• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அறிவோம்! அரவணைப்போம்!!

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
366
அறிவோம்! அரவணைப்போம்!!


'என் வாழ்வே நான் கூறும் செய்தி' என்று கூறிய நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி தன் வாழ்வின் மூலம் நமக்காகப் பல செய்திகளை விட்டுச் சென்றிருக்கிறார். தொழுநோயாளிகளின் கவனிப்பும் அதில் ஒன்று. ஒரு முறை காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம் தொடர்பாக ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் சில நபர்கள் கூட்டத்தினருடன் அமராமல் தனியே ஒதுங்கி நின்று அவர் பேசியதைக் கவனித்தனர். அருகில் அழைத்தும் அவர்கள் வரவில்லை. கூட்டம் முடிந்ததும் காந்திஜியே அவர்கள் அருகில் சென்று பேச, அவர்கள், 'நாங்கள் தொழுநோயாளிகள், எங்கள் அருகில் வராதீர்கள்' என்று கூறியிருக்கிறார்கள். அவர்களது வீடு இருப்பிடம் குறித்து காந்திஜி விசாரிக்க, "நாங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக பாழடைந்த கட்டிடங்களில் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு எந்த சிகிச்சை வசதியோ, தண்ணீர் உணவு வசதியோ இல்லை. ஊர் மக்களின் வீடுகளில், விழாக்களில் மீதமாகி வீசப்படுவதை சாப்பிட்டு எங்கள் இறுதி நாட்களை எண்ணி வருகிறோம்" என்று கூறியிருக்கிறார்கள். அன்று முதலே காந்தியடிகளின் இதயம் தொழு நோயாளிகளுக்காகவும் துடிக்க ஆரம்பித்து விட்டது. அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பராமரிக்க உதவியிருக்கிறார்.

அதன்பின் இந்தியாவிற்கு வந்து பல போராட்டங்களில் பங்கு பெற்று சிறைக்குச் சென்றபோது, அதே சிறையில் சாஸ்திரி என்ற நன்கு கற்றுணர்ந்த ஒரு சுதந்திர போராட்ட தியாகி தொழுநோய் காரணமாக தனிமையில் அடைக்கப்பட்ட தகவல் தெரிந்து அவரை நேரில் சென்று பார்த்திருக்கிறார். அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்திருக்கிறார். பின் இருவரும் சிறையில் இருந்து விடுதலையான பிறகு தனது ஆசிரமத்தில் சாஸ்திரிக்கு முக்கியமானதொரு இடம் கொடுத்திருக்கிறார். பல பிரசங்கங்களில் சாஸ்திரியைப் பேச வைத்திருக்கிறார். தொழுநோய், தொட்டால் உடனடியாக ஒட்டிக் கொள்ளும் நோய் இல்லை என்பதை அவர் கூறிய பின்னரே பல மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

ஆண்டுதோறும் அவருடைய நினைவு தினமான ஜனவரி 30ம் தேதியை தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரித்து வருகிறோம். இப்பொழுது அந்தத் தேதியை ஒட்டி இரண்டு வார காலங்களுக்கு நாடு முழுவதும் 'தொழுநோய் ஒழிப்பு இருவார விழா' (SPARSH leprosy campaign) அனுசரிக்கப்படுகிறது. அதில் தொழுநோய் விழிப்புணர்வு தொடர்பான பேரணிகள், நோய் கண்டறிதல், குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி, விளையாட்டுப்போட்டிகள் போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக முக்கியமான விஷயம், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜனவரி 30 அன்று அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராம சபா கூட்டங்களை ஏற்பாடு செய்து அதில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, தொழுநோயாளிகளை நேரில் அழைத்து கௌரவிக்கிறார்கள்.

விழிப்புணர்வு அளிப்பதும், கண்டுபிடிக்கப்படாமல் சமூகத்தில் இருக்கும் தொழு நோயாளிகளை விரைவில் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதும் தான் இத்தகைய நிகழ்ச்சிகளின் நோக்கம்.

1940களில் தான் தொழுநோய்க்கு டாப்ஸோன் (Dapsone) என்ற மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்ப நிலையில் உள்ள நோயாளிகளை அந்த மாத்திரையால் முழுவதுமாக குணப்படுத்த முடிந்தது. சுதந்திரத்திற்குப் பின் 1955இல் நேஷனல் லெப்ரசி கண்ட்ரோல் ப்ரோக்ராம் (NLCP) என்ற பெயரில் தொழு நோயை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் தொடங்கப்பட்டு இந்த மாத்திரை அனைத்து நோயாளிகளுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் இந்த மாத்திரையால் வியாதியை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர் ஆராய்ச்சிகளால் 1982 இல் Rifampicin, Clofazamine, Dapsone அடங்கிய கூட்டு மருந்து சிகிச்சை தொழுநோய்க்கு மிகவும் சிறப்பாக வேலை செய்வதை கண்டுபிடித்தார்கள். அதன்பின் NLCP திட்டத்தை தொழுநோய்சிகிச்சைக்கு மட்டும் என்றில்லாமல் ஒழிப்புக்காகவும் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நேஷனல் லெப்ரசி எராடிகேஷன் ப்ரோக்ராம் (NLEP) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1983ல் இந்தியாவில் பத்தாயிரம் மக்கள் தொகைக்கு 57 தொழுநோயாளிகள் என்று இருந்த எண்ணிக்கை, வெகு வேகமாகக் குறைய ஆரம்பித்து, 2005 டிசம்பரில் 10,000 மக்கள்தொகைக்கு ஒன்றுக்கும் குறைவான (0.95) தொழுநோயாளிகளே இருந்தனர்.

இந்த இலக்கை எட்டுவதற்கு அரசும் களப்பணியாளர்களும் கொடுத்த உழைப்பு அபரிமிதமானது. தற்சமயம் இந்தத் திட்டம் நான்கு முக்கிய நோக்கங்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
* யாரையும் தொழுநோயின் பெயரால் ஒதுக்காமல் இருப்பது.

* தொழுநோய்ப் பரவலை முழுவதுமாகத் தடுப்பது.

* தொழுநோயால் ஏற்படும் நிரந்தர ஊனங்களை முழுவதுமாகத் தடுப்பது

*குழந்தைகள் மத்தியில் ஊனத்தைத் தடுப்பதில் சிறப்பு கவனம் அளிப்பது.

புதிய தொழுநோயாளிகளின் எண்ணிக்கையை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதால் அரசு பட்ஜெட்டில் விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வுக்காக அதிகத் தொகையை ஒதுக்கியுள்ளது. அரசுடன் இணைந்து தொண்டு நிறுவனங்களும் இந்தப் பணிகளைச் செய்கின்றன.

தொழுநோயால் பாதித்தவர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் படிப்பதற்கென்றே ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சிகளையும் தொண்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்தத் தொண்டு நிறுவனங்களில் டேமியன் பவுண்டேஷனுக்கு முக்கியப் பங்குண்டு. தமிழகத்தில் மட்டும் 14 மாவட்டங்களை இந்த அமைப்பு தத்தெடுத்துள்ளது. அதிலுள்ள அனைத்து தொழு நோயாளிகளுக்கும் வீட்டிலேயே சென்று சிகிச்சை அளிப்பது, தொழுநோயாளிகளுக்கான பிரத்தியேக செருப்புகள், ஊன்றுகோல்கள் போன்றவற்றை வழங்குவது, வேலை வாய்ப்பிற்கான தையல் இயந்திரங்கள் வழங்குதல், பெட்டிக்கடை போன்ற சிறுதொழில் அமைத்துத் தருவது, வீடு கட்டித் தருவது போன்ற பணிகளைச் செய்து வருகிறது.

இவை தவிர, மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு தொழுநோய் தொடர்பான புத்தாக்கப் பயிற்சிகளும் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இத்தகைய புத்தாக்கப் பயிற்சிகள் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை என் தோழியும் எங்கள் மாவட்டத் தொழுநோய் பிரிவின் துணை இயக்குனருமான மருத்துவர் ஆஷா கூறிய ஒரு விஷயத்தின் மூலம் அறியலாம். நன்கு படித்து வேலையில் இருக்கும் இளைஞர். இன்னும் திருமணமாகாதவர். அவருக்கு சில மாதங்களாக ஒரு தொந்தரவு. 'காலில் செருப்பு நிற்க மாட்டேன் என்கிறது. செருப்புப் போட்டு நடக்கும் போது செருப்பு அவிழ்ந்து விழுந்து விடுகிறது' இது ஒன்றுதான் அவருடைய அறிகுறி. பல்வேறு மருத்துவர்களைப் பார்க்கிறார், பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் படுகிறார், அந்தப் பிரச்சனையை அவரால் சரி செய்யவே முடியவில்லை. ஒரு காலில் ஆரம்பித்த பிரச்சனை இரண்டு கால்களுக்கும் வருகிறது. அதன்பின் கண்களை மூடித் திறப்பதிலும் சிறு பிரச்சனை வருகிறது. அந்த நேரத்தில் எதேச்சையாக ஓய்வுபெற்ற தொழுநோய் பிரிவின் களப்பணியாளர் ஒருவரை அந்த இளைஞர் சந்திக்க நேரிட, அவர்தான் இந்த இரண்டும் நரம்பியல் காரணங்களால் வருபவை, அந்த நரம்பியல் காரணத்துக்கு தொழுநோய் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற தன் சந்தேகத்தை எழுப்புகிறார்.

அதன்பின் அவரது தோல் மற்றும் நரம்பில் இருந்து திசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு தொழுநோய் இருப்பது உறுதியாகி இருக்கிறது. தோலில் எந்தவிதத் தேமலும் இல்லாமல் நரம்பை மட்டுமே பாதிக்கும் தொழுநோயின் ஒரு வகை (Pure neuritic type of leprosy) தான் அவருக்கு வந்திருக்கிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் இந்த வகையிலான நோயாளிகளை அதிகம் காணலாம். சற்றுத் தாமதமாகி விட்டாலும் நல்லவேளையாக அதற்கு மேல் வேறு எந்த நரம்பையும் பாதிக்கும் முன் அந்த இளைஞருக்கு கூட்டு மருந்து சிகிச்சை கொடுத்து, சிறு அறுவை சிகிச்சை செய்து குணமாகி விட்டார்.

இன்னொரு நோயாளி. இவர் மாதக்கணக்காகக் காய்ச்சலால் அவதிப்பட்டிருக்கிறார். காய்ச்சலுக்குரிய எல்லா பரிசோதனைகளும் செய்யப்பட்டும் பலன் இல்லை கடைசியாக பெரிய மருத்துவமனை ஒன்றில் உள்நோயாளியாகச் சேர்ந்து, சில மருந்துகள் அவருக்கு வழங்கப்படுகின்றன. அதன் பின் தோலில் அரிப்பு, தடிப்பு போன்றவை ஏற்படுகின்றன. அது மருந்தின் ஒவ்வாமை காரணமாக இருக்கலாம் என்று நினைத்து தோல் மருத்துவர் வரவழைக்கப்பட்டிருக்கிறார். அந்தத் தோல் மருத்துவருக்கு இது தொழுநோயின் ஒரு பக்க விளைவாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அவரது சந்தேகம் திசு பரிசோதனை மூலம் உறுதி செய்யவும் படுகிறது. தொழுநோய் சிகிச்சை எடுப்பவர்களுக்கும், சில சமயம் நல்ல எதிர்பாற்றல் உடையவர்களுக்கும் தொழுநோய்க் கிருமிகள் உடலுக்குள் மரணித்து (dead bacteria) ரத்தத்தில் கலப்பதால் சில சமயங்களில் காய்ச்சல் ஏற்படும் (Lepra reaction). அதுவே இந்த நபருக்கும் ஏற்பட்டிருக்கிறது. வித்தியாசமான அறிகுறியால் கண்டறிவது தாமதமாகிவிட்டது. மூளை அறியாத விஷயத்தை கண்களால் பார்க்க முடியாது என்பார்கள்(What your mind does not know, your eyes will not see). அதனால் தொடர் கல்வி இயக்கம் மருத்துவக் கல்விக்கு, குறிப்பாக தொழுநோய் போன்ற நோய்க்கு மிக முக்கியம்.

சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலையை விட இன்றைய நிலை எவ்வளவோ மேல். இருந்தாலும் இன்றளவும் உலகின் மொத்த தொழுநோயாளிகளில் 66 சதவீதம் பேர் இந்தியாவில் தான் இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. இந்த எண்ணிக்கையை மேலும் குறைத்து, நம் நாட்டை தொழுநோய் இல்லாத நாடாக மாற்றுவதும், தொழுநோயாளிகளை அரவணைத்து புதுவாழ்வுக்கு வழிகாட்டுவதும் நம்
அனைவர் கைகளிலும் இருக்கிறது.
 

Author: SudhaSri
Article Title: அறிவோம்! அரவணைப்போம்!!
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom