• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

திருமலை ரகுநாத சேதுபதி - முன்னுரை

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
366
சேது நாட்டின் வரலாறு



பாண்டியர்களின் கிழக்கு எல்லையான இராமநாதபுரம் பகுதி மறவர் சீமை என்றும் சேது நாடு என்றும் நெடுங்காலமாக அழைக்கப்பட்டு வந்தது. மறவர் இன மக்களின் ஏழு பிரிவுகளில் செம்பிநாட்டு மறவர்கள் தான் சேதுபதிகள் என்ற சிறப்புப் பெயரோடு ராமநாதபுரத்தை ஆண்டு வந்துள்ளனர். இவர்களைப் பற்றிய பூர்வீகமும் ஆட்சி பற்றிய விவரங்களும் வரலாற்றில் தெளிவாக இடம் பெறவில்லை. இவர்களது பூர்வீகம் பற்றிப் பல்வேறு கதைகள் உலா வருகின்றன.



இராமேஸ்வரத்தில் ராமபிரானால் கட்டப்பட்ட சேது இங்கே அமைந்திருப்பதாலும் மறவர்கள் மிகுதியாக வாழும் பகுதி என்பதாலும் இத்தகைய பெயர்கள் வந்திருக்கலாம் என்று ஒரு செய்தி உண்டு.‌ ராமன் அயோத்தி திரும்பும் முன் அங்கு வாழ்ந்த மறவர் இனத்தவரை சேதுவைக் காக்க நியமித்தார் என்றும் சொல்வதுண்டு.



மற்றொரு செய்தி, சேதுபதிகள் திருமலை நாயக்கரால் நியமிக்கப்பட்டவர்கள் என்கிறது. இராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்கு கள்ளர்களால் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க திருமலை நாயக்கர் அவரது படைத் தலைவர்களில் ஒருவரான உடையாத் தேவரை நியமித்தார் என்றும் அவரது வழி வந்தவர்கள் தான் சேதுபதி மன்னர்கள் என்கிறது அச்செய்தி.



சோழப் பேரரசர்களான ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் இலங்கை சென்ற போது அவர்களின் படைத் தலைவர்களில் ஒருவரை ராமநாதபுரம் பகுதிக்குப் பொறுப்பாளராக நியமித்தார்கள் எனவும் செய்தி நிலவுகிறது.



பூர்வீகம் எப்படி இருந்தாலும், சேதுபதி மன்னர்கள் பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஆட்சி செய்த மன்னர்கள் என்பது நிச்சயம். இவர்கள் 15ஆம் நூற்றாண்டில் இருந்து ஆட்சியாளராக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.



இந்தச் செய்தியை 15ஆம் நூற்றாண்டு இலக்கியமான யாழ்ப்பாணம் முத்து ராஜக் கவிராயருடைய கைலாய மாலை உறுதி செய்கிறது. அது சொல்லும் விஷயம் என்னவென்றால், யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் கைலாசநாதருக்குக் கோவில் அமைத்த போது அங்கிருந்த மன்னர் சேதுபதி மன்னரைத் தொடர்பு கொண்டுள்ளார். அவரது வேண்டுகோளின் படி சேதுபதி மன்னர் கோவிலில் பூஜை செய்ய இங்கிருந்து ஆகமங்களில் தேர்ந்த பிராமண சிரேஷ்டர்களை அனுப்பி வைத்துள்ளார்



“அந்தணரு எளாய்ந்தில் சனுப்பு மெனச--செந்திருவார்சேது பதிக்குச் செழும்பா சுரமனுப்பியாதிமறை யோர்கள்புக மாகிரியன் --வேதமுணர்கங்கா தரனெனும்போ்க் காசிநக ரோனையினி திங்கே யவனனுப்ப” கண்ணி 234



இவ்வடிகளில் வரும் அச்சேதுபதி என்பது இராமநாதபுரத்து மன்னராகிய சேதுபதியையே குறிக்கிறது.



