• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அத்தியாயம் - 9

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
366
அத்தியாயம் – 9

திருச்சுழியல் திருமேனி நாதர் திருக்கோயில்‌ .

திருச்சுழியல் கிராமம் கன்னடப் படையினரோடு கிடைத்த வெற்றிக்குப் பரிசாக சேதுபதி மன்னருக்கு வழங்கப் பட்டிருந்தது. மதுரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் சேதுபதி மன்னர் திருமேனி நாதனை தரிசித்துச் செல்லலாம் என்று வந்திருந்தார்.

திருவிழாவின்‌ கடைசி நாள் அன்று. சுவாமியும்‌ அம்பாளும்‌ வீதி உலாவினை முடித்து கோயில்‌ திருக்கல்யாண மண்டபத்திற்கு வந்த பொழுது, பவுர்ணமி நிலவு முழுக்‌ கதிர்களுடண்‌ கிழக்கு வானிலிருந்து உச்சிக்குச்‌ சென்று கோண்டிருந்தது. வெள்ளியைக் காய்ச்சி ஊற்றினாற்போன்ற அந்த நிலவின்‌ ஒளி
எங்கும்‌ பரவி இனிமையைப்‌ பொழிந்து கொண்டிருந்தது.

சுவாமி மற்றும் அம்பாளின் திருமேனிகளைப் பல்லக்கில் இருந்து இறக்கி அங்கிருந்த மண்டபத்தில் அமைக்கப் பட்டிருந்த மேடை மேல் வைத்தார்கள். மேடைக்கு முன்னால் நீண்ட விரிப்புகள் விரிக்கப்பட்டு இருந்தன. மண்டபத்தின் தூண்களில் கட்டப்பட்டிருந்த தீவெட்டிகள் அந்த இடத்தைப் பிரகாசமுறச் செய்தன.
பிரதானியுடன் அங்கே வந்த சேதுபதி மன்னர் மேடையில் வீற்றிருக்கும் தெய்வங்களை வணங்கி விட்டு அவருக்காக இடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார். பின்னர் அதுவரையில் நின்று கொண்டிருந்த குடிமக்களைப் பார்த்து அமருமாறு செய்கை செய்ய அவர்களும் அங்கிருந்த விரிப்புகளில் அமர்ந்தார்கள்.

மேடைக்குப் பின்னால் இருந்த திரையை அடுத்து பூம்பாவை நின்றிருந்தாள். முழு ஒப்பனையுடன் நின்றிருந்த அவளது தோற்றம் இன்று அங்கே நாட்டியம் ஆட வந்திருக்கிறாள் என்பதை அறிவித்தது. சற்று நேரத்தில் அவள் அவையின் முன் வந்து வணங்கி விட்டு விரிப்பின் மையப் பகுதிக்குச் சென்றாள்.
நட்டுவனாரின் சிங்கி சத்தம் போடத் தொடங்கியது. நடனக் குழுவினரின் பாடல், வீணை, மத்தளம், குழல் போன்றவைகளின் இனிமையான இசை ஒலிக்கத் தொடங்கியது.

அன்றைய நடன நிகழ்ச்சி உலகாளும் ஈசனின் திருவிளையாடல்களை மையப்படுத்தி அமைக்கப் பட்டிருந்தது. சோமசுந்தரர், நரிகளைப் பரிகளாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, கல் யானைக்குக் கரும்பைக் கொடுத்தது போன்ற திருவிளையாடல்களை தக்க அபிநயங்களோடு ஆடினாள் பூம்பாவை. நடனத்தை ஆர்வத்துடன் கண்டு களித்த மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தார்கள்.

இரண்டு நாழிகைக்கும் மேலாகக் கலா தேவியின் நடனத்தை மெய்மறந்து பார்த்துக்கொண்டு இருந்த அனைவரும் நிகழ்ச்சி முடிந்து விட்டதே என்று வருந்தினர்.

நடனத்தை முடித்துக் கொண்ட பூம்பாவை சேதுபதி மன்னரின் முன்பு வந்து கரம் கூப்பி வணங்கி நின்றாள். தாமே நடனத்தைக் கற்றுத் தேர்ந்தவராக இருந்த மகாராஜா அவளது நடனத்தை பலவிதமாகப் பாராட்டினார்.

