• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அத்தியாயம் -2

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
366
அத்தியாயம் -2

மறவர் சீமையில் சிறிது காலமாகவே பதற்றம் நிலவியதை மன்னர் அறிந்து தான் இருந்தார். தம்பித்தேவரது முயற்சிகளையும் நாட்டில் போர் மேகங்கள் சூழ இருப்பதையும் உணர்ந்து கொண்டு மனம் வருந்தினார்.

அன்று காலை உணவுக்காக இருக்கையில் அமர்ந்த மன்னருக்குக் காவலாளி மூலமாக அவசரத் தகவல் ஒன்று வந்து சேர்ந்தது. ஒற்றர் படைத் தலைவர் மதுரையில் இருந்து செய்தி ஒன்றை கொண்டு வந்திருந்தார். அவருடன் முக்கியப் பிரதானியும் கோட்டைத் தளபதியும் மன்னரைக் காணக் காத்திருந்தனர்.

உணவை முடித்துக் கொண்டு மன்னர் வந்த போது அங்கிருந்த மூவரின் முகத்திலும் கவலை மண்டிக் கிடந்ததை உணர முடிந்தது.

“என்ன விஷயம் பிரதானியாரே? முக்கியச் செய்தி இல்லாமல் மூவரும் ஒருங்கே வர வாய்ப்பில்லையே?” என்று கேட்டுக் கொண்டே அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தார், மற்றவரையும் அமருமாறு சைகை காட்டினார்.

“முக்கியச் செய்தி தான் சேதுபதியாரே! மதுரையில் இருந்து நமது ஒற்றர் அவசரச் செய்தியோடு வந்திருக்கிறான். அதை உறுதிப்படுத்தும் விதமாக நாயக்க மன்னரின் ஓலையும் வந்திருக்கிறது” என்று ஓலையை மன்னரிடம் நீட்டினார் பிரதானி.

வாங்கிப் படித்து மன்னரின் முகத்தில் யோசனை முடிச்சுகள் தோன்றின. மறவர் சீமையில் இருந்து மதுரைப் பேரரசுக்குக் கட்டவேண்டிய கப்பத்தில் பாக்கி இருப்பதாகவும் அதனை உடனடியாக கட்டவேண்டும் என்றும் சொன்னதும் அல்லாமல் சேது நாட்டின் வாரிசுரிமையில் தம்பித் தேவனுக்கு இடம் அளிக்க வேண்டும் என்றும் அந்த ஓலை சொன்னது.

“இதென்ன மறவர் சீமைக்கு நாயக்கர் விடுக்கும் மறைமுக மிரட்டலா?” என்று கொதித்தாலும் சடைக்கன் சேதுபதி போரை விரும்பவில்லை. ஓலைக்குப் பதில் சொல்லும் விதமாக தனது தளபதி வன்னியர் தேவனைத் தூதராக மதுரைக்கு அனுப்பி வைத்தார்.

தூதனாக வந்த வன்னியத்தேவனுக்கு முறையான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருமலை நாயக்கரிடம் சேதுபதியின் செய்தியைத் தாமே எடுத்துரைத்தான் அவன்.

“நாயக்கரே! தாங்கள் அறியாதது அல்ல, மறவர் சீமையில் கார்கால மழையை நம்பித் தான் மக்களது வாழ்வே உள்ளது. சாதாரணமாகவே மழை குறைவாகவே இருக்கும் சேது நாட்டில் கடந்த மூன்று வருடங்களாக மழையே இல்லை எனலாம். குடிமக்கள் அரைவயிறும் கால்வயிறுமாகக் கஞ்சி குடிக்க கூட வழியில்லாமல் சிரமப்படுகிறார்கள். இந்நிலையில், தமது மக்களுக்கு உதவ வேண்டிய நிலையில் உள்ள பேரரசு பாக்கி கப்பத்தைச் செலுத்தும் படி சொல்வது வருத்தம் அளிக்கிறது” என்ற வன்னியத்தேவன் திருமலை நாயக்கரின் முகம் பார்த்தான். அவரோ பதிலேதும் கூறாமல் மேலே சொல்லும் என்பது போல செய்கை செய்தார்.

