• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அத்தியாயம் -3

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
366
அத்தியாயம் - 3


சடைக்கன் சேதுபதி தனது சகோதரியின் இளைய குமாரன் ரகுநாதனைத் தனது வாரிசு என்று அறிவித்து விட்டாலும் பாலகனாக இருந்தவனைத் தாயிடம் இருந்து பிரிக்கவில்லை.
இளைஞனாகிவிட்ட போதும் தந்தையும் (வன்னியத் தேவன்) அம்மானும் (சடைக்கன் சேதுபதி) போர்க்களத்தில் இருந்த போது ரகுநாதன் கலைகளில் ஆர்வம் காட்டிக் கொண்டு அவற்றைக் கற்றுக் கொண்டிருந்தான்.

வீரம் செறிந்த மறக்குலத்தில் பிறந்தவனுக்கு இயல்பிலேயே ஒரு கம்பீரம் வந்துவிட்டிருந்தது. தனது பாட்டனாருடன் ஒரு முறை நயினார் கோவில் திருவிழாவிற்குச் சென்றிருந்தான். அன்று சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி இருந்தனர்.

இரவு வேளையில் சுவாமி நகர்வலம் செல்ல ஆரம்பித்தார். அவருக்கு முன்பு நாதசுவரக் கோஷ்டியும் நடனக் கலைஞர்களும் தங்களுடைய திறமையைக் காட்டியபடி போய்க்கொண்டு இருந்தனர். இவற்றை எல்லாம் ரகுநாதன் ஆர்வத்துடன் கண்டு களித்தான்.

நடனமாடிய பெண்களையே கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு அவர்களின் அணிமணிகள், அவர்கள் அபிநயங்களோடு காட்டிய பாவனைகள், நட்டுவனாரின் இசை, பாடலின் பொருள் என்று அனைத்தும் மிகவும் பிடித்துப் போயின. திருவிழா முடிந்ததும் அந்த நடனக் குழுவினரைச் சந்தித்து நடனம் பற்றிய விவரங்களைக் கேட்டு அறிந்தவனுக்கு அதனைக் கற்றுத் தேர வேண்டும் என்ற ஆர்வம் ஊற்றாய் பெருகியது.

அவனது பின்னணி அறிந்த அந்தக் கலைஞர்கள் நடனக் கலை பற்றிய நெளிவு சுழிவுகளை எல்லாம் தெளிவாக எடுத்து உரைத்தனர்.

அவர்களது பேச்சை மிகுந்த ஆர்வத்துடன் கேட்ட இளைஞனுக்கு பரதத்தை முறைப்படி முழுமையாகக் கற்றுத் தேற வேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது.

உடனே பாட்டனாரிடம் வந்து நின்றான். “என்ன விஷயம் ரகுநாதா? எதற்காக இத்தனை பரபரப்பாக இருக்கிறாய்?” என்று வினவினார் பெரியவர்.

“பாட்டனாரே! எனக்கு ஒரு விஷயத்தில் உங்கள் ஒப்புதல் தேவை. அதற்காகத் தான் இந்தப் பரபரப்பு” என்று பீடிகை போட்டான் பேரன்.

“நாட்டை ஆளப் போகும் சேதுபதி எனது ஒப்புதலுக்குக் காத்திருக்கிறாரா?” என்று கேலி செய்தார் பாட்டனார்.

“பாட்டனாரே! இது கேலி செய்யும் விஷயம் அல்ல. நான் தற்போது சேதுபதியும் அல்ல. தங்கள் பெயரன் ரகுநாதன், அதாவது தங்கள் பெயர் சொல்லவே பிறந்தவன். எனக்குக் கட்டளை இடுவதற்கு தங்களுத்தான் முதல் உரிமை இருக்கிறது, தெரிந்து கொள்ளுங்கள்” என்ற பேரனது பேச்சு பாட்டனாரைக் கட்டிப் போட்டது. இவன் மறவர் சீமையை ஆளத் தகுதியானவன் தான் என்று நினைத்துக் கொண்டார்.