பதினாறாம் நூற்றாண்டு வரையும் யாழ்ப்பாணத்து அரசர்களாகிய சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளே இராமேஸ்வரம் முதலிய இடங்களுக்குஅரசர்களாய் இருந்தது மட்டும் இன்றி “சேது காவலன்” என்னும் பட்டமும் தரித்து “சேது” என்னும் சொற்பொறித்த இலச்சினை முத்திரையும் வழங்கி வந்தார்களென்றும் தெரிய வருகிறது.

மகாவித்துவான் சிங்கை செகராசசேகரன் எழுதிய தக்ஷிண கைலாச புராணம் என்னும் நூலில் வரும் “சிங்காசாரியன் சேதுகாவலன்” ,“சிங்கையாதிபன் சேதுகாவலன்” போன்ற உவமைகள் யாழ்ப்பாண அரசரைக் குறிக்கும் அதே நேரத்தில் அவரை சேது காவலன் என்கிறது.



பதினாறாம் நூற்றாண்டில் அவர்களது வலிமை குன்றிய பிறகே செம்பிநாட்டு மறவர்கள் தலையெடுத்திருக்கலாம் என்கிறது இந்தச் செய்தி.



சேதுபதி மன்னர்களது செப்பேடுகளில் இருந்து இவர்கள் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் படைத் தலைவர்களாக இருந்த பிறகு சேது நாட்டிற்கு வந்தவர்கள் என்று அறிய முடிகிறது.‌



பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியருக்கும், நாயக்கர் படை மற்றும் சேது மன்னரின் படைக்கும் இடையே வேதாளை கிராமத்தில் நடந்த போர் சேதுபதிகளின் ஆட்சியை உறுதி படுத்துகிறது.



தொன்று தொட்டு மதுரையை ஆண்ட பாண்டியர்களை வீழ்த்த ஆட்சிக்கு வந்த விசுவநாத நாயக்கர் தமிழகம் முழுவதும் இருந்த சிற்றரசர்கள் பலரையும் வீழ்த்தி அவரின் கீழ் இருக்கச் செய்தார். அதே போல அன்று மறவர் சீமையை ஆட்சி செய்த ஜெயதுங்க தேவரைஆட்சியில் இருந்து அகற்றியதோடு இல்லாமல் அவரைக் கொன்றும் விட்டார்.



இதனால் மறவர் சீமையின் நிர்வாகிகள் நிலைகுலைந்து போகலூர் எனும் புத்தூரில் அடைக்கலம் அடைந்தனர். இவர்களது வாரிசான சடைக்கன் சேதுபதி மட்டும் இலங்கையில் தஞ்சம் அடைந்தான். சிறிது காலம் கடந்த பிறகு மறவர் சீமையில் தனது ஆட்சியை நிறுவினான். இதனை உறுதிப்படுத்தும் வகையில் வரலாற்று செய்தி ஒன்று இருக்கிறது.



இவருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் மறவர் சீமையைக் கைப்பற்றும் வரையில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு சேதுபதி மன்னர்கள் சிறப்பாக ஆட்சி செய்துள்ளனர். சேதுச்சீமையின் முதல் மன்னரான சடைக்கன் சேதுபதி உடையான் ரகுநாத சேதுபதி காத்த தேவர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்.



இவர் மதுரை நாயக்க மன்னருக்குப் பணிந்து அவருடைய பாளையக்காரர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். இவருக்குப் பின்னர் இவரது முதல் மகனான கூத்தன் சேதுபதி மன்னரானார். இவரது பதினான்கு ஆண்டுகால ஆட்சியில் சேது நாட்டில் சமுதாய, ஆன்மீகப் பணிகள் சிறந்து விளங்கியது என்பதை அவர் வழங்கிய செப்பேடுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.



கார் காலத்தின் மழையை நம்பியே இந்நாட்டின் விவசாயம் இருந்து வந்தது. இந்த மன்னர் அதை மாற்ற முடிவு செய்து பல நீர் ஆதாரங்களை ஏற்படுத்தி உள்ளார். உதாரணமாக இவர் வைகை ஆற்றில் தென்பகுதியில் அமைத்த கால்வாய், இவர் மறைந்து முன்னூறு ஆண்டுகளுக்கு பின்னரும் “கூத்தன் கால்” என்ற பெயருடன் இன்று வரை பயன்பாட்டில் இருக்கிறது. இவரை முன்னோடியாக வைத்து இவருக்குப் பின் வந்த மன்னர்களும் நீர் ஆதாரங்களை பாதுகாத்தனர்.