“மற்ற விஷயம், வாரிசுரிமை பற்றியது. இதுவும் தாங்கள் அறிவீர்கள். சேது நாடு மட்டும் அல்லாமல் வேறெங்குமே முறையின்றிப் பிறந்த மக்களுக்கு வாரிசுரிமை வழங்குவதில்லை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். மேலும் எந்த நாட்டிலும் தாயாதிச் சண்டையில் தலையிட மாட்டோம் என்று உறுதி செய்து கொடுத்த பிறகு இது போலக் கட்டளையிடுவது தங்கள் வாக்குறுதியை மீறுவது போலாகும்.”

தனது தரப்பைத் தெளிவாக விளக்கிய வன்னியத் தேவனுக்கு திருமலை நாயக்கர் அதில் சமாதானம் ஆனது போலத் தான் தெரிந்தது. ஆனால் உடனிருந்த தளபதி இராமப்பையனின் முகம் தான் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது போலத் தோற்றம் அளித்தது. தூதனது கடமை முடிந்தது என்று போகலூருக்குத் திரும்பி விட்டார் வன்னியத்தேவன்.

திருமலை நாயக்கர் போரை விரும்பவில்லை என்றாலும் இராமப்பையன் தனது வார்த்தை ஜாலத்தால் அவரது சம்மதத்தைப் பெற்று விட்டான்.

மன்னரது அனுமதி கிடைத்தவுடன் 72 பாளையக்காரர்களுக்கும் படையை அனுப்புமாறு செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. முன்னரே ஏற்படுத்தப்பட்ட இந்த நிபந்தனையின் பேரில் பாளையக்காரர்கள் அனைவரும் தங்கள் படைகளை அனுப்பி வைத்தனர்.

மதுரைப் படையுடன் 72 பாளையக்காரர்கள் படையையும் அழைத்துக் கொண்டு சேது நாட்டை நோக்கி போருக்குப் புறப்பட்டான் இராமப்பையன். தன் படையுடன் மானாமதுரையில் முகாமிட்டு அக்கால வழக்கப்படி தனது படைபலத்தை சேதுபதி அறிய வேண்டி ஓர் ஓலை அனுப்பி வைத்தான்.

“மறவர் சீமையின் சேதுபதிக்கு தளவாய் இராமப்பையனின் ஆணை இது. உடனடியாக சேது நாட்டினை இரண்டாகப் பிரித்து தம்பித் தேவனுக்கு ஒரு பகுதியை அளிக்க வேண்டும். அதற்கு இசையாவிடில் போர் மூளும். மதுரைப் பேரரசைப் போரில் வெல்லும் திறமை இருந்தால் தயாராக இருக்கவும்.” ஓலை சொன்ன செய்தி அறிந்த சடைக்கன் சேதுபதியின் கண்கள் கோபத்தால் சிவந்தன.

ஆனாலும் நிதானம் தவறவில்லை. இராமப்பையனிடம் நியாயத்தை எடுத்துக் கூறி போர் மூளாது தடுக்க என்ன வழி என்று யோசனை செய்தார். பின்னர் மதுரை தூதரை தன்னுடன் இருக்கச் செய்து, போகலூர் கோட்டைக் காவலனான குமாரன் அழகனை தூதனாக அனுப்பினார்.

அவனது பேச்சையும் இராமப்பையன் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, “சடைக்கன் குடும்பத்தையே பூண்டோடு அழிக்கிறேன். தைரியம் இருந்தால் போரில் நேருக்கு நேர் மோதச் சொல். கோழை போல தூது அனுப்புவது வீரனுக்கு அழகல்ல. இது தான் உங்கள் மறவர் குலத்திற்கு நீங்கள் தேடிய பெருமையா?” என்று மிகவும் குரூரமாக பதிலுரைத்தான்.

இதனைக் கேட்ட குமாரன் அழகனோ அவனை விரைவிலேயே மறவர் சீமையில் இருந்து ஓட ஓட விரட்டுவதாகச் பதிலுக்கு சூளுரைத்துத் திரும்பினான்.

வேறு வழியின்றி சடைக்கன் சேதுபதி போருக்குத் தயாரானார். வன்னியத்தேவன் தலைமையில் அருகில் இருந்த சில மறவர் நாடுகளுடைய உதவி பெற்றுப் படை அமைக்கப் பட்டது. தளபதி வகுத்த போர் திட்டத்தின் படி கோட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையுடன் செய்யப்பட்டன.

போர் ஆரம்பமானது. முதல் நாள் போர் அரியாணிபுரக் கோட்டையில் நடைபெற்றது. மிகவும் கொடூரமாக நடந்த இப்போரில் இருதரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டாலும் மதுரைப் படைக்குப் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. மறவர் படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மதுரைப் படை பின்வாங்கியது. மறவர் படை பெரும் வெற்றி பெற்றது.

அன்று அடைந்த தோல்விக்கு வருந்திய தளவாய் இராமப்பையன் தனது வீரர்களை ஊக்குவித்துத் தன் மறுநாளைய திட்டத்தை விவரித்தான்.

வன்னியத்தேவனும் தனது வியூகத்தை மாற்றி அமைத்தான். நாலா பக்கத்தில் இருந்தும் அம்புகளும் வேலும் சீறிப்பாய்ந்து மதுரைப் படையை நாசமாக்கியது. மறவர் படை நான்கு புறமும் மதுரைப் படையைச் சூழ்ந்து கொண்டு தாக்கியது.

போர்க்களத்தில் எங்கும் ஒரே பிணக்குவியலாக காணப்பட்டது. ரத்த ஆறு ஓடியது. மூன்றாவது நாளும் மதுரைப் படைக்குத் தோல்வியே மிஞ்சியது.

இந்தத் தோல்வி இராமப்பையனை உலுக்கியது. மறுநாள் போகலூர் கோட்டையைத் தாக்குவது என்று முடிவு செய்து விட்டான். இதை அறிந்த வன்னியத்தேவன் உடனே தனது படைகளுடன் போகலூர் கோட்டைக்குச் சென்று விட்டான்.

இராமப்பைய்யனின் பெரும்படை போகலூர்க் கோட்டையைப் பலமாகத் தாக்கியது. மதுரையின் பெரும் படையைக்கண்டு திகைத்தாலும் வன்னியத்தேவன் அளித்த உற்சாகத்தால் மறவர் படை ஆக்ரோஷத்துடன் போராடியது.

மதுரைப் படையின் சில பாளையக்காரர்களும் படைத்தலைவர்களும் வன்னியத்தேவனால் வெட்டி வீழ்த்தப் பட்டனர். இதை அறிந்த மதுரைப் படை நிலை குலைந்து போனது. வீரர்கள் நாலா பக்கமும் சிதறி ஓட ஆரம்பித்தனர். அன்றைய போரில் மதுரைப் படை கடும் தோல்வியைச் சந்தித்தது.
போரில் வென்றாலும் தொடர்ந்து போர் நடப்பதால் மறவர் சீமையில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. கூடவே பெருத்த பொருட்சேதமும் ஏற்பட்டதால் உணவுத்தட்டுப்பாடும் ஏற்பட்டது.

இதைப் பற்றிக் கவலைப் படாமல் மறவர்கள் போர் புரிந்து கொண்டிருந்தனர். ஆனால் ஒரு தலைவனாக வன்னியத்தேவனுக்கு மக்களின் நிலையை மன்னரிடம் தெரிவிக்க வேண்டிய கடமை இருந்தது. எனவே அவன் இராமேஸ்வரத்தில் தங்கி இருந்த சேதுபதி மன்னரைக் காணச் சென்றான்.

இதனை அறிந்த இராமப்பையன் நேரடியாக களம் புகுதலைத் தவிர்த்துக் தந்திரத்தைக் கையாண்டு தான் மறவர் படையை வெல்ல முடியும் என்ற முடிவுக்கு வந்தான். திடீரென அரியாணிபுரக் கோட்டையைத் தாக்கி அக்கோட்டையைக் கைப்பற்றினான்.

அடுத்ததாக சடைக்கன் சேதுபதி இராமேஸ்வரத்தில் இருந்து வந்துவிட்டார் என்றும் வேறோர் கோட்டையில் இருப்பதாகவும் ஒற்றன் செய்தி கொணர்ந்தான். கூடவே படைத்தலைவன் மன்னருடன் இல்லை என்ற செய்தி இராமப்பையனை உற்சாகப்படுத்தியது. எப்படியாகிலும் இன்று சடைக்கன் சேதுபதியைச் சிறைப்படுத்தி விடவேண்டும் என்று ஆவலாக இருந்தான்.

சேதுபதியும் தன்னிடம் இருந்த சிறு படையுடன் போருக்குச் சென்றார். இராமேஸ்வரத்தில் தங்கி இருந்த வன்னியத் தேவனுக்குச் சொல்லி அனுப்பவில்லை. வழக்கமாக எந்த மன்னரும் முதலில் நேரடியாக போருக்கு வருவதில்லை என்ற பாரம்பரியத்தை சடைக்கன் சேதுபதி உடைத்து விட்டார். அதனாலேயே அவர் தளவாய் சேதுபதி என்றும் அழைக்கப் பட்டார் போலும்.

கடுமையான போர் நிகழ்ந்தது. அந்தச் சமயத்தில் இராமப்பையன் தந்திரத்தைப் பயன்படுத்தி சேதுபதியைப் பிடிக்க முயற்சி செய்தான். உடன் வந்த பாளையக்காரருக்குச் சைகை செய்ய அவன் சேதுபதியின் பின்புறமாகச் சென்று தாக்கினான். இந்த சமயத்தில் இராமப்பையன் தந்திரமாகச் செயல்பட்டு சடைக்கன் சேதுபதியை முதுகில் வாளால் குத்திக் காயப்படுத்தினான். இதனை அறிந்த வன்னியத்தேவன் விரைந்து தன் படையுடன் வந்து மதுரைப் படையை எதிர்த்து நின்றான். எவ்வளவோ முயன்றும் மறவர் படையை மதுரைப் படையால் வீழ்த்தவே முடியவில்லை. மேலும் மதுரைப் படையில் பெருத்த உயிர்ச் சேதமும் ஏற்பட்டிருந்தது.

இது போன்ற விஷயங்கள் திருமலை நாயக்கரை வந்து சேர்ந்த போது அவர் எப்படி இராமப்பையனை திருப்பி அழைப்பது என்ற யோசனைக்குச் சென்றார்.

அவரது எண்ணத்தைச் செயல்படுத்த விஜயநகரப் பேரரசின் மூலமாக ஒரு வாய்ப்பு வந்து சேர்ந்தது. அங்கே வாரிசுரிமைப் போர் ஏற்பட்டு சமீபத்தில் தான் அமைதி ஏற்பட்டிருந்தது. மறுபடியும் விஜயநகர சாம்ராஜ்யத்தின் மன்னருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அவரது சகோதரன் முகம்மதியருடன் இணைந்து கொண்டு தாக்க முயன்றான்.

இது விஷயத்தில் விஜயநகரப் பேரரசர் திருமலை நாயக்கரின் உதவி வேண்டி ஓலை அனுப்பி வைத்தார். இதையே காரணமாக வைத்து இராமப்பையனை சேது நாட்டில் இருந்து அகற்றிவிட எண்ணிய திருமலை நாயக்கர் தனது தளபதிக்கு ஓலை அனுப்பினார்.

வேறு வழியின்றி இராமப்பையன் தன் படையுடன் வடக்கு நோக்கிப் பயணம் மேற்கொண்டான். ஆனால் சேது நாட்டின் மீது அவனுக்கு இருந்த வன்மம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றதே அன்றிக் குறையவே இல்லை.

விஜயநகர வெற்றிக்குப் பிறகு திரும்பி வந்த பிறகும் சேது நாட்டின் மீது படையெடுத்துச் செல்லவே விரும்பினான். திருப்புவனமும் அரியாணிக்கோட்டையும் அவன் வசமாகி இருக்க அங்கே சென்று தங்கினான்.

அப்போது போகலூர் கோட்டைத் தலைவனாக அழகன் குமாரன் இருந்தான். முன்பொரு நாள் அவன் செய்த சூளுரையை நினைவு படுத்திக் கொண்ட இராமப்பையன். உடனே போகலூர் கோட்டையைத் தாக்க உத்தரவிட்டான்.

மிகவும் சிறு படையுடன் கோட்டையில் இருந்த குமாரன் அழகனால் மதுரைப் படையை எதிர்த்துப் போரிட முடியவில்லை.

வெற்றி முழக்கத்துடன் கர்ஜித்த இராமப்பையன் அழகனையும் அவர் மகனையும் சிறைப்பிடித்தான். கூடவே அவர்கள் மனைவியர் உட்பட பல நூறு பெண்களையும் சிறைப்படுத்தினான்.

பெண்களைத் தனியாக ஒரு மாளிகையில் சிறை வைத்துப் பின்னர் அழகனையும் அவர் மகனையும் அழைத்து வரச் செய்தான்.

“என்ன அழகனே? இராமப்பையனிடம் சூளுரைத்தால் என்ன நடக்கும் என்று அறிந்து கொண்டீர் அல்லவா? உமது மன்னருக்கும் ஒரு நாள் இதே கதி தான் ஏற்படப் போகிறது” என்று கொக்கரித்தான்.

மறவர் குலத்தில் பிறந்த அழகனும் அவன் மகனும் அஞ்சாது நின்றனர். ஆனால் இராமப்பையன் செய்த கொடுமையில் துவண்டு இருவரும் மாண்டே போனார்கள்.

“யாரங்கே? இவர்களின் கைகள் இரண்டையும் பிணைத்து விடுங்கள். சாத்தனை அழைத்து வாருங்கள்” என்று உத்தரவு பிறப்பித்தான்.

கையில் கசையோடு கொலைபாதகத்துக்கு அஞ்சாத சாத்தனும் அவனது கை ஓய்ந்து போகும் வரை இருவரையும் அடித்துத் துவைத்தான்.

அவர்கள் மரணித்த பின்பும் இராமப்பையனின் கோபம் அடங்கவில்லை. அவர்களது உடலைத் துண்டு துண்டாக வெட்டி கூடைகளில் அள்ளி வைக்கப் பணித்தான். அவர்களது மனைவியரை அழைத்து அந்தக் கூடைகளைச் சுமந்து நகர வீதிகளில் உலா வரச் செய்தான்.

இக்கொடுமையைத் தாங்காத அந்த மறவர் குல மங்கையரும் உயிரை நீத்தனர்.
அடுத்த இலக்காக விரைவில் சடைக்கன் சேதுபதியைச் சிறைப்பிடிக்க முடிவு செய்தான் இராமப்பையன்.

அந்த சமயத்தில் சடைக்கன் சேதுபதி போரில் ஏற்பட்ட காயம் ஆறாத காரணத்தால் இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவரது பாதுகாப்பு கருதி படைத்தளபதி வன்னியத் தேவனும் அவருடன் இருந்தான்.

ஒற்றன் மூலமாக இந்த விவரங்களை அறிந்து கொண்ட இராமப்பையன் இராமேஸ்வரம் நோக்கிப் படையெடுத்தான். இடைப்பட்ட பாம்பனை அவனால் கடக்க முடியவில்லை. அதனால் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் இறங்கி விட்டான்.