“ம்.. இப்படிப்பட்ட பேரன் கேட்டு மறுப்பதாவது.. என்ன கேட்கப் போகிறாயோ கேள்” என்று சிவபெருமான் போல வாக்குறுதி அளித்த பாட்டனார் பேரன் அடுத்து சொன்ன விஷயத்தில் ஆடிப் போனார். ஆனால் அவரது பதற்றம் எதிரே நின்ற இளைஞனை எதுவும் செய்துவிடவில்லை. அவன் எடுத்த காரியத்தை முடிப்பதில் தெளிவாக இருந்தான்.

“நான் பரதத்தைக் கற்றுத் தேற ஆர்வமாக இருக்கிறேன் பாட்டனாரே. இந்த நடனக் குழுவினருடன் தஞ்சை சென்று முறையாக நடனம் பயில எனக்கு அனுமதி வேண்டும்.”

நாட்டை ஆள வேண்டியவனின் கலை ஆர்வத்தைக் கண்ட பெரியவர் சிரித்தார். “நாடாள வேண்டியவன் நாட்டியம் ஆடினால் உலகம் என்ன பேசும். ஆண்கள் நடனம் பயில்வது என்பது அரிதான காரியமாயிற்றே” என்று காரணங்களை அடுக்கியும் ரகுநாதன் உறுதியாக நின்றான்.

“எதற்கும் உன் பெற்றோரிடம் ஒப்புதல் கேட்டுக் கொள்” என்று கடைசியில் பேரனின் ஆசைக்குச் சம்மதித்தார் பாட்டனார்.

ஆனால் அந்த இளைஞனை பரதம் தன் பால் கட்டி இழுத்தது. தந்தை நாட்டைக் காக்கும் பணியில் இருக்கிறார். தாயிடம் இதுபற்றி பேசினால் பலன் இருக்காது என்று அவனுக்குத் தெரியும். அதனால் தானே சொந்தமாக முடிவெடுத்து விட்டான். விழா முடிந்ததும் சொந்த ஊருக்குச் செல்லாமல் தஞ்சைக்குச் சென்றான்.

நயினார் கோவிலில் கண்ட நடனக் குழுவின் வீட்டிற்குச் சென்று அவர்களுடன் தங்கி இருந்த போது தான் அவர்களுக்கு நடனம் பயிற்றுவித்த ஆசான் திருப்பதியில் இருக்கிறார் என்று தெரிய வந்தது.

“நட்டுவனாரே! தங்கள் ஆசானுக்கு ஒரு ஓலை எழுதித் தர இயலுமா? நான் அவரிடமே சென்று பரதம் பயில விரும்புகிறேன்” என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டான்.

“அதற்கென்ன ரகுநாதரே! நாம் கட்டாயம் ஓலை தருகிறோம். எங்கள் ஆசான் திருப்பதியில் இருக்கிறார். அவர் பெயர் நாராயண மூர்த்தி. இந்தாருங்கள் ஓலை. தங்கள் ஆவல் நிறைவேற எங்களது பரிபூரண ஆசிகள்” என்று வாழ்த்தி அந்த நட்டுவனார் விடை கொடுத்தார்.

ஓலையைப் பெற்றுக் கொண்ட ரகுநாதன், திருப்பதி செல்லும் யாத்திரிகர்களோடு சேர்ந்து அங்கு போய்ச் சேர்ந்தான்.

ஏழு மலைகளுக்கிடையே எழிலே உருவாக இருந்தது திருவேங்கடமலை. அதற்கு மெருகூட்டுதைப் போல திருவேங்கடமுடையானின் திருக்கோவில் கிருஷ்ணதேவராயரால் நிர்மாணிக்கப்பட்ட பொன் வேய்ந்த கோபுரம். அந்த அமைதியான அழகான சூழலில் கோவிலின் தென்புறம் இருந்த இராமனுஜ கூடத்தில் அமைந்திருந்தது ஆசான் நாராயண மூர்த்தியின் நடனப் பள்ளி.

