதுல வாங்க மாட்டேங்குற. மலர் ரொம்ப சாஃப்ட் டா, சின்ன வலி கூட தாங்க மாட்டா. ஊரையே கூட்டற அளவுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணிடுவா. இப்போ என்ன பண்றாளோ தெரியலையே.. அவனை.. “ என்று பல்லைக் கடித்தான் கார்த்திக்



ஹாஸ்பிடல் செல்லும் வழியெல்லாம் இப்படித்தான் கார்த்திக் புலம்பிக் கொண்டே வந்தான்.‌ இவர்கள் அங்கே சென்று சேர்ந்த போது மலருக்கு சிகிச்சை ஆரம்பித்து இருந்தது.



“இங்கே மலரோட அட்டென்டர் யார்? உங்களை டாக்டர் கூப்பிடறாங்க” என்று ஒரு நர்ஸ் வந்து சொல்லி விட்டுச் சென்றாள்.



மூவருமே எழுந்து சென்றனர். இருக்கும் இடம் உணர்ந்து வேறு வழியின்றி கார்த்திக் அமைதியாக இருந்தான். ஆனால் அவன் பார்வையே ரஞ்சனைத் தள்ளி வைத்தது.



“சொல்லுங்க டாக்டர், நான் மலர்விழியோட அண்ணா. அவளுக்கு என்ன ஆச்சு, எதுவும் பெரிசா இல்லை தானே?” என்று டாக்டரிடம் கேள்வி எழுப்பி தனது உரிமையை நிலைநாட்ட முயன்றான் கார்த்திக்.



“பொறுமையா கேளுங்க மிஸ்டர்.கார்த்திக்! அவங்களுக்கு ஏற்கனவே ஏதாவது எபிசோட்ஸ் வந்திருக்கா?”



“வாட்? என்ன சொல்றீங்க டாக்டர்? எபிசோட்னா எதைச் சொல்றீங்க? ஃபிட்ஸா? அவளுக்கு அதெல்லாம் கிடையாதே!”



“பட் இப்போ பின் மண்டைல அடிபட்டு உள்ளே சைலன்டா சீஷர் தான் நடந்திருக்கு. அதனால தான் அன்கான்ஷியஸ் ஆயிட்டாங்க. அவங்க ஈஈஜி ரிப்போர்ட் அதைத் தான் சொல்லுது.”



“ஓ.. அப்போ தானா கண் முழிச்சிடுவால்ல டாக்டர்?”



“அதைப் பத்தி தான் நான் பேச வந்தேன். சீஷர் வந்து இரண்டு மணி நேரம் ஆச்சு. ஜெனரலா இதுக்குள்ள கான்ஸியஸ் ஆகியிருக்கணும். எல்லாரும் அதுக்கப்புறம் நல்லா தூங்குவாங்க. பட் மலர்விழி இன்னும் அன்கான்ஷியஸ் ஸ்டேட்ல தான் இருக்காங்க. பின் மண்டையில ஏற்பட்ட அடி கூட ஒரு காரணமா இருக்கலாம். மெடிசின்ஸ் கொடுத்திருக்கிறோம். மானிட்டர் பண்றோம். இம்ப்ரூவ்மென்ட் இருக்கணும். லெட் அஸ் வெயிட் அன்ட் ஸீ” என்று தனது தரப்பில் விளக்கம் கொடுத்தார் அந்த மருத்துவர்.



“வெல் டன் மிஸ்டர்.ரஞ்சன், இந்த மாதிரி சூழ்நிலைல இம்மீடியட்டா ஹாஸ்பிடல் வரணும்னு தோணறதே பெரிய விஷயம். நீங்க பண்ணது க்ரேட் ஜாப்!” என்று கூடவே ரஞ்சனைப் பாராட்டியதைத் தான் கார்த்திக்கால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.



“அவன் தான் தள்ளியும் விட்டிருப்பான்..” என்று முனகினான்.



டாக்டருக்குக் கேட்டதோ இல்லையோ பக்கத்தில் நின்ற இருவருக்கும் நன்றாகவே கேட்டது. ஈஸ்வர் நண்பனை முறைக்க, ரஞ்சன் அமைதியாக அமர்ந்து கொண்டான்.



ஈஸ்வர், கார்த்திக்கின் பெற்றோருக்குத் தகவல் சொன்னான். ராஜ்மோகனுக்கு அன்று முக்கியமான மீட்டிங் இருப்பதால் உடனே வர முடியவில்லை.

சுந்தரியும் ஜனனியும் உடனே வந்து சேர்ந்தனர். இருவரும் ரஞ்சனிடம் சென்று என்ன ஆயிற்று என்று விசாரிக்க, அவர்களையும் சேர்த்து முறைத்தான் கார்த்திக்.



அன்று மாலையில் கண்விழித்த மலர்விழி, சுற்றி இருந்த அனைவரையும் பார்த்துப் புன்னகைத்தாள். ரஞ்சனின் முகத்தில் அவளது பார்வை நிலைத்தது. அவன் அத்தனை நேரம் இருந்த டென்ஷன் எல்லாம் வடிய, “ஃப்ளவர்!” என்று அழைத்தபடி அவளருகில் வந்து கையைப் பிடித்தான்.



சட்டென்று கையை உருவிக்கொண்டாள் மலர். “என்ன ஆச்சு மலர்?” என்று கேட்டவனை புரியாத பார்வை பார்த்தாள்.



“நீங்க என்ன கேட்கிறீங்கன்னே எனக்குப் புரியலை பாஸ். நீங்க எப்படி இங்கே, எனக்கு என்ன ஆச்சு, நான் ஏன் ஹாஸ்பிடல்ல இருக்கேன்?” என்று கேட்ட மலரை யாரும் சந்தேகப் படவே இல்லை. அவள் அடுத்து பேசிய வார்த்தைகள் தான் ரஞ்சனை எங்கோ தூரத்தில் தள்ளி நிறுத்தியது.



“ஓ.. ஆஃபீஸ்ல இருக்கும் போது மயக்கம் போட்டேனா? இல்லையே.. நாம பார்ட்டில தானே இருந்தோம். அதான் நீங்க வந்தீங்களா? இந்த விகாஸ் தானே வந்திருக்கணும். எல்லாருக்கும் சீஃப், நீங்க எப்படி எனக்காக வந்தீங்க பாஸ்?” அவளது குரலில் சற்றும் பிசிறில்லை.



ஆனால் அவளது பேச்சைக் கேட்டு அனைவரும் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே கிடையாது.



“விகாஸ் வந்திருக்கணுமா? என்ன சொல்ற மலர். விகாஸ் கம்பெனிய விட்டு போய் மூணு மாசம் ஆச்சு. இப்போ உலகத்தையே விட்டு போயிட்டார். அது கூட ஒரு மாசம் ஆகப் போகுது. இப்போ போய் இப்படி கேட்கிற?” அப்போதும் அவள் ஏதோ விளையாடுகிறாள் என்று தான் ரஞ்சன் நினைத்தான். அதனால்தான் பேச்சை வளர்த்தான்.



அவளோ, “ஒரு நிமிஷம் பாஸ்” என்று சொல்லிவிட்டு கார்த்திக்கை அருகில் அழைத்தாள்.



அவனைக் குனியக் செய்து மெதுவாகப் பேசினாள். “கார்த்திக், நான் சொல்லி இருக்கேன்ல. இவர் தான் எங்க ஆஃபீஸ்ல எல்லாருக்கும் பாஸ். சாதாரண எம்ப்ளாயிக்காக வருவார்னு நான் நினைக்கவே இல்லை. இப்போ என்ன பண்றது?” என்றாள் ரகசியமாக.



ஆனால் அவள் பேசியது ரஞ்சனின் காதில் விழத்தான் செய்தது. மலரின் நிலை தெளிவாகவே புரிந்தது. அவனுக்குள் ஏதோ ஒன்று உடைந்து போனது. அமைதியாக டாக்டரை அழைத்து வந்தான்.



அவர் வந்து சில டெஸ்டுகளைச் செய்து விட்டு மலருக்கு அம்னீஷியா என்று உறுதி செய்தார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அதாவது கம்பெனியின் ஆண்டு விழா என்று நடந்த பார்ட்டிக்குப் பின்னர் நடந்தது எதுவும் அவளது ஞாபகத்தில் இல்லை.

சுருக்கமாகச் சொன்னால், ரஞ்சனுடனான பர்சனல் விஷயங்கள் அனைத்தும் மறந்து போய் அவளது பாஸ் என்ற ஞாபகம் மட்டுமே அவளுக்கு இருந்தது.



கார்த்திக் உட்பட அனைவரும் அவனைப் பரிதாபமாகப் பார்த்தனர்.

தொண்டையில் அடைத்ததை சரி செய்து கொண்டு, “இது சரியாக எவ்வளவு டைம் எடுக்கும் டாக்டர்” என்று கேள்வி எழுப்பினான்.



“இதுல டைம் லைன் எதுவும் கிடையாது மிஸ்டர்.ரஞ்சன், தானா குணமாகும். நாம பழசு ஞாபகம் வர்றதுக்கு தேவையான முயற்சி செய்யலாம். ஆனால் அது ஓவர் டோஸானால் பெரிய பிரச்சினை ஆகிடும்.”



“ஓ..” என்றவன் மலரைத் திரும்பிப் பார்த்தான். “நான் கிளம்பறேன் மலர். வரேன் ஆன்ட்டி, வரேன் ஜானுக்கா. பை ஈஸ்வர்” என்று திரும்பி நடந்தான்.



“ரஞ்சன்! கொஞ்சம் நில்லுங்க ப்ளீஸ்” என்று அவன் பின்னால் சென்றான் ஈஸ்வர்.



“நீங்க என்ன பேசப் போறீங்கன்னு தெரியும் ஈஸ்வர். எதுவானாலும் அப்புறம் பார்க்கலாம். எனக்கு கொஞ்சம் தனியா இருக்கணும் போல இருக்கு, ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க” என்றவன் தனது கண்களில் வழிந்த நீரை கட்டுப் படுத்த முயன்றான். ஈஸ்வரைப் பார்த்து வரேன் என்பது போலத் தலையசைத்தவன் அப்படியே சென்று விட்டான்.



அவன் செய்வதைப் பார்த்த மலர் தனக்குள் சிரித்துக் கொண்டாள். அதன் பிறகு அவன் மலரைப் பார்க்க மருத்துவமனைக்கு வரவே இல்லை. ஒரு வாரம் கழித்து வீடு வந்து சேர்ந்த மலர், தனது ராஜினாமா கடிதத்தை யாருக்கு அனுப்புவது என்று தெரியாமல் எச்ஆருக்கு அனுப்பி வைத்தாள்.



கார்த்திக்குடன் ஒரு நாள் அலுவலகம் சென்று லேப்டாப், ஐடி கார்டு போன்றவற்றைக் சமர்பித்து வந்தாள். அன்று ரஞ்சன் ஆஃபீஸ் வரவே இல்லை. சில சமயங்களில் மலர் தூங்கும் மதிய நேரத்தில் அவளைப் பார்க்க வருகிறான். சுந்தரியின் கையால் ஒரு காஃபி குடித்துவிட்டு கிளம்பி விடுவான். கல்யாணம் பற்றிய பேச்சே இருபக்கமும் வரவில்லை.



சில சமயங்களில் கார்த்திக் கூட ரஞ்சனின் நிலையை நினைத்து அவன் மேல் பரிதாபப்பட ஆரம்பித்தான். ஆனாலும் ரஞ்சனின் மேலுள்ள சந்தேகம் மட்டும் மாறவே இல்லை.



இப்படியே ஒரு மாதம் கடந்த நிலையில், சுந்தரி மகளது திருமணப் பேச்சை ஆரம்பித்து வைத்தார்.



“என்னங்க! இப்படியே நாளும் கிழமையும் போயிட்டே இருந்தால் என்ன பண்றது? குறிச்ச தேதியில் கல்யாணம் பண்ணிடலாம். அப்புறம் எல்லாம் தானா சரியாகிடும்” என்ற தாயை முறைத்து வைத்தான் கார்த்திக்.



“மா.. நீயும் ஒரு சராசரி இந்தியன் மதர்னு ப்ரூவ் பண்ணிட்ட. வெரிகுட். எதை எடுத்தாலும் கல்யாணம் ஆனா சரியாகிடும்னு.. லூசுத்தனமா பேசாமல் இரும்மா” என்று கத்தினான்.



“அதுக்கில்ல டா. இரண்டு பேரும் பிரியப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டாங்க, இப்போ மலருக்கு இப்படி ஆனதை நினைச்சு மாப்பிள்ளையும் ஃபீல் பண்றார். இவளுக்கு அவரை ரொம்ப பிடிக்கும்னு நமக்குத் தான் தெரியுமே.. அதனால தான் கல்யாணம் ஆனா சரியாகிடும்னு சொல்றேன். எப்படியோ, ஏதோ ஒரு சூழ்நிலையில் பழைய ஞாபகங்கள் வந்தால் நல்லது தானே.”



“ஆமா.. பொல்லாத மாப்பிள்ளை. அவனைக் கல்யாணம் பண்ணி இன்னும் இவ கஷ்டம் தான் படணும். ஆரம்பத்தில் இருந்தே நான் அவன் வேண்டாம்னு சொல்லிட்டே இருந்தேன்.. யாராவது கேட்டீங்களா? இப்போ பாருங்க நம்ம வீட்டுப் பொண்ணு தான் அம்னீஷியா வந்து கஷ்டப்படறா. இனிமேல் யாரும் அவ கல்யாணத்தை பத்தி பேச வேண்டாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என்று கத்தினான்.



அவனது கோபம் எதற்காக என்று புரியாமல் சுந்தரியும் அமைதியாகி விட்டார். ராஜ்மோகனுக்கு மனைவி சொல்வதும் புரிந்தது, மகனது கோபமும் புரிந்தது. இதையெல்லாம் விட மகளின் நிலை கவலையளித்தது. ஆனால் இன்றைய நிலையில் அவளது விருப்பத்தைக் கேட்காமல் திருமணம் பற்றிய பேச்சே வரக்கூடாது என்று அவர் தெளிவாக இருந்தார்.



மலர்விழியின் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று தெரிந்தவர்கள் எல்லாம் கல்யாண வேலையெல்லாம் எப்படி நடக்கிறது என்று கேட்கத் தான் செய்கிறார்கள். அவர்களிடம் சிரித்தே சமாளிக்கிறார். மலர்விழியின் அம்னீஷியா வெகு சிலரைத் தவிர மற்றவருக்கு தெரிவிக்கப்படவில்லை. அலுவலகத்தில் கூட அவளுக்கு தலையில் ஏதோ சிகிச்சை செய்திருக்கிறார்கள் என்று தான் தெரியும். ராஜினாமா கடிதத்தில் கூட

பெர்சனல் காரணங்களால் என்னால் தொடர்ந்து வேலை செய்ய இயலாது என்று தான் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.



“கார்த்திக் சொல்றதும் சரிதான் சுந்தரி. எதுவானாலும் மலர் சொல்லட்டும். அதுக்கு அப்புறம் தான் கல்யாணம் பத்தி நாம ஒரு முடிவுக்கு வர முடியும். அவளை எதுக்கும் ஃபோர்ஸ் பண்ணக் கூடாது. அப்புறம் வேற ஏதாவது பிரச்சினை வந்திடப் போகுது.” மனைவியைச் சமாதானம் செய்வதாக நினைத்து பயமுறுத்தி விட்டு அலுவலகம் கிளம்பினார் ராஜ்மோகன்.



“எனக்கு மட்டும் என் பொண்ணு மேல அக்கறை இருக்காதா என்ன? ஆளாளுக்கு பேச வந்துட்டாங்க” என்று நொடித்துக் கொண்டார் சுந்தரி.



நாள் முழுவதும் மகளைப் பார்த்துக்கொண்டு இருந்தவருக்கு அவளது நிலை குறித்து மிகவும் கவலையாக இருந்தது. காதலித்து திருமணம் செய்ய இருந்தவனை அடையாளம் தெரியாத நிலையில் மகளின் மனம் என்ன பாடுபடும் என்ற கவலை.



********

இப்படியே சில மாதங்கள் கடந்தது. அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. அனைவரும் டிவி முன்னால் கூடி இருக்க, கார்த்திக் ஏதோவொரு நியூஸ் சானலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.



“மிஸ்டர.ரஞ்சன் கோஸ்வாமி xyz edu services pvt Ltdன் CEOவாக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை நியூஜெர்சியில் இருந்த கம்பெனியின் தலைமை அலுவலகம் உறுதி செய்தது. இதன் மூலம் மிகவும் குறைந்த வயதில் ஒரு அமெரிக்க கம்பெனியின் CEO ஆன முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.”



TVயில் ஸ்க்ரோல் ஆகிக் கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ரஞ்சனின் பேட்டி வேறு மாறி மாறி எல்லா சானல்களிலும் வந்து கொண்டிருந்தது. டிவியைப் பார்த்து மர்மமாகப் புன்னகைத்த மலர்விழி பின்னர் சத்தமாகச் சிரித்தாள்.