இதனை அறிந்த சேதுபதியும் வன்னியத்தேவரும் படையுடன் பாம்பன் கரைக்கு இன்றைய தங்கச்சி மடம் என்ற பகுதிக்கு வர அங்கே போர் மூண்டது.. மறுபடியும் மறவர் படை தான் வெற்றி பெற்றது. இதனால் தனது லட்சியம் நிறைவேற என்ன செய்வது என்று தீவிரமாக ஆராயத் தொடங்கினான் இராமப்பையன். அவரிடம் ஒரு பாளையக்காரர் வந்து பேசினார்.

“தளவாய் அவர்களே! தாங்கள் அனுமதி அளித்தால் நான் ஒரு ஆலோசனை சொல்கிறேன். அது நிச்சயமாக நமக்கு வெற்றியைத் தேடித் தரும்.”

“நம்முடைய ராஜதந்திரங்கள் எதுவும் சேதுபதியின் முன் வீணாகி விட்டன. நீங்கள் என்ன புதிதாகச் சொல்லிவிடப் போகிறீர்கள்?”

“நம் வசம் இருப்பதை விட பலம் வாய்ந்த ஆயுதம் இருப்பவரின் உதவி நமக்குக் கிட்டினால் வெற்றி நமக்குத் தானே கிட்டும்.”

“யார் அவர்கள்? அப்படி என்ன ஆயுதம் வைத்திருக்கிறார்கள்?”

“போர்த்துக்கீசியர்கள் தளபதியாரே! ஈழத் தீவு, கச்சத்தீவு போன்ற நாடுகள் இப்போது அவர்கள் பிடியில் தான் இருக்கின்றன. துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதங்கள் பலவற்றை வைத்திருக்கிறார்கள். பல போர்க்கப்பல்கள் கூட அவர்கள் வசம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.”

“அதற்காக, நாம் கேட்டவுடன் உதவிக்கு வந்து விடுவார்களா?”

“ அது விஷயத்தில் நமக்கு சாதகமான பதில் நிச்சயமாகக் கிடைக்கும் தளபதியாரே. இங்கே தென் கடல் பகுதி முழுவதும் மறவர் ஆதிக்கத்தில் உள்ளது. முத்துச் சலாபம் செய்வதற்கு அவர்களின் அனுமதி தேவை. போர்த்துக்கீசியர் விஷயத்தில் சேதுபதி மன்னர் அனுமதி மறுத்து விட்டார் என்று கேள்வி. அதனால் நமக்கு நிச்சயமாக உதவி கிடைக்கும்.”

“அதாவது எதிரிக்கு எதிரி நண்பன் என்கிறீர். சரிதானா?” என்று சிரித்துக் கொண்டே வினவினான் இராமப்பையன்.

“ஆம் தளபதியாரே” என்று தானும் உடன் சிரித்தான் அந்த பாளையக்காரன்.

அதன் படியே போர்த்துக்கீசியரின் உதவி பெற்று கடல் போர் மூண்டது. ஆனால் வன்னியத் தேவன் கடற்போரிலும் சிறந்தவனாக இருந்தான்.‌ தங்களிடம் இருந்த போர்ப் படகுகளுடன் தாக்குதலைச் சமாளித்தான். இராமப்பையனுக்கோ கடலில் போர் புரிந்து பழக்கம் இல்லை. தொடர்ந்து இரண்டு நாட்கள் வன்னியத்தேவனே வென்றான்.

ஆனால் மூன்றாவது நாள் போரின் முடிவில் வன்னியத் தேவனுக்கு கடுமையான காய்ச்சல் கண்டது. தெய்வ பக்தி மிகுந்த சடைக்கன் சேதுபதி இதைக் கண்டு மிகவும் வருந்தினார். சகல ஆலயங்களிலும் வன்னியத்தேவன் நலம் பெற வேண்டி அபிஷேகம் நடைபெற்றது. ஆனாலும் வன்னியத் தேவனின் காய்ச்சல் குறையவில்லை. வைசூரி கண்டது.‌ போர் மேகங்கள் சூழ்ந்த நேரத்தில் இப்படி ஒரு சோதனையா என்று மன்னர் கலங்கினார்.
இதன் காரணமாக போரை நிறுத்தவும் வழியில்லை. எதிரிகள் வஞ்சகம் மிகுந்தவர்கள். என்ன செய்வது என்று யோசிக்க வழியின்றி இராமப்பைய்யன் தனது படைகளுடன் வரும் செய்தி அங்கே வந்து சேர்ந்தது.

தனது உடல் நிலையைச் சற்றேனும் பொருட்படுத்தாமல் வன்னியத் தேவன் கொதித்து எழுந்தான். சேதுபதி மன்னர் எத்தனையோ தடுத்தும் கேளாமல் தனது படையுடன் போருக்குப் புறப்பட்டான். அன்றைய போரில் ஆக்ரோஷமாகப் போரிட்டு பலரை வீழ்த்தி வெற்றி கொண்டான்.

அன்றைய இரவு வன்னியத் தேவனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. மன்னரைச் சந்தித்து சில விஷயங்களைப் பேசிய வன்னியத் தேவனது ஆவி அப்போதே பிரிந்தது. அவன் மனைவியும் சடைக்கன் சேதுபதியின் சகோதரியுமான கண்காணும் நாச்சியார் கணவனுக்குப் பின்னர் உயிர் வாழ விரும்பாமல் அவனது ஈமத் தீயில் விழுந்து உயிர் துறந்தாள். மறவர் சீமையில் பெண்களின் விருப்பப்படி கணவனின் ஈமத் தீயில் உயிர் துறக்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.

வன்னியத்தேவன் என்றாலே நாயக்கர் படையினர்க்கு நடுக்கம் ஏற்படும். இராமப்பய்யனுடன் நடந்த மூன்று போர்களிலும் அவனே வெற்றி பெற்றான். இராமேஸ்வரம் தீவில் நடந்த ஆறு மோதல்களிலும் மறவர் படையும் நாயக்கர் படையும் வியப்புறச் சண்டை செய்தான், மறவர்படை சோர்வுற்றபொழுதும் பலம் குன்றிய போதும் ‘புலியை நரிபாய்ந்து போகும்மா’ என்று தனக்கே உரித்தான போர்க் குரலை எழுப்பி வலுவூட்டியவன்.

வைசூரி நோயால் வாடிய நிலையிலும் கடைசி முறையாக ‘ஆனைத் திரளில் ஆளி சிங்கம் புகுந்தாப் போல்’ எதிரிகளைக் கலக்கியவன் அவன். படைத் தலைவனாகிய தன்னுடைய சாவுக்குப் பிறகு எதிரியைச் சேதுபதியால் சமாளிக்க முடியாது என்று எடுத்துக்கூறினான். அவரைச் சரணடையக் கூறி போருக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொன்னான் வன்னியத் தேவன். போர் வேண்டாமென்று உரைத்தது அவனது அரசு உத்தியையும், வீணாகப் போர் வீரர்களை உயிர் இழக்காமல் காப்பாற்றியதையும் தெரிவிக்கும். ஒரு படைத் தலைவனுக்குரிய அனைத்துச் சிறப்புகளையும் கொண்டவனாகத் திகழ்ந்தவன் வன்னியத்தேவன்.

அத்தனை சிறப்பு மிக்கவனது இழப்பு மனதை வாட்டினாலும் அவனது சொல்படி நடக்க முடிவு செய்தார் சடைக்கன் சேதுபதி. பரிசுப் பொருட்களுடன் இராமப்பையனைச் சென்று சந்தித்த சடைக்கன் சேதுபதியை அவன் சிறைப்படுத்தி மதுரைக்கு அழைத்துச் சென்றான்.

சேதுபதியை எதுவும் செய்யத் தயங்கிய திருமலை நாயக்கரை வலியுறுத்தி, சடைக்கன் சேதுபதியை சிறையில் அடைத்தான். வாரிசுரிமை கோரிய தம்பித் தேவரை சேதுபதியாக்கினான் இராமப்பய்யன்.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -2
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
77
Wow. சோழர்களுக்கு ஒரு வந்தியத்தேவன் போல, மறவர்களுக்கு வன்னியத்தேவன்.
 
Top Bottom