“பூம்பாவை! உன் நடனம் மிகவும் பிரமாதமாக இருந்தது. பாரம்பரிய நடனத்தை விடுத்து இறைவனது திருவிளையாடல்களை தேர்ந்தெடுத்து ஆடியது புதுமையாக இருந்தது.”

“மகாராஜா! மதுரை மண்ணில் பிறந்தவள் நான். சிறு வயதில் இருந்தே இறைவனின் திருவிளையாடல்களைக் கேட்டே வளர்ந்தேன். பெரிய புராணத்திலும் எனக்கு ஆர்வம் உண்டு. இறை பக்தி என்பது நாளுக்கு நாள் மக்களிடையே குறைந்து வருவது போல் உணர்கிறேன். என்னால் இயன்றவரை என் நடனத்தின் மூலம் இறை பக்தியைச் சாதாரண மனிதர்க்கும் சென்று சேர்க்க வேண்டும் என்ற ஆவல் தான் இப்படி நான் தேர்வு செய்து ஆடக் காரணம்” என்று பணிவுடன் பதிலுரைத்தாள் பூம்பாவை.

“நல்லது. இது இறைக்கும் நடனத்திற்கும் மட்டும் அல்லாமல் தமிழுக்கும் சேர்ந்து செய்யும் தொண்டாகும். சேது நாட்டில் இன்னும் பல மேடைகளில் இந்த நடனத்தை நிகழ்த்திக் காட்டுவதற்கு யாம் ஏற்பாடு செய்கிறோம். உனது பணி செவ்வனே தொடரட்டும். எமது வாழ்த்துக்கள்.”

“தங்கள் உத்தரவுப் படியே மகாராஜா” என்று கரம் கூப்பினாள் பூம்பாவை.
மன்னர், பிரதானியிடம் செய்கை செய்ய அவர் மன்னரின் அருகில் வந்தார். கூடவே ராமுத் தேவன், மன்னரின் தனிப்பட்ட பாதுகாவலன் ஒரு வெள்ளித் தட்டை எடுத்து வந்து பிரதானியிடம் கொடுத்தான். அந்தத் தட்டின் மீது ஆடை ஆபரணங்களுடன் பொற்கிழியும் இருந்தது.

“பூம்பாவை! இவற்றைப் பெற்றுக் கொள். சேது நாட்டின் மரியாதை இது. உனக்கும் உனது சந்ததியினருக்கும் பக்கத்தில் இருக்கும் பாறைக் குளம் கிராமத்தை மான்யமாக அளிக்கிறேன். அதற்கான ஓலை விரைவில் உன்னை வந்து சேரும்.”

மன்னரது உத்தரவைக் கேட்ட பூம்பாவையின் கண்கள் நன்றிப் பெருக்கால் குளமானது. மன்னரின் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து விட்டு பிரதானியின் கையில் இருந்த தட்டைப் பெற்றுக் கொண்டாள்.

கூடியிருந்த மக்கள் அனைவரும், “மன்னர் ரகுநாத சேதுபதி வாழ்க! வாழ்க!” என்று ஆரவாரம் செய்தார்கள்.

மன்னர் இருக்கையில் இருந்து எழுந்து மக்களின் வணக்கத்தைப் பெற்றுக் கொண்டவாறு விருந்தினர் விடுதிக்குச் செல்ல ஆயத்தமானார். மன்னரும் பிரதானியும் பேசிக்கொண்டே அந்த மண்டபத்தை விட்டு வெளியே வந்தார்கள். அவர்களது பின்னால் ராமுத் தேவன் வந்தான்.

பூம்பாவையின் நடனத்தைப் பற்றிச் சிலாகித்துப் பேசிக்கொண்டு இருந்த மன்னரது குரல் திடீரென வேதனையுடன் ஒலித்தது.

பிரதானி வேகமாகத் திரும்பிப் பார்த்த போது மன்னர் தமது இடது கையைப் பிடித்துக் கொண்டு கீழே சாய்ந்தார். பின்னே வந்து கொண்டிருந்த ராமுத் தேவன் வேகமாக முன்னேறி மன்னரைத் தாங்கினான்.

தீவெட்டிகளின் வெளிச்சத்தில் மன்னரது இடது தோளில் செங்குருதி கொட்டியதைப் பார்த்த பிரதானி, “யார் அங்கே?” என்று சத்தமாக அழைத்தார். பின்னால் வந்து கொண்டிருந்த மன்னரின் காவல் வீரர்கள் வேகமாக ஓடி வந்தனர். அவரது பதட்டமான குரல் கேட்டு முன்னே சென்ற நட்டுவனாரும் பூம்பாவையும் கூட மன்னரின் அருகில் வந்தார்கள்.”

“வடக்கே ஓடுங்கள், மன்னரின் மீது கட்டாரியை வீசிவிட்டு ஓடுபவனைப் பிடித்து வாருங்கள்” என்று கட்டளையிட்டார் பிரதானி. அதன்படியே வீரர்கள் ஓடினார்கள்.

தரையில் ராமுத் தேவன் மேல் சாய்ந்து அமர்ந்திருந்த மன்னரின் முன்பு அமர்ந்த நட்டுவனார், மன்னரின் கையை நீட்டுமாறு செய்தார். இரத்தக் கறையுடன் இருந்த ஆடையைக் களைந்து விட்டு தனது மடியில் வைத்திருந்த பையை எடுத்தார். அவரது செயல்பாடுகள் மன்னரை புருவம் உயர்த்தி பார்க்கச் செய்தன. பையில் இருந்த பச்சிலை சாற்றோடு ஒரு சூரணத்தைக் கலந்து காயத்தின் மேல் தடவிக் கட்டுப் போட்டார், நட்டுவனார்.

“ஒன்றும் பயப்படத் தேவையில்லை. மூன்று நாட்களில் காயம் ஆறிவிடும்” என்று சொன்னவரது பின்புலத்தை அறிய விரும்பினார் மன்னர்.

“இதென்ன, ஜதி சொல்லும் கைகளில் பச்சிலையும் சூரணமும் காணப்படுவது வியப்பாக இருக்கிறதே. உண்மையில் தாங்கள் யார்?” என்று வினவினார்.

“என் பெயர் வீரபாண்டியன் மகாராஜா! எமது குலத்தொழில் நாட்டியம் தான். ஆணாகப் பிறந்த காரணத்தினால் தாய்க்கு என்னிடம் பிரியமில்லை. அவளது குலம் விளங்கச் செய்யவில்லை என்ற குறை அவளுக்கு. அவளது கச்சேரிகளில் நட்டுவனாரின் அருகில் எனக்கொரு இடம் கிடைத்தது. அது எனது தாயார் அந்த சௌந்தரராஜப் பெருமாளின் முன்னே ஆடிக் கொண்டிருந்த காலம்.
ஓய்வு நேரத்தில் அழகர் மலையில் தான் எனது வாசம். அங்கே உள்ள மூலிகைகள் தான் என்னை மருத்துவம் பயில வைத்தது. அங்கிருந்த வைத்தியர் ஒருவரிடம் முறையாகக் கற்றேன். ஆனாலும் குலத் தொழிலை விட முடியாமல் நட்டுவாங்கமும் பயின்றேன். என் மனதுக்குள் எப்போதும் வைத்தியர் என்ற எண்ணம் தான் மேலோங்கி நிற்கிறது. இதோ தக்க சமயத்தில் தங்களுக்கு உதவ முடிந்ததே” என்று பணிவோடு உரைத்தார் அவர்.

அவர்களிடம் விடைபெற்று மன்னரும் அவரைச் சார்ந்தவர்களும் விருந்தினர் விடுதிக்குச் சென்றனர்.

மறுநாள் காலை. திருமேனிநாதன் கோவிலின் பூஜைகள் ஆரம்பம் ஆனதை உணர்த்தும் வகையில் மணி அடிக்கப்பட்டது. அந்தச் சத்தம் கேட்டு மன்னர் கண்விழித்தார். அவருக்கு முன்பாகவே விழித்துவிட்ட பிரதானி, “மகாராஜா! தங்களது உடல் நிலை இப்பொழுது எப்படி இருக்கிறது?” என்று பிரியத்துடன் கேட்டார்.

“நான் நன்றாக இருக்கிறேன் பிரதானியாரே. இரவில் இருந்த வலி குறைந்திருக்கிறது” என்றார். கூடவே, “நேற்று நமது வீரர்கள் துரத்திச் சென்ற விஷயம் என்ன ஆயிற்று. யாரேனும் பிடிபட்டார்களா?” என்று வினவினார்.

“வீரர்கள் இன்று காலையில் தான் திரும்பி வந்தார்கள் மகாராஜா. இருட்டில் சரியாக அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை. எந்தத் திசையில் சென்றார்கள் என்ற தகவலும் இல்லை.”

“இத்தகைய செயலைச் செய்யத் துணிந்ததன் பின்னணியில் யார் இருப்பார்கள்? நீங்கள் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் பிரதானியாரே?”

“தோல்வியுற்று ஓடும் கன்னடப் படையைச் சேர்ந்தவனாகத் தான் இருக்க வேண்டும். இதன் பின்னணியில் அந்தப் படையின் தளபதி கோழை குமரையா தான் இருந்திருப்பான். தொடர்ந்து நம்மிடம் தோல்வியையே சந்திக்கிறான் அல்லவா. இனிமேல் போரிட்டு நம்மை வெல்வது கடினம் என்று குறுக்கு வழி தேடுகிறான் போலும்” என்று கடுமையாகக் கூறினார் பிரதானி.

“நான் அவ்வாறு நினைக்கவில்லை. இந்தக் கட்டாரி நமது நாட்டு ஆயுதம் போலிருக்கிறது. இது நிச்சயமாக உள்நாட்டுப் பகை தான்” என்று அறுதியிட்டுக் கூறினார் மன்னர்.

“ஒரு வேளை போர் நடந்த போது அந்தக் கன்னட வீரன் நமது வீரனிடம் இருந்து கட்டாரியைக் கைப்பற்றி இருக்கலாம் அல்லவா?” பிரதானிக்கு சேதுபதி மன்னரைக் கொலை செய்ய உள்நாட்டிலேயே பகைவர் உண்டு என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

அவரது நிலை அறிந்த மன்னர், “ராமுத் தேவா!” என்று அழைத்தார்.
உடனே ராமுத் தேவன் வந்து கைகட்டி அவர் முன்னே நின்றான்.
“இந்தக் கட்டாரியைப் பார் இது மதுரை நாயக்கர் படையினருடையதா இல்லை மைசூர் படைவீரனுடையதா?” என்று கட்டாரியை அவனிடம் கொடுத்தார்.

அதைக் கையில் வாங்கிய உடனே அவன் இரண்டுமே இல்லை என்று சொல்லி விட்டான். “இது நமது காளையார் கோவில் சீமை வீரர்களுடையது போல் தெரிகிறது மகாராஜா. இதன் கைப்பிடி அளவு எல்லாம் அப்படித்தான் இருக்கிறது.”

“அப்படியா சொல்கிறாய். நமது உளவுப் படைத் தலைவரை அழைக்க வேண்டுமே” என்று யோசனை செய்தார் மன்னர்.

“நேற்று இரவே அவருக்குத் தகவல் அனுப்பி விட்டேன் மகாராஜா. வெகு விரைவில் அவர் இங்கு வந்துவிடுவார்” என்று பிரதானி சொல்லிக் கொண்டிருந்த போதே சேது நாட்டின் உளவுப் படைத் தலைவரும் சக்கந்தி பாளையக்காரருமான சின்னாத்தேவர் மன்னரின் உத்தரவு வேண்டி அறை வாசலில் வந்து நின்றார்.
“வாருங்கள் சக்கந்தித் தேவரே. அவசரப் பிரயாணம் மேற்கொள்ள வைத்து விட்டேன். வழியில் சங்கடங்கள் ஏதும் இல்லையே?” என்று கவலை தொனிக்கும் குரலில் கேட்டார் மன்னர்.

“எனது உளவுத் தொழிலில் இந்த அவசரம் அதிமுக்கியம் மகாராஜா. காரணம் இல்லாமல் தாங்கள் அழைத்திருக்க மாட்டீர்களே!” என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார் சக்கந்தித் தேவர்.

“சக்கந்தித் தேவரே! இந்தக் கட்டாரியைப் பாருங்கள். இது யாருடையதாக இருக்கும்?”

அதனை வாங்கிப் பார்த்த சக்கந்தித் தேவர் உடனே பதிலுரைத்தார். “மகாராஜா, இது நமது அஞ்சு கோட்டை பிரிவினரைச் சேர்ந்தது.”

“நிச்சயமாகத் தெரியுமா? சரியாகப் பார்த்துச் சொல்லுங்கள்” என்று இடையிட்டார் பிரதானி.

“நிச்சயமாக இது நமது அஞ்சு கோட்டை வீரனுடையது தான்.”

“சரி, இதனைப் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நான் ராமநாதபுரம் கோட்டைக்கு வந்தவுடன் என்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார் மன்னர்.

மன்னரது யூகத்தைக் கண்டு வியந்தார் பிரதானி. ‘அந்தக் கட்டாரியை வீசியவன் மறவர் சீமையைச் சேர்ந்தவனா? யாராக இருக்கும்? குறி தப்பியதால் தானே இப்போது உயிரோடு இருக்கிறோம். சரியான குறி அமையும் வரை முயற்சி செய்வார்கள் அல்லவா? உள்நாட்டிலேயே இப்படி ஒரு ஆபத்தா?” என்று சிந்தனையில் ஆழ்ந்தார் மன்னர்.

“நாம் எப்பொழுது புறப்படலாம்?” என்ற மன்னருக்கு காலைக் கடனை முடித்தவுடன் கிளம்பி விடலாம் என்று பதிலளித்தார் பிரதானி.அப்போது வைத்தியர் வீரபாண்டியன் அங்கே வந்தார்.

“மகாராஜா! வணக்கம்!”

“வணக்கம்! வாருங்கள்”

“இரவில் நன்றாக உறங்கினீர்களா? இப்போது வலி இருக்கிறதா?”

“நன்றாகவே தூங்கினேன் வீரபாண்டிய ரே. கண்விழித்த பிறகு தான் காயத்தைப் பற்றிய நினைவே வந்தது. வலியும் வெகுவாகக் குறைந்து விட்டது.”

“மருந்து நன்றாக வேலை செய்கிறது. இதோ இந்த சூரணத்தை மூன்று நாட்களுக்கு சாப்பிடுங்கள். காயங்கள் ஆற இது உதவும்.”

“ராமுத் தேவா!” என்று மன்னர் அழைக்க அவன் ஒரு தட்டில் பொற்கிழியுடன் வந்தான்.

“அதை வீரபாண்டியரிடம் கொடு”

“இதெல்லாம் எதற்கு மகாராஜா. ஏற்கனவே என் மகளுக்கு ஏராளமாகக் கொடுத்திருக்கிறீர்களே. என்றென்றும் தங்கள் ஆதரவு இருந்தால் போதுமானது” என்று மறுத்தார் வீரபாண்டியன்.

“தக்க சமயத்தில் உதவி செய்தீர்கள். அதற்கு எத்தனை கொடுத்தாலும் ஈடாகாது. மறுக்காது வாங்கிக் கொள்ளுங்கள்” என்ற மகாராஜாவின் வார்த்தைகளை மறுக்கத் தோன்றாமல் பொற்கிழியைப் பெற்றுக் கொண்டார் வீரபாண்டியன்.

“இப்பொழுது புறப்படுகிறேன். நாம் விரைவில் மீண்டும் சந்திக்கலாம்” என்று அவரை வழியனுப்பி வைத்தார் சேதுபதி மன்னர்.

அதன் பிறகு அவரது மாற்று உடைகளையும் அணிமணிகளையும் மன்னர் முன் கொண்டு வந்து வைத்தான் ராமுத்
தேவன்.

“சிற்றுண்டி தயாராகிவிட்டதா?”

“ஆம் மகாராஜா”

“பிரதானியாரே வாருங்கள் செல்லலாம்” என்று சாப்பிடச் சென்றார்.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 9
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom