• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு -23

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
366
பகலிரவு பல கனவு -23

அசையாது அதே இடத்தில் நின்றான்
பிரபாகரனன். அவனது முகம் பாறையாக இறுகி இருந்தது. அருகில் நின்ற சம்யுக்தாவின் நிலையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை எனலாம். நேற்று வரை கண்ட கல்யாண கனவெல்லாம் இன்று கானல் நீராகிப் போனதில் செய்வதறியாது திகைத்து நின்றாள்.

“டேய் பேராண்டி! என்னத்துக்கு இப்படி இடிச்ச புளியாட்டம் நிக்குற? மாடிக்குப் போக வழி மறந்து போச்சா? மூளைய கழட்டி வச்சிட்டு வெட்டிப் பேச்சுக்கு காது கொடுத்தா இப்படித் தான், வாய்க்கு வந்ததை பேசத் தோணும். புத்திமதி சொன்ன சொந்தமெல்லாம் இத்தனை வருஷம் எங்க இருந்தாங்களோ தெரியல. அவங்க சொன்னா.. நமக்கெங்க போச்சு புத்தி? யாரை என்ன பேசுறோம்னு தெரியாமல் வார்த்தையை விடலாமா?”

இன்னும் என்ன பேசியிருப்பாரோ, “போதும் அப்பத்தா. நீயும் வார்த்தையை விடாத. வா சம்யூ, முதல்ல டிரஸ் சேஞ்ச் பண்ணு” பிரபாகரன் அந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தான். ஆனால் அவன் மனைவியோ ஆணியடித்தது போல அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.

“அடடா! சம்யூ! இப்போ உன் டர்னா? உன் கால்ல எதுவும் ஃபெவிகால் ஒட்டிக்கிச்சா? உனக்கு எப்படியோ எனக்கு டயர்டா இருக்கு. இந்த டிரஸ் வேற கசகசன்னு இருக்கு. பதிலுக்கு பதில் பேசறதுக்கு வாழ்க்கை பூராவும் இருக்கு. இப்போ நடையைக் கட்டு” என்று சத்தமாகச் சொன்னவன், அவள் காதோரம் குனிந்து “உன்னால நடக்க முடியாதுன்னா சொல்லு, நான் தூக்கிட்டு போறேன். எப்படி வசதி” என்றான்.

சம்யுக்தா பிரபாகரனை முறைக்க, மலர்விழி இருவரையும் ஆர்வமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

“நீயென்ன இங்கேயே வேடிக்கை பாக்குற ஃப்ளவர்? போய் அந்த கதையெல்லாம் பத்திரமா எடுத்து வை.” தங்கைக்குப் பெரிய வேலை கொடுக்க அவள், “என்னாது… ஆத்தாடி நான் இந்த ஆட்டத்துக்கு வரல. அண்ணி! ஒரு நிமிஷம் இருங்க வரேன்” என்று அவளது அறைக்குள் சென்றவள் ஒரு டிராவல் பேக்கோடு வந்தாள்.

“இந்தாங்க பிடிங்க. இதையெல்லாம் உள்ள எடுத்து வைங்க. அப்படியே கையோட உங்க ரூமுக்கு எடுத்துட்டு போயிடுங்க.” பேசிக்கொண்டே அனைத்தையும் பையில் வைத்து சம்யுக்தாவின் கையில் கொடுத்தவள் அவளை நறுக்கென்று கிள்ளினாள்.

அவள் ஆவென்று அலற, “ஏய்! லூசு ஃப்ளவர்! எதுக்குடி என் பொண்டாட்டிய கிள்ளுற? எப்படி சிவந்து போச்சு பாரு. வலிக்குதா சம்யூ?” பிரபாகரன் மனைவியின் கையைப் பிடித்துப் பதறினான் பிரபாகரன். சம்யுக்தா அமைதியாக இல்லை என்று தலையசைக்க, மலர்விழி, சாரி அண்ணி! ஃப்ரண்ட்ஸ் கிட்ட செய்யற மாதிரி செஞ்சிட்டேன். இந்த நகையெல்லாம் கொடுத்துட்டேன் ஞாபகம் வச்சுக்கோங்கன்னு சொல்றதுக்கு தான் அப்படி செஞ்சேன். ரொம்ப வலிக்குதா? சாரி அண்ணி!”

மலர்விழியின் பதற்றம் சம்யுக்தாவின் மனதிற்கு இதமாக இருந்தது. தன்னை நெருக்கமாக நினைத்தால் தானே இப்படி செய்ய முடியும் என்று நேர்மறையாகவே சிந்தித்தாள். நேற்று முதல் தன்னை மணமகள் என்று உணரவைக்க மலர்விழி செய்த செயல்கள் யாவும் அவள் கண் முன்னே படமாக ஓடியது. மலர்விழி கொடுத்த பையைக் கையில் வாங்கியவர், அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள். “எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கும் ஃப்ளவர்” தானும் பதிலுக்கு நறுக்கென்று கிள்ளியவள் பிரபாகரனை இழுத்துக் கொண்டு வேகமாக மாடியேறினாள்.

“பாருங்க அப்பத்தா இந்த அண்ணிய, நல்லா நகத்த வளர்த்து வச்சிருக்காங்க. ஸ்ஸ்.. வலிக்குதே.. வலிக்குதே.” கையை ஊதிக்கொண்டே புலம்பிய பேத்தியின் தலையில் செல்லமாகக் கொட்டினார் அப்பத்தா.

“உனக்கு வந்தா ரத்தம், அவளுக்கு வந்தா தக்காளி சட்னியா?” சிரித்துக்கொண்டே கேட்ட அப்பத்தா அங்கே நின்ற காமாட்சியைக் கண்டு கொள்ளாமல் தனது அறைக்குள் சென்று விட்டார். மலர்விழியும், “இதுக்கு தான் நல்லதுக்கு காலமே இல்லன்னு சொல்றாங்க போல” என்று சோகமாக மூஞ்சியை வைத்துக் கொண்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள். காமாட்சியின் பக்கம் அவள் திரும்பவே இல்லை.

நின்ற இடத்திலேயே ஆணியடித்தது போல அவர் நிற்க, அப்போது தான் வீட்டினுள் நுழைந்த முருகானந்தம் மனைவியின் நிலை கண்டு புருவங்களை உயர்த்தினார். மண்டபத்தில் நடைபெற்ற களேபரத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்திருந்தார். மணமக்கள் தங்கள் வீட்டுக்குத் தான் வருகிறார்கள் என்ற செய்தி அறிந்தும் அவர் வரவில்லை. வீட்டுப் பெண்கள் எப்போதுமே பிரபாகரனின் பக்கம் இருப்பதை அறிந்தவராயிற்றே. அவர்களின் புது மருமகளோடு கொஞ்சி குலாவுவதைக் காணப் பிடிக்காமல் அவர்களின் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார்.
யாரோ ஒரு நண்பர் பார்த்துவிட்டு விசாரணை செய்ய வீட்டுக்கு நடையைக் கட்டினார்.

“என்ன காமாட்சி, எங்க உன் மகனும் மருமகளும். என்னைப் பெத்த ஆத்தாவக் கூட காணோம். ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கும்னு வந்தா வீடே அமைதியா இருக்கு. நீ இப்படி நடுவீட்டுல பேயறைஞ்ச மாதிரி நிக்குற, என்ன ஆச்சு?” முருகானந்தம் என்னவோ அக்கறையோடு விசாரிப்பதாகத் தான் நினைத்தார். ஆனால் அவர் மனைவியோ வழக்கம் போல அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்று விட்டார்.

“ஹும்.. கட்டுன பொண்டாட்டியே மதிக்கலேனா பெத்தது எப்படி மதிக்கும்? ஆனாலும் இங்கே ஏதோ நடந்திருக்கு போலவே. எம் பொண்டாட்டி முகத்தில எள்ளும் கொள்ளும் வெடிக்குதே. சொந்தக்காரங்க எதுவும் சொல்லி பிரச்சினை ஆகிடுச்சோ?” பலவும் யோசித்தவருக்கு மறந்தும் மகனால் பிரச்சினை வந்திருக்கும் என்று தோன்றவே இல்லை. அந்த அளவுக்கு மகன் மீதான மனைவியின் அன்பு அவரை நம்ப வைத்தது.

“எதுக்கு வம்பு? நாம எப்போதும் போல ஒதுங்கியே இருப்போம்” என்று அங்கே இருந்த சோஃபாவில் அமர்ந்தார்.

மனைவியுடன் வலது காலை எடுத்து வைத்து தனது அறைக்குள் நுழைந்த பிரபாகரன் முதல் வேலையாகக் கதவைத் தாளிட்டான். பின்னர் மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான். அவளுக்கும் அது தேவையாக இருக்க அவனது முதல் அணைப்பை அனுபவித்தாள். நேரம் செல்லச் செல்ல அந்த அணைப்பு இறுகிக் கொண்டே செல்ல சம்யுக்தா மூச்சு விட முடியாமல் தவித்தாள்.

“பிரபா.. போதும்.. மூச்சு விட முடியல.. விடுங்க.. வலிக்குது” ஏதேதோ சொன்ன போதும் அவன் விலகவே இல்லை. ஒரு கட்டத்தில் தன் பலத்தை திரட்டி அவனைத் தள்ளி நிறுத்தினாள். “ஹேய்! ஏன்டி என்னைத் தள்ளுற? நானே அஞ்சு வருஷமா வெஜிடேரியன் லவ்வுல மாட்டிக்கிட்டு ஒரு வழியா லைசன்ஸ் வாங்கி இருக்கேன். இப்போ நீ எதுவும் அப்ஜக்ஷன் சொல்ல முடியாது தெரியுமா?” மீண்டும் அணைக்க முயன்றவனின் கைகளைத் தட்டிவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்தாள் அவள். கையில் இருந்த பையைக் கட்டிலில் வீசினாள்.

“அட சம்யூ மேடம் கோபமா இருக்காங்க போலிருக்கே! ஆனாலும் உங்க கோபம் இவ்வளவு காஸ்ட்லியா இருக்கக் கூடாது.” பேசிக்கொண்டே நகை அனைத்தையும் எடுத்துக் கட்டிலில் பரப்பினான்.

“உன் பொறந்த வீட்டு சீதனம், இது மட்டும் தானா, இன்னும் இருக்கா?” அவனது கேள்வி புரியாமல் விழித்தாள் சம்யுக்தா. அந்தக் கேள்வியில் ஒளிந்திருந்த கோபம் அவளுக்குப் புரியவில்லை.

“இல்ல.. இதெல்லாம் இன்னைக்கு போட்டிருந்தது. நேத்து போட்ட நகையெல்லாம் எங்க?”

“ஓ.. அதுவா.. எல்லாம் அந்த சூட்கேஸ்ல இருக்கு.” அவள் காட்டிய சூட்கேஸ் மெகா சைஸில் இருந்தது. பாதுகாப்பாகத் துணிகளுக்கு இடையே வைத்திருக்கிறாள் போலும் என்று நினைத்துக்கொண்டான்.

“எல்லாத்தையும் வெளியே எடுத்து வை” என்றவனைப் புரியாமல் பார்த்தாள் சம்யுக்தா.

“எல்லாத்தையுமா?? இப்போ வேண்டாமே, நான் முதல்ல டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கிறேனே!”

“இல்ல.. முதல்ல நகையெல்லாம் எடு.. நான் பார்க்கணும்” என்றவனின் குரல் அவளுக்குப் புதியது. பதில் எதுவும் சொல்லாமல் பெட்டியைத் திறந்து வைத்தாள். முழுவதும் சிறிதும் பெரியதுமாக அடுக்கப்பட்ட நகைப் பெட்டிகள். பிரபாகரனின் கண்கள் கோபத்தில் சிவந்தது.

“எல்லாத்தையும் வெளியே எடுத்து வைன்னு சொன்னேன்.”

“ம்ம்.. “ அமைதியாக அனைத்தையும் எடுத்து வெளியே வைத்தாள். தங்கமும் வைரமுமாக அந்த கிங் சைஸ் கட்டில் முழுவதுமாகப் பரப்பி வைக்கப்பட்டிருந்த நகைகளை பிரபாகரனின் கண்கள் கணக்கெடுத்தது.

தங்க‌ நகைகள் மட்டுமே குறைந்தது இருநூறு பவுன் இருக்கும். அன்றைய மதிப்பில் ஒன்றரை கோடிக்கும் குறையாமல் இருக்கும். மூன்று வைர செட் மட்டும் இருபது லட்சத்துக்கும் மேலாக இருக்கும். கட்டிலில் இடம் இல்லை என்று வெள்ளி சாமான்களைத் தனியாக மேசையில் அடுக்கி இருந்தாள். இரண்டு பெரிய குத்து விளக்குகள், தட்டுகள், டபரா டம்ளர் செட், சிலபல கிண்ணங்கள் என்று கிட்டத்தட்ட பத்து கிலோ தேறும். இது தவிர முப்பது லட்சம் பாங்க் அக்கவுன்ட்டில்… எல்லாம் சேர்த்து மொத்தத்தில் இரண்டு கோடியைத் தொட்டுவிடும்.

‘சொந்தமே வேண்டாம்னு சொன்னவங்க எதுக்கு இதெல்லாம் கொடுத்து விட்டிருக்காங்க. இந்த நகை, பணம் எல்லாம் தான் அம்மா அப்பாவா. ஒரு வேளை இதையெல்லாம் பார்த்தா நான் அவங்களுக்கு அடங்கி இருப்பேன்னு நினைச்சாங்களோ?’ நல்ல வேளையாக பிரபாகரன் தன் மனதில் நினைத்ததை வெளியே சொல்லவில்லை. அப்படி ஒன்று நடந்திருந்தால் விளைவுகள் விபரீதமாக இருந்திருக்கும்.

‘முதல்லயே தெரிஞ்சிருந்தா அவங்க மூஞ்சிலயே வீசிட்டு வந்திருக்கலாம். எனக்கு முன்னாடியே தெரியும்னு நினைச்சிட்டாங்களோ? அதனால தான் அந்த சஞ்சய் பார்க்கும் போதெல்லாம் இளக்காரமாவே பார்த்தானோ?’ என்று பலதும் யோசித்தவன் தலையில் கைவைத்துத் தரையில் அமர்ந்து விட்டான்.

‘நல்லவேளை, இதெல்லாம் அப்பாவும் அம்மாவும் பார்க்கலை’ என்று நினைத்துப் பெருமூச்சு விட்டவனுக்கு இந்த விஷயம் எல்லாம் காலையில் நடந்த கலவரத்தில் பாரதியே இருவருக்கும் தெரிவித்திருந்தார் என்பது தெரிய நியாயமில்லை.

சம்யுக்தாவிற்கு எதுவும் புரியவில்லை. உண்மையில் இந்த நகைகளை வாங்கும் போதும் சரி, அத்தனையும் எடுத்து பெட்டியில் அடுக்கும் போதும் சரி பாரதி சந்தோஷமாகவே செய்தார்.

“ஏம்மா, எல்லாத்தையும் இப்பவே எதுக்கு எடுத்துட்டு போகணும். அவங்க கிட்ட லாக்கர் இருக்கான்னு தெரியலையே. கல்யாணத்துல போட்டுட்டு நீங்களே எடுத்துட்டு வந்திருங்க. நான் அப்புறம் வாங்கிக்கிறேன். ஆடி, ஆவணின்னு தேவைப்படுமில்ல” என்று அவள் சொன்னபோது கூட , “இதெல்லாம் கல்யாணத்துக்கு தர வேண்டியது. அதனால இப்பவே எடுத்துட்டு போயிடு. லாக்கர் வாங்குறதா கஷ்டம். அடுத்தடுத்து செய்யறதெல்லாம் தனி. எங்களுக்கு ஒத்தப் பொண்ணு நீ. உனக்கு செய்யாமல் யாருக்கு செய்யப் போறோம்” என்று நீளமாகப் பேசி அவளைச் சமாதானம் செய்திருந்தார் பாரதி. ஆடை விஷயத்திலும் அப்படியே நடந்தது.

கூடவே, “அதெல்லாம் அந்த பிரபாகரன் கரெக்டா பண்ணிடுவான்” என்று முணுமுணுத்தது அவரது மகளைச் சென்று சேரவில்லை.

இதையெல்லாம் நினைத்துப் பார்த்தபோது, தன் வீட்டில் இருந்த மற்ற மூவரும் தன்னை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டே திருமண வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டாள் சம்யுக்தா. ஆனாலும் அவளது அன்பு கொண்ட உள்ளம் ஏற்க மறுத்தது. மனதின் அழுத்திய பாரம் தாங்காமல் மயங்கினாள்.

தரையில் அமர்ந்திருந்த பிரபாகரன் அவள் தள்ளாடுவது கண்டு சட்டென்று எழுந்து அவளைத் தாங்கினான். அங்கே இருந்த சோஃபாவில் அவளைப் படுக்க வைத்தான். மேசை மேலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளது முகத்தைத் துடைத்தான். சற்று நேரத்தில் சம்யுக்தா கண் விழித்த போது பிரபாகரன் ஒரு டைரியை வைத்துக் கொண்டு எதையோ எழுதிக் கொண்டிருந்தான். பட்டு வேட்டியில் இருந்து சாதாரணமான உடைகளுக்கு மாறி இருந்தான்.

இவள் விழித்து விட்டாள் என்பதை அறிந்து, ”உள்ள போய் டிரஸ் மாத்திட்டு வா. கொஞ்சம் பேசணும்” என்றான். அவன் குரலில் ஒலித்த ஏதோ ஒன்று அவளை அமைதியாக நகர வைத்தது.

நைட் டிரஸ்ஸூடன் வந்தவளை மேலும் கீழும் பார்த்தவன் அமருமாறு அருகில் இருந்த நாற்காலியைக் காட்டினான்.

“இதுல எல்லாத்தையும் நோட் பண்ணி வச்சிருக்கேன். கடைல இருந்து மெஷின் எடுத்துட்டு வந்து வெயிட் பார்த்து எழுதணும். உன் பேர்ல பாங்க்ல ஒரு லாக்கர் வாங்கலாம். இல்லேன்னா, இங்கேயே பணம் வைக்கிறதுக்காக ஒரு சேஃப்டி லாக்கர் வச்சிருக்கேன். அதுலயும் வைக்கலாம். உன் சாய்ஸ் தான். என்னைக் கேட்டால் உறவே வேண்டாம்னு ஒதுக்கி வச்சதுக்கு அப்புறம் இதுவும் வேண்டாம்னு தான் சொல்லுவேன். ஆனாலும் இது உன் பிறந்த வீட்டு சீதனம். நான் முடிவெடுக்க மாட்டேன்.”

“புரியுது.. உங்களுக்குத் தெரியாம இது நடந்திருக்கக் கூடாது. எல்லாமே நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. அதோ அந்த எமரால்ட் செட் போன வாரம் தான் அண்ணன் வாங்கிட்டு வந்தான். இந்த கொலுசு முந்தா நேத்து தான் அம்மா வாங்கினாங்க. எப்போ நான் வேண்டாம்னு முடிவு பண்ணாங்கன்னு தெரியலை.” நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பேசிய சம்யுக்தாவின் குரல் ஒரு கணத்தில் அழுகையாக மாறியது.

“ஷ்ஷ்.. சம்யூ! அழாத ப்ரீயா விடு. நமக்கு ஏதோ டெஸ்ட் வைக்கிறாங்கன்னு நினைச்சுக்கோ. லவ் மேரேஜ்னா இது கூட இல்லேன்னா எப்படி?” என்று சமாதானம் செய்த பிரபாகரனின் கைகள் அவளது இடுப்பில் ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தது.

பட்டென்று அவன் கைகளைத் தட்டிவிட்டவள், “சீக்கிரம் கட்டிலை க்ளீன் பண்ணுங்க. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு, தூங்கணும்” என்றாள்.

“அடிப்பாவி! தாலி கட்டி ஆறு மணி நேரம் தான் ஆகுது. அதுக்குள்ள அக்மார்க் பொண்டாட்டி நான்னு நிரூபிக்கிறாளே! என்று புலம்பிக் கொண்டு அவள் சொன்ன வேலையைச் செய்து முடித்தான்.

அருகருகே படுத்திருந்த இருவரின் மனதிலும் ஒரு இனம் புரியாத உணர்வு ஆட்டிப் படைத்தது. ஐந்து வருட பழக்கம், எனக்கு நீ உனக்கு நான் என்று முடிவு செய்து இருவருக்குமான வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த போது கூட பெரியவர்கள் ஆசியுடன் தான் திருமணம் என்று இருவரும் தெளிவாக இருந்தனர். எங்கே சறுக்கியது என்று புரியாமல் இருவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

காதருகில் ஒலித்த மொபைல் அழைப்பில் கண் விழித்தான் பிரபாகரன். மலர்விழி தான் அழைத்திருந்தாள்.

“அண்ணே! அண்ணி என்ன பண்றாங்க?”

“அசந்து தூங்குறா மலரு. அவ என்ன பண்றான்னு கேட்கத் தான் கூப்பிட்டியா?”

“அச்சோ மக்கு அண்ணே! அவங்கள எழுப்புங்க. மணி ஆறாச்சு. அவங்க மாமியார் இங்கே புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. சீக்கிரம் கீழே இறங்கி வாங்க.”

“சரி.. ஃபோன வை. வரோம்..” என்று பல்லைக் கடித்த பிரபாகரனுக்கு பின்னணியில் அப்பத்தாவின் குரல் கேட்டது.

“உங்க அண்ணிக்கு சேலை கட்டத் தெரியலேன்னா பரவாயில்லை. சுடிதார் போட்டு வரச் சொல்லு. அவ பாட்டுக்கு டவுசர மாட்டிட்டு வந்து பிக்கப் போறா.”

அதைக் கேட்டு விழித்தான் பிரபாகரன். அப்பத்தாவுக்கு எப்படி இவ டிரஸ் பத்தி தெரியும் என்று யோசித்தான். திருமண மண்டபத்தில் ரிசப்ஷன் முடிந்து எப்போதும் போல நைட் டிரஸ்ஸூடன் படுத்திருந்த சம்யுக்தா காலையில் நலங்கு வைக்க வேண்டும் என்று வந்த அப்பத்தாவிடம் வசமாக மாட்டிய கதை அவனுக்குத் தெரியாதே!

அடுத்த ஐந்தாவது நிமிடம் மனைவியுடன் கீழே இறங்கிய பிரபாகரனின் காதுகளில் “மாமியார் வீட்டுக்கு வந்த முதல் நாளே விளக்கேத்துற நேரம் தூங்கினா வீடு விளங்கிடும்” என்று காமாட்சி முனகுவது கேட்டது.

ஆனால் அதை லட்சியம் செய்யாமல் பூஜையறையில் விளக்கேற்றினாள் சம்யுக்தா.

அடுத்தது என்னவோ என்று இருவரும் காத்திருக்க வந்திருந்த உறவுகளை வெளியே அனுப்பும் வேலையில் இயக்கியிருந்தார் அப்பத்தா.

“என்ன காமாட்சி, உன் மருமக இப்படி சுடிதார் போட்டு வந்து நிக்கிறா.” என்று ஏற்கெனவே அவர்களின் சேவையைத் தொடங்கியிருந்தார்கள்.

“காமாட்சி! எட்டு மணிக்கு நேரம் குறிச்சு கொடுத்திருக்கு. பிள்ளைங்களுக்கு சாப்பாடு போட்டு அனுப்பு. சீக்கிரம் வேலையாகட்டும். மலரு நீ போய் அம்மாவுக்கு ஒத்தாசையா இரு. பிரபா! நீ உன் பொண்டாட்டிய கூப்பிட்டு போய் நம்ம ரயிலடி பிள்ளையார கும்பிட்டு வா.” வீட்டுப் பெரியவராக உத்தரவுகளைப் பிறப்பித்த அப்பத்தாவை நன்றியுடன் பார்த்த புது ஜோடி சத்தமில்லாமல் வாசலுக்கு நழுவியது.

“ஏதோ நாலு பெரியவங்க இருந்து பொண்ண முத ராத்திரிக்கு அனுப்பி வச்சா நல்லதுன்னு தான் இவ்வளவு நேரம் இருந்தோம். மரியாதை இல்லாத வீட்டுல எங்களுக்கு என்ன வேலை?” ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லி காணாமல் போனார்கள்.

ராஜ அலங்காரத்தில் காட்சி தந்தார் பிள்ளையார். எப்போதும் போல இன்றும் அவரைப் பார்க்கும் போதே மனதில் ஒரு இனிமை பரவியது. எதுவும் வேண்டிக் கொள்ளத் தோன்றாமல் கை கூப்பி வணங்கி விட்டு வீடு வந்து சேர்ந்தார்கள். அன்றைய இரவு பற்றிய எந்த நினைவும் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு இனிய உணர்வுடன் இரவு உணவிற்கு அமர்ந்தாள் சம்யுக்தா. மணமக்கள் இருவரும் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். மலர்விழியை எங்கும் காணவில்லை. அவளது சேவை இப்போது தேவையில்லை என்று அப்பத்தா அவளை அறைக்குள் கடத்தியிருந்தார்.

பதார்த்தங்கள் அனைத்தையும் கொண்டு வந்து வைத்த காமாட்சியையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரபாகரன். அவரது முகத்தில் வெறுப்பு மண்டியிருந்தது. கண்களை மூடி வேதனையை விழுங்கினான். அதே முகத்துடன் பரிமாற வந்தவரைக் கை நீட்டித் தடுத்தவன் தானே மனைவிக்கும் தனக்கும் பரிமாறிக் கொண்டான். காமாட்சி ஏன் என்று கேட்கவில்லை. அதையும் பிரபாகரனால் தாங்க முடியவில்லை.

“என்னம்மா, ஏன் இப்படி இருக்கீங்க? யாராவது ஏதாவது சொன்னாங்களா? வாயைத் திறந்து பேசுங்கம்மா” என்றான் கெஞ்சல் குரலில். பதிலில்லை அவரிடம்.

“இப்படி முகத்தை வச்சிட்டு சாப்பாடு போட்டா நல்லா இருக்கா சொல்லுங்க?”

“நல்லா கேளு.. நானும் மதியத்தில இருந்து பாக்கிறேன். இவளுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல.” அப்பத்தாவும் இணைந்து கொண்டார்.

“எனக்கு என்ன ஆனா உனக்கு என்ன? உங்க வேலை ஆச்சுல்ல.. சந்தோஷமா இருங்க” காமாட்சி பரிமாற வேண்டும் என்ற நினைவில்லாமல் எழுந்
து செல்ல, கோபத்தைச் சாப்பாட்டில் காட்டிப் பழக்கமில்லாத பிரபாகரன் முதல் முறையாக அதைச் செய்தான். கைகளை உதறி விட்டு எழுந்தான்.
 

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -23
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
71
இதல்லாம் அடிக்கடி வரும் பிரபா..இப்பவே கைய உதறினா எப்படி?..உன் அப்பாவேற வைட்ங் ...கூட்டனிக்கு ஆள்சேர்க்க..உஷார் மகனே..
 

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
77
பொண்ணோட பணம், நகைகளையும் கொடுத்து ஒரேயடியா செட்டில்மென்ட் பண்ணிட்டாங்களோ?🤔

உறவை விட பணம், நகை பெரிசு இல்லைன்னு பிரபா புரிய வைப்பானா?🥰

இந்த காமாட்சியை திடீர்னு எந்தப் பேய் பிடிச்சுதுன்னு தெரியலையே....
தெரிந்தா முருகானந்தம் ஆனந்தக் கூத்தாடுவாறே?😂

காதல் ஜோடிகள் காவியம் படைக்குமா, கண்ணீர் விடுமா தெரியலையே......
 
Top Bottom