ரகுநாதன் அவரைக் கண்டு தஞ்சாவூரில் பெற்ற ஓலையை அளித்த போது தன் முன்னே நிற்கும் இளைஞனை ஆச்சரியம் ததும்பும் விழிகளால் பார்வையிட்டார் அவர். அன்றைய சூழ்நிலையில் ஆண்கள் முறையாக பரதம் பயில்வது கிடையாது என்பதே அந்த ஆச்சர்யத்தின் காரணம். ஆனாலும், ரகுநாதனின் ஆர்வமும் அவனது உடற்கட்டும் ஆசானைத் திருப்திப் பட வைத்தன. அவனுக்கு முறையாக நடனத்தைப் பயிற்றுவிக்கத் தொடங்கினார்.

இயல்பிலேயே இறைபக்தி மிக்கவன் ஆதலால் நடனப் பயிற்சி பெற்ற நேரம் போக எஞ்சிய நேரத்தை வேங்கடமுடையான் கோவிலில் கழித்தான் ரகுநாதன். கோவிலைப் பற்றியும் அங்கு நடைபெறும் திருப்பணிகள் பற்றியும் முழுமையாக அறிந்து கொண்டான்.

கோவிலின் கிழக்கு வாயிலில் கிருஷ்ணதேவராயர் தமது பத்தினிகளுடன் காட்சி தருகிறார். அடுத்த மகாமண்டபம் திருப்புல்லாணி தாசர் என்ற தேசாந்திரி ஒருவரது திருப்பணியால் உருவான மண்டபம். பதினான்காம் நூற்றாண்டில் சேது நாட்டின் திருப்புல்லாணியைச் சேர்ந்த யாரோ ஒரு சாதாரண குடிமகன் வடக்கே வேங்கட மலையில் வந்து திருப்பணி செய்திருக்கிறார் என்று எண்ணும் போதே மயிர்க்கூச்செறிந்தது. அந்த மண்டபத்தில் நுழையும் போதெல்லாம் சொல்லொணா ஒரு இன்பம் ரகுநாதனின் மனதில் ஏற்படும்.

கோவிலின் உள்ளே ஒலிக்கும் ஆழ்வார்களின் பாசுரங்களும் ரகுநாதனை மெய்மறக்கச் செய்தன. மூன்று ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டு பரதத்தைக் கற்றுத் தேர்ந்து விட்டான். ஆசானின் வாயால்
“பரத நாடகப் பிரவீணா” என்ற பட்டம் பெற்று நிறைந்த மனதோடு ஊர் திரும்பினான்.

அவன் வந்த நேரத்தில் அவனது தந்தை போர்க்களம் கண்டு மாண்டு போய்விட்டார், தாயும் தந்தையுடன் சென்று விட்டாள். சேது நாட்டின் மன்னரைச் சிறைப்பிடித்துச் சென்று விட்டார்கள். கலவரம் செய்வதற்கென்றே பிறந்த தம்பித் தேவர் சேதுபதியாக முடிசூட்டிக் கொண்டார். காளையார் கோவிலைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்த ஆரம்பித்தார்.

ஆனால் அவரைச் சேதுபதியாக ஏற்க மக்கள் மறுத்தனர். மறவர் சீமையில் குழப்பங்களும் கலகங்களும் ஏற்பட்டு பெரும் சீரழிவுக்கு வழி வகுத்தது.
மக்கள் கிளர்ச்சி மட்டுமே அல்லாது கள்ளர் சஞ்சாரம் அதிகமாகிவிட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே பயப்படும் நிலை ஏற்பட்டது. இராமேஸ்வரம் செல்லும் யாத்ரீகர்கள் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு பொருளை இழந்ததோடு மட்டும் அல்லாமல் உடலில் காயமும் ஏற்பட்டு அவதிப்பட்டனர்.‌

சடைக்கன் சேதுபதியால் வாரிசு என்று அறிவிக்கப்பட்ட திருமலை ரகுநாத தேவனும் அவனது சகோதரர்களான தனுக்காத்த தேவர் மற்றும் நாராயண தேவர் ஆகியோரோடு இணைந்து தம்பித்தேவரை எதிர்த்து நின்றான்.

மொத்தத்தில் மறவர் சீமையில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் திருமலை நாயக்கரின் முன் போய் நின்றான் தம்பித் தேவன்.

*****

மதுரை, சொர்க்க விலாசம் அரண்மனை. திருமலை நாயக்கரும் அவருடைய அரசவையின் அலுவலர் ஒருவரும் முக்கியமான ஆலோசனை ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அரண்மனை காவலாளி ஒருவர் வந்து காளையார் கோவிலில் இருந்து தம்பித் தேவர் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

“அவரை உள்ளே வரச் சொல்” என்று நாயக்கர் உத்தரவளித்தார். சில நொடிகளிலேயே தம்பித் தேவன் உள்ளே வந்து திருமலை நாயக்கரை வணங்கி நின்றான்.

“வாருங்கள் தம்பித் தேவரே. இப்படி அவசரமாக வரும் அளவுக்கு என்ன நடந்து விட்டது” என்று நிதானமாக விசாரித்தார் நாயக்கர். அவரது ஒற்றர்கள் மூலமாக சேது நாட்டில் நடக்கும் அராஜகங்களை அவர் அறிந்தே இருந்தார். இராமப்பையனின் பேச்சைக் கேட்டு சேது நாட்டின் மீது நடவடிக்கை எடுத்தது தவறு என்று அவரது மனசாட்சியே அவரைக் குறை சொல்லிக் கொண்டிருந்தது.

இடைப்பட்ட காலத்தில் இராமப்பையன் மரணித்திருக்க அந்தக் குற்ற உணர்வு நாயக்கரை விட்டு அகலவே இல்லை. சடைக்கன் சேதுபதியை விடுதலை செய்துவிடலாம் என்று முடிவுக்கு அவர் வந்திருந்தார். இந்த வேளையில் தான் தம்பித்தேவனின் வருகை நிகழ்ந்தது.

“பொறுமை காக்குமாறு தாங்கள் ஓலை அனுப்பி இருந்தீர்கள் மகாராஜா. ஆனால் மறவர் சீமை மக்களின் பொறுமை எல்லாம் காற்றில் போய்விட்டதே. நிலைமை கைமீறிப் போய்க்கொண்டு இருக்கிறதே.”

“வேறு வழியில்லை தம்பித் தேவரே! தற்போதைய சூழலில் சடைக்கன் தேவரை விடுதலை செய்வது ஒன்றே எனக்கு உசிதமாகப் படுகிறது. அவரைச் சேதுபதியாக ஆட்சியில் அமர்த்திவிட்டால் மறவர் சீமை பழைய நிலைக்குத் திரும்பிவிடும். இது தங்களுக்கும் தெரியும்.”

“ஆனாலும் மகாராஜா, எனது உரிமையை நான் எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? காலஞ்சென்ற சேதுபதியின் மைந்தன் என்ற முறையில் ஆட்சியில் அமரத் தகுதியானவன் நான் தானே” அப்போதும் விடுவேனா என்று வாதாடினார் தம்பித் தேவன்.

“என் வாயால் உமது பிறப்பு பற்றிய விஷயத்தைப் பேச விரும்பவில்லை தேவரே. நீரே புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். மேலும் அந்த ஆட்சிக்கான உரிமையைத் தங்கள் தகப்பனாரே கொடுக்காத போது மற்றவரிடம் எதிர்பார்ப்பது சரியல்ல” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார் திருமலை நாயக்கர்.

வேறு வழியின்றி வெறும் கையுடன் திரும்பிய தம்பித் தேவர் காளையார் கோவிலில் இருந்து கொண்டார். அருகில் உள்ள சில ஊர்கள் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போதைக்கு அது போதும் என்று நினைத்து விட்டார்.

திருமலை நாயக்கர் உடனடியாக சடைக்கன் சேதுபதியை விடுதலை செய்ய உத்தரவிட்டார். தமது பேரரசின் அங்கமாக இருந்த ஒரு சிற்றரசில் கலகங்களும் கொள்ளை போன்ற சம்பவங்களும் நடப்பதை அவர் விரும்பாததே பிரதானமான காரணமாக இருக்கலாம்.

சிறையிருந்த காலத்தில் சடைக்கன் சேதுபதி இறைவனைத் துதித்து தனது காலத்தைக் கழித்து வந்தார். திடீரென ஒரு நாள் அவரைச் சிறையில் இருந்து வெளியே அழைத்து வந்து ஆடை ஆபரணங்கள் கொடுத்து அணியச் செய்தார்கள்.

அவரை அரண்மனைக்கு அழைத்து வரச் செய்து ராஜ மரியாதையுடன் “ராமநாத சுவாமி நல்ல பெருந்தீவில் சென்றிருங்காண்” என்று விடை கொடுத்து அனுப்பி வைத்தார் திருமலை நாயக்கர். விடைபெற்ற சேதுபதி மீனாட்சி சொக்கேஸ்வரரே துணையென்று வணங்கி விடைபெற்று தமது நாட்டுக்குத் திரும்பி வந்தார்.

சடைக்கன் தேவர் மீண்டும் மறவர் சீமையின் மன்னராகப் பொறுப்பேற்றதும் நாட்டில் அமைதி நிலவியது. இராமநாதபுரத்தில் இருந்து ஆட்சி செய்த சடைக்கன் சேதுபதி பல தெய்வீகத் திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பல கோவில்களுக்கு ஊர்களை மான்யமாக வழங்கி இருக்கிறார். இராமநாதபுரம் கோட்டைக்குள் சொக்கநாதருக்கு ஆலயம் ஒன்றைக் கட்டி முடித்தார்.

தமது முன்னோர் வகுத்த வழியில் தானும் இராமேஸ்வரம் கோவிலின் இராஜகோபுரத்தை நிர்மாணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்ட கோபுரத்தில் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கின.

இந்தத் திருப்பணிக்காக பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் வருவாய் அனைத்தும் பயன்படுத்தி வந்தார். ஆனால் அந்தத் திருப்பணி நிறைவு பெறும் முன்பே சடைக்கன் சேதுபதி காலமானார்.

சேது நாட்டில் மீண்டும் ஒரு வாரிசுரிமைப் பிரச்சினை தலைதூக்கியது. ரகுநாதனை, சடைக்கன் சேதுபதியே வாரிசு என அறிவித்திருக்க அவரது தமையன் தனுக்கத் தேவருக்கே சேதுபதியாகும் உரிமை இருப்பதாக ஒரு சாரார் கருத்து தெரிவித்தனர். சடைக்கன் சேதுபதியின் மகளைத் தனுக்கன் தேவர் மணந்து கொண்டிருந்தார்.

தம்பித் தேவன் மறுபடியும் மறவர் சீமையில் ஆங்காங்கே சிறு கலகங்களை ஏற்படுத்தினான். மீண்டும் ஒரு முறை திருமலை நாயக்கரை அணுகித் தனக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

“ஆளாளுக்கு மன்னர் பதவிக்கு ஆசைப்படும் போது சேதுபதி மன்னரின் மகனாகிய நான் எப்படி சும்மா இருக்க முடியும் மகாராஜா?” என்று தம்பித் தேவர் திருமலை நாயக்கர் முன் போய் நின்றார்.

“தாங்கள் சேதுபதியின் தனயன் இல்லை என்று இங்கே யாரும் கூறவில்லை தேவரே? தங்கள் தாயார் செம்பி நாட்டுப் பெண் அல்ல என்பது தான் எதிர் தரப்பினரின் வாதம். யாம் முன்பே சொன்னது போலத் தங்கள் தந்தையே தங்களது உரிமையை நிலைநாட்டவில்லை. அதனை நாம் எப்படிச் செய்வது என்பது தான் குழப்பம். முயற்சித்துப் பார்ப்போம்.”

“மகாராஜா எனக்காக முயற்சிக்கிறீர்கள் என்று நான் நன்றாக அறிவேன். அதனைச் செயல்படுத்த வேளை இப்போது வந்துள்ளது என்பதை நினைவூட்டவே நான் இங்கு வந்தேன்.”

“இப்படி உமது பேச்சை நம்பித் தான் முன்னொரு காலம் பெரும் படையை சேது நாட்டிற்கு அனுப்பி வைத்தேன். பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டதோடு தளவாய் இராமப்பையனும் போரில் வெற்றி பெற்றதுடன் மரணமுற்றார். இந்த முறை சற்று நிதானித்தே செயல்பட வேண்டும். இன்னும் இரு தினங்களில் தூதுவரை அனுப்பி எதிர்தரப்பினரிடம் ஆலோசித்து வரச் செய்கிறேன். அதன் பிறகு தக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.”

நாயக்கரின் இந்த வார்த்தைகளில் தம்பித் தேவனுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. இருக்கையில் இருந்து எழுந்து கிளம்புவதற்கு உத்தரவு கேட்டான்.

“பகலுணவுக்கான நேரமாகிவிட்டது. உணவை இங்கு முடித்து விட்டுப் புறப்படுங்கள்” என்று சொல்லி அங்கே இருந்த செயலரிடம் தம்பித் தேவனை உணவுக்கூடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார்.

ஏற்கனவே மறவர் சீமையினைத் தனதாக்கிக் கொள்ள முயற்சித்த திருமலை நாயக்கர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் சேது நாட்டின் அரசியலில் தலையிட்டார். தனது செய்தியுடன் தூதுவரை சேது நாட்டிற்கு அனுப்பி வைத்தார். அந்தத் தூதுவர் இராமநாதபுரம் கோட்டைக்குச் சென்று அரச குடும்பத்தினரையும் முக்கியப் பிரமுகர்களையும் கலந்து ஆலோசித்தார்.

ஏற்கனவே அவர்களால் புறக்கணிக்கப்பட்ட தம்பித் தேவனுக்கு வாரிசுரிமையை அளிப்பது தான் நியாயமானதாக இருக்கும் என்று அவர் எடுத்துரைக்க அவையில் ஒரு அமைதியின்மை ஏற்பட்டது. அரண்மனை பெரியவர்கள் இரண்டு காரணங்களுக்காக ரகுநாதனை ஆதரித்தனர்.

முதல் காரணம், காலம் சென்ற சடைக்கன் சேதுபதியே ரகுநாதனை வாரிசு என்று முறையாக அறிவித்திருந்தார். இரணாடாவதாக சேது நாட்டினனைக் கட்டிக் காக்கும் தகுதி திருமலை ரகுநாத தேவனுக்குத் தான் உள்ளது என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.

இவற்றை தூதுவர் மூலம் கேட்டறிந்த திருமலை நாயக்கர் மூன்று தரப்பினருக்கும் ஏற்புடைய வகையில் ஒரு திட்டத்தை உருவாக்கி அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு செய்தார்.

*******
போகலூர் அரண்மனை அன்று சூர்யோதயத்தில் இருந்தே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

மறவர் சீமையை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்விக்கு இன்று விடை தெரிந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் அவையில் காத்திருந்தனர்.

தம்பித் தேவரது முகத்தில் நினைத்ததைச் சாதித்து விட்டோம் என்ற பெருமிதம் தெரிந்தது. தன்னை மன்னராக அங்கீகாரம் செய்யாத பெருமக்களை இனி என்னென்ன செய்யலாம் என்று யோசனை செய்யத் தொடங்கினான்.

திருமலை நாயக்கரின் தூதுவன் அவரது முடிவினை அறிவிக்கும் ஓலையுடன் வந்து சேர்ந்தான்.

“அவையில் கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். இதோ மகாராஜா திருமலை நாயக்கரின் ஓலை. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மகாராஜாவின் ஆணை” என்று ஓலையைப் பிரித்துப் படித்தான்.

தொன்று தொட்டு மறவர் சீமையில் சேதுபதி பட்டத்திற்கு ஆசைப்படுவார்கள் யாரும் செய்யாத ஒரு செயலை அவர் முன்மொழிந்து இருந்தார். அது தான் நாட்டின் பிரிவினைத் திட்டம்.

அதன் படியே ஏற்கனவே காளையார் கோவில் பகுதியைத் தன் வசம் வைத்திருந்த தம்பித் தேவருக்கு அந்தப் பகுதியினை ஆளும் உரிமையினையும், தனுக்காத்த தேவருக்கு சேதுநாட்டின் வடகிழக்குப் பகுதியான அஞ்சுகோட்டை பகுதியையும், திருமலை ரெகுநாதத் தேவர் இராமநாதபுரம் கோட்டை உள்ளிட்ட தென் பகுதியையும் ஆள வேண்டும் என்பதுதான் திருமலை நாயக்கரது தீர்ப்பு ஆணைத் திட்டம். வலிமையுடனும், ஐக்கியத்துடனும் ஒன்றுபட்ட சேதுநாட்டை இந்த மூன்று பகுதிகளாகப் பிரிவினை செய்வதன் மூலம் திருமலை நாயக்க மன்னரது இரகசிய திட்டத்திற்கு ஏற்ப இந்தப் பிரிவினை அமைந்தது.

மிகவும் சுயநலமாகத் தோன்றினாலும், இராமேஸ்வரம் போரினால் பலத்த பொருளாதாரச் சிதைவும் பொதுமக்களுக்குப் பலவிதமான சிரமங்களும் ஏற்பட்டிருந்த நிலையில் மேலும் இரத்தக்களரியையும், குழப்பத்தையும் தவிர்க்கும் வகையில் திருமலை நாயக்க மன்னரது தீர்ப்பினை மூவரும் ஏற்றுக்கொண்டனர். முறையே காளையார் கோவிலிலும், அஞ்சுக்கோட்டையிலும். போகலூரிலும் தங்களது ஆட்சியினை அந்த மூவரும் தொடங்கினார்கள்.

சேதுபதி மன்னர்‌ பட்டமேற்கும்‌ பொழுது திருக்கோவில்‌ களிலிருந்து தீர்த்தம்‌, பிரசாதம்‌ போன்றவைகளை பெற்றுக்‌கொள்வது மரபாகும்‌. அந்த முறையில்‌ போகலூரில் ஆட்சிப் பொறுப்பேற்ற ரகுநாத சேதுபதியும்‌ இராமேஸ்வரம் திருக்கோயிலிலிருந்து பிரசாதம்‌ முதலியவற்றுடன்‌ அரச சின்னங்களான குடை உபய சாமரம்‌, காவிடால்‌, காவிபண்ணாகம்‌, காவிக்கூடாரம்‌, ஆகியவைகளை ஸ்ரீராமநாதசுவாமியே அவைகளை அனுப்பியிருப்பதாக பயபக்தியுடன்‌ ஏற்றுக்‌ கொண்டார்.

திருமலை நாயக்க மன்னருக்கு ஏமாற்றம் தரும் வகையில் சேதுநாட்டில் அரசியல் நிகழ்ச்சிகள் அமைந்தன. மறவர் சீமை இந்தப் பிரிவினையால் வலுவிழந்து போகும் என்பது அவரது கணிப்பு. அதனால் மறவர்களால் மதுரைக்கு ஆபத்து ஏற்படும் நிலையோ அல்லது மதுரை அரசர் மறவரின் வலிமையை நம்பி இருக்க வேண்டிய நிலையோ இனிமேல் இருக்கக் கூடாது என்று தான் பிரிவினைத் திட்டம் போட்டார். ஆனால் அவரது திட்டத்தை மாற்றிக் காலம் வேறு திட்டம் வகுத்து விட்டது.

சேதுபதியாக வேண்டும் என்று நீண்ட காலம் கனவு கண்ட தம்பித் தேவனை காளையார் கோவிலில் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே இறைவன் அழைத்துக் கொண்டான். அஞ்சுக்கோட்டையில் தனுக்காத்தத் தேவரும் சில மாதங்களிலேயே காலமானார்.

இருவருக்கும் உரிய வாரிசுகள் இல்லாத காரணத்தினால் திருமலை ரகுநாத சேதுபதி அந்த இரு பகுதிகளையும் இணைத்து பழைய சேது சீமையாக மாற்றினார்.


திருமலை நாயக்கர் எதிர்பார்த்தபடி பூசல் குழப்பம் எதுவும் இல்லாமல் திருமலை ரகுநாத சேதுபதியின் கீழ் மிகுந்த வல்லமையுடன் திகழ்ந்தது சேது நாடு.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -3
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
77
அருமை. மனிதன் நினைப்பது ஒன்று. கடவுள் கொடுப்பது ஒன்று. எப்படியோ சேது நாடு மீண்டும் ஒன்றாகி விட்டது. 💖
 
Top Bottom