இந்த மன்னரது ஆட்சியில் இன்னும் ஒரு வியக்கத்தக்க விஷயம் அவரது நிர்வாகம். இராமேஸ்வரம் தீவுப் பகுதியாக இருப்பதால் அங்கு நடைபெறும் குற்றங்களை உடனுக்குடன் விசாரணை செய்து தண்டனை வழங்குவது என்பது போகலூரில் இருக்கும் மன்னருக்கு இயலாத காரியமாக இருந்தது.



அதனால் இறையுணர்வு மிக்க பண்டாரம் நியாயமான முறையில் நடந்து கொள்வார் என்று இராமநாதஸ்வாமி கோவிலின் ஆதீனகர்த்தருக்கு இந்த அதிகாரத்தை வழங்கி உள்ளார். அன்று வரை எந்த மன்னரும் செய்யத் துணியாத காரியம் இது, தனது அதிகாரத்தை ஒரு துறவிக்கு அளிப்பது.



கூத்தன் சேதுபதியைத் தொடர்ந்து பலரும் ஆட்சியில் அமர்ந்து சேது நாட்டை நலமுடன் ஆட்சி செய்தனர். அவர்களுள் கிபி 1645 முதல் 1676 வரை சுமார் 35 நீண்ட ஆண்டுகள் ஆட்சி செய்த திருமலை ரகுநாத சேதுபதி சேது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறார். கொடை, சமுதாயம், வீரம், ஆன்மீகம் மட்டும் அல்லாமல் ஆடல் பாடல் என பல கலைகளிலும் வல்லவராகத் திகழ்ந்து அவற்றுக்கு ஆதரவும் அளித்திருக்கிறார் என்பதற்கு பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

ரகுநாத சேதுபதியின் காலத்தில் பயங்கரமான போர் ஒன்று நடந்ததற்கான சாட்சியாக கல்வெட்டு ஒன்று கிடைத்திருக்கிறது.

பேளூர் பகுதியில் கிடைத்த 6 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட கல்வெட்டின் நாலாபுறங்களிலும் ஏராளமான எழுத்துகள் இருந்தன. அவை 16ஆம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்கள் என அறியப்படுகிறது.

“மீசையுடன் மூக்கறுப்பிச்சே” என் வரிகள் தெளிவாகத் தெரிகிறது. கல்வெட்டின் முதல் பக்கத்திலும், இரண்டாம் பக்கத்திலும் தலா 29 வரிகளும், மூன்றாம் பக்கத்தில் 41 வரிகளும், நான்காம் பக்கத்தில் 32 வரிகளும் பொறிக்கப்பட்டு இருந்தன. மூக்கறுப்புப் போர் பற்றிய தகவல் அடங்கிய முதல் கல்வெட்டு இதுதான்.

மைசூர் நாட்டு மன்னன் கந்தீரவனுக்கும், மதுரை திருமலை நாயக்கருக்கும் இடையே ஏற்பட்ட மூக்கறுப்பு போர் பற்றிய தகவல்கள் அதில் இருந்தன

இந்தப் போர் 1656ம் ஆண்டு நடந்துள்ளதாக, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அப்போது பேளூர் பகுதியில் பாளையக்காரர்கள் ஆட்சி நடத்தி வந்துள்ளனர். அதனால், மூக்கறுப்பு போர் குறித்த கல்வெட்டு, இந்தப் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.



திருமலை ரகுநாத சேதுபதி எவ்வாறு மன்னர் ஆனார் என்றும் அவரது வரலாற்றில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களையும் கற்பனை கலந்து இந்தப் புதினத்தில் காண்போம்.



நன்றி
 

Author: SudhaSri
Article Title: திருமலை ரகுநாத சேதுபதி - முன்னுரை
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom